நம் குரல்

பானுமதியின் உடைமை

முதல் சந்திப்பிலேயே என் கைகளை வந்து கோர்த்துக்கொண்டாள் பானுமதி. ஒரு வெளியூர்ப் பயணத்தின் போது தன் நண்பர் குழுவினருடன் வால்பாறை வந்திருந்தாள். அது எனக்குப் பணி நிமித்தமான பயணம் என்பதால் அவளிடம் நிறைய நேரம் செலவிட முடியவில்லை. மழை தூறத் தொடங்கியதும் நான் புகைப்படக் கருவிகளை அணைத்ததும் மீண்டும் என் அருகில் வந்து பேசத் தொடங்கினாள். அவள் கண்களில் இடையறாத ஒரு குறுகுறுப்பு ஒளிர்ந்து கொண்டேயிருந்தது கருத்த அவளின் தேகத்திற்கு பொலிவும் களையும் சேர்த்துக் கொண்டிருந்தது. ஜீன்ஸ் உடை அவளின் பெருத்த உடலுக்குச் சற்று பொருத்தமின்றி இருந்தாலும் தன் நடை மற்றும் பாவனைகளால் அந்த உடையைத் தனக்குப் பொருத்தமாக்கிக் கொண்டிருந்தாள்.


பொது இடங்களில் ஆண்கள் என்னை வசீகரிப்பதே இல்லை. மாறாக பெண்களின் உடல் மொழிகள் அவர்களின் குணச்சித்திரத்தை எடுத்து இயம்புபவையாக உள்ளன. சிறுமிகளோ கிழவிகளோ இச்சமூகம் தரும் தொடர்ந்த நெருக்கடியில் அவர்களின் இருப்பைப் பாந்தமாக வடிவமைத்துக் கொள்கின்றனர் என்று தோன்றும். அதிலும் அடித்தட்டுப் பெண்களுக்கு இது இன்னும் சவாலாக இருப்பதால் அவர்களின் குணச்சித்திரங்கள் எடுப்பானவையாகவும் கதைத்தன்மையும் புதிர்வெளிகளும் நிறைந்தவையாகவும் இருக்கின்றன. அவர்களின் மொழியும் அவற்றைத் துல்லியமாய் எடுத்தியம்பும் அழகும் ஈடுயிணையில்லாததாக இருக்கின்றன. பானுமதி, நான் நின்று கொண்டிருந்த தாழ்வாரத்திற்கு எதிர்த்திசையிலிருந்து சில கனத்த துளிகள் அவள் தலையை நனைக்க வந்து சேர்ந்தாள்.


‘ஒங்களுக்கு ஆட்சேபணையில்லன்னா ஒரு சிகரெடி பிடிச்சுக்கிறேனே?என்றாள். என் புன்னகையை அவள் நன்றியாக்கிப் புகைக்கத் தொடங்கினாள். சில நீண்ட நிமிடங்கள் இருவருமே பேசாமல் நின்று மழையின் சலசலப்பை அவதானிக்கத் தொடங்கியிருந்தோம். என்னை அடையாளம் கண்ட நிமிடத்திலிருந்து அவளிடம் தென்பட்ட ஒன்று, அவள் என்னிடம் சொல்ல விரும்பியதைச் சொல்லும் வரை என்னை விட்டு விலக மாட்டாள் என்று தோன்றியது. மழை சிறு தூறலாகியதும், புகைப்படக்கருவிகள் இன்ன பிற பொருட்களைப் பாதுகாக்க விரும்பி நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பினோம். சில மீட்டர் தூரத்தில் தான் அறைகள் இருந்தன. பானுமதி, ‘நானும் ஒங்ககூட வருகிறேனே’, என்று கூறிவிட்டு எதிர்த்திசையில் அவளுக்காகக் காத்திருந்த தன் நண்பர்களுக்குக் கையசைத்து விட்டு என்னுடன் அறைக்கு ஓடிவந்தாள். அறையைச் சேரும் முன்னேயே மழை வலுத்திருந்தது.


என் தனித்த அறையில் ஆளுயர கண்ணாடி இருந்தது. அறையில் நுழைந்ததுமே அவளை அந்தக் கண்ணாடி ஆட்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.அந்த அறையில் அவளுடைய அசைவுகள் எல்லாமே அந்தக் கண்ணாடியைக் கருத்தில் கொண்டும் கனவில் கொண்டும்தாமிருந்தன. நான் உடைமாற்றிக் கொண்டு வரும்போதே அரை நிர்வாணத்தில் இருந்தாள். நனைந்த உடைகளை உலர வைக்கும் தருணம் போலும். பொதுவாகவே உடல் சார்ந்த என் பிரக்ஞைகள் ஆராயும் நோக்குக் கொண்டவை. உடல் மீதான கவர்ச்சி எனது மருத்துவ கல்விக்குப் பின் முற்றிலும் மாறிவிட்டது. அதன் நோய்த்தன்மைகள், மருத்துவச்சிக்கல்கள், நம் நாட்டின் மருத்துவத்தரம், பெண்களால் எளிதில் அனுபவிக்க முடியாத ஆரோக்கியம் என்று எனது புரிதல்கள் உடல் என்பதன் பாலிமை ஈர்ப்பை முற்றிலுமாகக் குலைத்துவிட்டன. பானுமதிக்கு என் இருப்பை அசைக்கும் நோக்கம் இல்லை என்பது அன்றைய நாள் முடிகையில் எனக்கு உறுதியானது. பானுமதியின் இயல்பே அப்படித்தான்.


இப்படித்தான் அவளுடைய உரையாடல் தொடங்கியது; ‘நிறைய ஆண்களோட நான் பழகிட்டேன். ஆனாலும் நான் விர்ஜின் தான். ஆம்பிளங்க, பொம்பிளங்க ஒடம்ப மதிக்கிறதுக்கு நாம இன்னும் கத்துக்கொடுக்கவே இல்ல. சமூகம் சொல்லித்தர்ற மாதிரி தான் அவங்க நம்ம ஒடம்புக்கிட்ட நடந்துக்கிறாங்க. மொத தொடுகையே அதுல பிரியம் இல்லாதத சொல்லும் போது எனக்கு எவ்வளவு தேவை இருந்தாலும் நான் அதுக்கு மேல சம்மதிக்கறதே இல்ல’. பெரும்பாலான பெண்கள் இப்படிப் பேசக் கூட வாய்ப்பில்லை தான். ஆனால் உடல் பற்றியும் அதனுடனான தனது மன ஓட்டம் பற்றியும் பானுமதியால் இயல்பாக உண்ணும் உணவைப் போலவே கண்ட காட்சியைப் போலவே பேசமுடியும். அன்று பகல் முழுக்க இரவு விடிய என்னுடன் பேசிக்கொண்டிருந்தாள். இத்தகைய நீண்ட உரையாடல் இரவைத் தின்றது இது தான் முதல் முறையென்று வேண்டும்.


அவள் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. அவ்வப்பொழுது இலக்கியங்களை வாசிப்பாள். அம்பையின் ‘வற்றும் ஏரியின் மீன்கள் வாசித்து விட்டு உடலற்ற நூலாக இருக்கிறது என்றாள். நான் அதை மறுத்தேன், ‘நாம் உடலற்றுத் தானே இருக்கிறோம், பானு என்றேன். ‘இல்லை, என் ஒடம்பப்ப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அதுக்குப் பசிக்கும்போது எப்படி சாப்பிடனும்னு நினைக்கிறேனோ காமத்தின் குரலுக்கும் காது கொடுக்கனும்னு நெனக்கிறேன். நெருங்கிற ஒவ்வொரு ஆம்பிளயும் தனிச்ச உடலோட தான் வராங்க. உடல்களுக்குப் பொதுத்தன்மங்கிறதே இல்லயோன்னு தோணுது. உடம்பப் பத்திய ஒரு நீள பயணமா தான் இந்த வாழ்க்கை. கொழந்தையிலிருந்து கிழவியாக வளர்றது வரைக்கும் ஒடம்போட இருக்குற ஒரு நீண்ட பயணம் என்று ஒரு விரிவுரையே நிகழ்த்தி விட்டாள். நான் அதை இன்னும் நுணுக்கமான விவாதத்திற்குக் கொண்டு செல்லத் தயாரானேன். மீண்டும் ஓர் இரவை முழுவதுமாய் விழுங்கும் விவாதமாக மாறி, ஒரே உடலின் இரு பக்க நியாயங்களைப் பற்றியதாக முடிந்தது. அம்பை எழுத்துக்குள் வைக்கும் உடலும் நவீனத்தின் ஒரு வடிவம் தான். பானு சொல்லும் உடலும் அதன் இன்னொரு பரிணாமம் தான்.



சென்ற வாரம் ஒரு நாள் இரவு ஒரு மணி இருக்கும். ‘நான் என் கன்னிமையை அனுபவிச்சுட்டேன் என்று போனில் கூவினாள். ‘அப்படின்னா..என்று அரைகுறைத் தூக்கத்தில் நான் வினவ, ‘நான் என் கன்னிமையை இழந்துட்டேன்னு சொன்னாத் தான் ஒங்களுக்குப் புரியுமா?என்று செல்லமாகக் கோபப்பட்டாள். ஒடம்புக்கான கனவு தான் இரவு போல. எனக்கு மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. அவளை நினைக்கும்போதெல்லாம் அருகே யாருமின்றியும் எனக்கு நானே சிரித்துக்கொள்வது வழக்கமாயிற்று. பானுமதிக்கு எப்பொழுதுமே உடல் ஒரு சவாலாகவும் அதைக் கையாளுவது ஒரு சாதனையாகவும் இருப்பது எனக்கு வியப்பாயில்லை.



குட்டி ரேவதி

1 கருத்து:

Shubashree சொன்னது…

உங்களது மொழியை வாசிப்பது இனிமையான ஒரு அனுபவமாக உள்ளது ரேவதி.

இந்த பதிவில் பானுமதியின் பேச்சு தமிழை அழகாக எழுதியிருக்கிறீர்கள். அதுவே ஒரு பாடம்போல தோன்றுகிறது. அடுத்த முறை மக்களை சந்திக்கும்பொழுது அவர்கள் பேச்சை கவனிக்கிறேன்.

உங்களது பேச்சையும் அடுத்த பதிவில் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.