நம் குரல்

பாசி படர்ந்த குளம்








 
நச்சு வாயு புரளும் நீரலைகளால்
பாசி படர்ந்த குளத்தின் அழகு பூத்துக்குலுங்குகிறது
நீந்திக் களைக்காத தலைப்பிரட்டைகள்
கரையேகித் தவளைகளாய்க் கத்துகின்றன
அடையாளச் சங்கமம் தான்
அக்குளமாக உருக்கொண்டு தியானிக்கிறது
புழுத்த அந்தரங்கங்களுடன்
அழகு என்று வியக்கப்பட்ட அக்குளம்
எவரும் கால்வைக்க முடியா வழுக்கல்களுடன்
குளிர்ந்த நீர்மையைக் கவனப்படுத்திய
அதன் புறமும் அகமும்
பலவீனர்களை உள்ளிழுத்துக் கொல்வது
வீட்டையே 
தம் யோனிகளின் வாயிலாய் திறப்பவரிடமிருந்து 
எம் வீட்டைப் பறிப்பதும்
எம் கருப்பிரதியைக் கருத்தரிக்கும் கலயத்தை
தம் அரண்மனையின் கழிவறையாக்கியவரிடமிருந்து
எம் யோனியைப் பறிப்பதும் அக்குளக்கரையில்
பேச்சாகிறது இரைச்சலாகிறது
எவர் சொன்னது மாதவிடாய்க்குருதி
அக்குளத்தின் நச்சுநீரினும்
ஒரு பிரச்சனையென்று
வரலாற்றின் பிழைகளால் ஆன எம் கருக்குடுவையை
சரித்திரப் புகழுடைய பிழையாக்கும் பொதுப்புத்தியும்
அக்குளத்தை அழகிய யோனியது! அழகிய யோனியது!
என்று அவதியில் துள்ளுகிறது
மழை இன்னும் இன்னும் அதன் மீதே பெய்யட்டும்
பாசி படர்ந்த குளம் நீர் நிறையத்தளும்பட்டும்
எப்பொழுதும் நாசியைக் குறுகுறுக்கும்
விஷநீரின் வாடையை
தூமையெனும் ஆசைக்காட்டும் குளக்கரையில்
ஒற்றைக்காலுடன் வெள்ளைக்கொக்குகள்
காத்திருக்கட்டும்
 


என்னுடல் நதியைத் தேடிப் பாயட்டும்!






குட்டி ரேவதி


சிறுகுறிப்பு: ஆண்டைச்சமூகப் பெண்ணியம் நோக்கிய விமர்சனக்கவிதை
நன்றி: கல்குதிரை

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 10

சல்மா - ஒப்பந்தப் புன்னகைகள்







http://koodu.thamizhstudio.com/thodargal_14_10.php


குட்டி ரேவதி
நன்றி: தமிழ் ஸ்டுடியோ

'ஒரே தெப்பமாக நனைந்த தலை’யுடன் நகுலன்





எப்பொழுதுமே கூர்மையான தரிசனமும் தரிசனத்தின் வெளிச்சமும் தாங்காமல் சொற்களுக்குள் ஒளிந்து கொண்ட கவிஞர்களும் எனது ஞாபகத்தில் இறந்துபோய்விட்டதாகவே தோன்றுகிறார்கள். அவர்களை நிகழ்வாழ்வில் தேடிக்கண்டடைய முடிவதில்லை. சமூகத்தின் சம காலத்திற்குப் பொருந்தாத சட்டைகளுடன் உலவும் மனிதர்களாய் அவர்கள் அடையாளம் பெறாமல், சமூகக் கொதிநிலையைத் தாங்கவியலாமல் ஆவியாகிவிடுகின்றனர். மாறாக அவர்களின் கவிதைகள் உயிர்த்துடிப்புடன், சொற்களால் சுவாசித்த வண்ணம் புத்தகங்களால் தம்மை மூடிக்கொண்டு இயங்குகின்றன. கவிஞனின் மன்றாடல்களெல்லாம் சொற்கள் வழியாகவே என்றான பின், தனது உடலை எங்கேனும்  ஒளித்து வைத்துக்கொள்ள வேண்டியது தானே!

கவிதையின் மூதாதையருடன் ஓர் இளங்கவியின் இரத்த உறவு என்பது காலத்தின் பின்னேயே ஓடாமல் எதிர்த்திசையில் மூச்சிரைக்க ஓடுவதானது. ஒரு கவிஞரின் ஒற்றைப்புத்தகத்தை நிதமும் சுமந்து அதில் எல்லாச் சொற்களையும் மென்று ஆனால் எந்த ஒரு சொல்லையும் தொண்டைக்குழிக்குள் விழுங்கமுடியாமல் திணறும் அந்நினைவின் சுகவாசனையோடு திரியும் ஒரு சூலுற்ற பெண்ணைப் போல இளங்கவிகளை போதம் தந்து அலைக்கழிக்கும் மூதாதையரில் ஒருவர் நகுலன்.

பழமையின் எரு தின்று புதிய இலைக்கிளைப்புகளுடன் விழித்தெழும் மொழி, நவீனக் கணித வடிவெடுக்கிறது. அவரது கவிதைகளில். சொற்களை மெருகேற்றி அவற்றின் இடம் மாற்றி, கூட்டிணைப்பதெல்லாம் அனுபவவெளியில் காட்டும் அயராத உழைப்பின் விளைச்சலே. நவீனத்தைச் சொற்களின் குறியீடுகளால் இயங்கும் ஒரு புனைவாக ஆக்கும் வலிமை வேறெப்படி கைகூடும்?

‘நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப்பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை’
புலன்களின் கூருணர்வு மேலோங்கியிருக்கும் உடலாகவும், பின் வார்த்தைகள் மொத்தமும் சலித்த உடலாகவும் என உடலைப்புரட்டிப் புரட்டி உடலுடன் மீண்டும் சொற்களைக் கோர்க்கும் பணியை அனுதினமும் செய்த நகுலனிடம் நெடுவேனிலின் அகண்ட வெளியில் மூர்ச்சித்துத் தொலையும் கிழமனிதர்களின் அசையாமையும்  உண்டு. வெறும் சொல்விளையாட்டாய் ஓய்ந்துவிடும் கவிதை அனுபவத்தைத் தனிமனிதக்காட்சிவெளியாய் அவரவர்க்கேற்றவாறு விரித்துக்கொடுக்கும் ஒரு மரபின் சமுத்திரமும் அதில் நீந்தும் நவீனமும் ஓர் எளிமையான திறனன்று.


‘உள்ளப் பொந்துக்குள்ளே
பதுங்கியிருக்கும் ஒரு பச்சைக்கிளி அப்பா?’
சித்தர் மரபின் மூலச்சொற்களையும் படரொளியையும் இருளையும் எவரேனும் சுமந்து நிற்க வேண்டியிருக்கிறது, அதன் அத்துணை பாரத்தோடும், அது புறக்கணிக்கப்பட்ட பழியினோடும், சுமக்க நேர்ந்த குற்றவுணர்வின்றியும். ஒவ்வொரு நொடியும் சில ஒளி ஆண்டுகளாய் நீட்சியடைய அலாதி பொறுமையையும் கைகொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறே மரணம் வந்து கிள்ளி தலை சரியும் வரையிலும் கூட.


மரணம் என்பது வந்துவந்து போகும் ஒரு நிகழ்வாகவே அவரது எல்லா கவிதைகளிலும் தொனிக்கிறது.

‘ஒருவர்
சாவதும்
ஒருவர்
இருப்பதும்
வெறும் சாவு
என்பதை விட
இது
மிகவும் குரூரம்
இதைச் சொன்னதும்
சுசீலா தான்’
(குரூரம்)

சுசீலாவும் கூட நகுலனுடன் அவரது மீமெய்வெளியை ஆக்கிரமிக்கும் புனைவின் உருவே அன்றி காதலின் வரைவோலை அன்று.
‘நான் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்து
வாழ விரும்பவில்லை.’
சமூக ஓட்டோடு ஒட்ட விரும்பாமல் சகமனிதர்களை மனநோயுற்றவர்களாய் நோக்கி, அவர்களின் நொய்மையைத் தேர்ந்தெடுத்த அருஞ்சொற்களின் ஒற்றடத்தால் குணமாக்கும் கவிஞனே மனநோயாளியாய்ப் பார்க்கப்படும் விபரீதமெல்லாம் தின்ற சொற்களையே வாந்தியெடுக்கும் கவிஞர்கள் எனப்படுவோர் சமூகத்தின்தான் நிகழும்


‘அவ்வமயம்
நான் என்னையே
பிட்டுத்தின்றேன்.
அவ்வமயம்
நிழல்போல் வந்தபேய்கள்
அவைபோல் சென்றன’
(அஞ்சலி)


கவிஞன், தனது தனிமையில் தான் என்பது பல்லுருவமெடுக்கும் மனிதனாய், நிறைய உருக்களை அழிப்பதும், மற்றைய உருக்களை அலையவிடுவதும் எனச் சொல்லின் திராணியில் உயிர் செய்விக்கின்றான். நாய்களின் நிழல் அலையும் இரவைத் தாண்டி வெளியே வந்து திரும்பிப் பார்க்கையில் நகுலன், ‘ஒரே தெப்பமாக நனைந்த தலை’யுடன்!




குட்டி ரேவதி


பலமுறை மரித்துப்போன சாய்பாபா!






ஒரு வழியாக சத்ய சாய் பாபா இறந்த செய்தி இன்று எல்லோருக்கும் உறுதி செய்யப்பட்டது. கடவுளின் அவதாரமான ஒருவர் இறப்பது எனக்கும் வேதனையும் கவலையும் தரும் செய்தியாகத் தான் இருக்கிறது. அதற்குக் காரணம், என்னுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த தோழியான ஸ்ரீதேவி தனது அடுத்த கடவுளை, தன் மெலிந்த உடலுக்கு உறுதுணையாக இருக்கும் இன்னொரு கடவுள் அவதாரத்தை எப்படித் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதே. அனுதினமும் விரதங்களும் சாய்பாபாவின் நாமத்தை பல இலட்சம் முறைகள் உச்சரிப்பதுமே போதுமானவை, தனது கவலைகள் தீர என்ற நம்பிக்கை உடைய அந்தப் பெண், பெண்களின் நவீனப் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டிருப்பவர்!



பகுத்தறிவுச் சிந்தனை மரபில் ஊறிய நம் மனத்தில் ஏன் இம்மாதிரியான நம்பிக்கைகள் உறைந்திருக்கின்றன என்ற கேள்விக்குப் பதிலை, இது போன்ற உதாரணங்களால் மட்டுமே முழுமையாக நாம் புரிந்து கொள்ள முடியாது. சாய்பாபா, நோய்வாய்ப்பாட்டு படுக்கையில் கிடந்த நொடி முதல் அவரது பக்தர்கள் தொடர்ந்து அவர் நலனுக்காகப் பிரார்த்தித்தனர். யாரிடம்? கடவுளிடம் எனில் எந்தக் கடவுளிடம்? எனில், சாய்பாபா கடவுளா, இல்லையா? கடவுளின் அவதாரம் என்றால், அவருக்குத் தன்னை நோய்வாய்ப்படாமல் காத்துக் கொள்ளும் ஞானம் வாய்க்கவில்லையா? மானிடப் பிறப்பில் வந்த கடவுளின் அவதாரம் என்றால், மற்ற மனிதரைப்போல நோய்வாய்ப்பட்டு மரித்துத்தானே ஆகவேண்டும்? லிங்கத்தை வரவழைக்கும் மந்திர தந்திரங்கள் மனித உடலைக் காப்பாற்ற உதவவில்லையா? தன் உடலுக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை என்ற கூறியவரின் உடலுக்கு இன்று என்னவாயிற்று?  பொய்யும் புரட்டும் பொதிந்த தனிமனிதப் பிரசங்க வாழ்க்கையும் அதை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நிறுவனக்கட்டிடங்களும் அடுக்கடுக்கான கேள்விகளைக் கிளப்புகின்றன.



சாய்பாபா நல்லவேளை இறந்துவிட்டார். என் கவலையெல்லாம், அவரை நம்பித் தம் பொழுதுகளையும் சொத்துகளையும் ஆற்றல்களையும் விரயம் செய்யும் கோடானு கோடி மூடர்கள் இனி, எந்த மந்தையாக மாறுவார்கள் என்பதே. அதற்குள், எங்கேயோ அடுத்த அவதாரம் பிறக்கவில்லையா, என்ன? அவர் ஸ்படிக லிங்கத்தைப் போல, வேறு உருவப்படிமங்களை தன் தொண்டையிலிருந்தோ வேறு பள்ளங்களிலிருந்தோ எடுத்துக் கொடுத்தால், இம்மந்தை தலையாட்டி, கைகளைக் கொட்டி, அங்கே திசைதிரும்பிவிடும்தானே?



அரசியலும் மதமும் ஒருங்கிணையும் போதெல்லாம், ஒன்றோடொன்று கைகோர்த்துக் கொண்டு குடிமக்கள் நலனைப் புறக்கணிக்கிறது. எல்லா மாநில முதல்வர்களும் குடியாட்சி புரியத் தேவையான அருளாட்சி செய்த சாய்பாபா இன்று இல்லாமல் போனதை ஓர் அரசியல் விவகாரமாகவும் நாம் நோக்கவேண்டியிருக்கிறது. ஏனெனில், அரசியல் மதக் கூட்டணிகள்,  மக்களை மந்தையாக்கித் தன் ஆதாயங்களை நிதியாகவும் அதிகாரமாகவும் திரட்டியிருக்கிறது. காலந்தோறும், பகுத்தறிவுக்கெதிரான பாதைகள் கிளைப்பதும், அதைக் களையெடுக்கத் தீவிர பகுத்தறிவு இயக்கங்கள் முளைப்பதும், அரசு என்ற பெயரால் மதத்தின் போர்வையைப் போர்த்திக்கொண்டு, அவ்வியக்கங்கள் முறிக்கப்படுவதும் எனத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இது இந்த நூற்றாண்டில் மட்டுமே நிகழும் அவலம் அன்று. வரலாறு, சாய்பாபா இறந்ததை எழுதிவைத்துக் கொள்ளும். இயங்கும், பகுத்தறிவு விவாதங்களைக் கருத்திலோ, கணக்கிலோ அதன் பக்கங்கள் எழுதிக்கொள்ளாது. ஏனெனில், அரசின் கைகளில் தான் வரலாற்றை எழுதும் விரல்கள் இருக்கின்றன.



பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற சொற்களின் பொருட்களும் அர்த்தங்களும் அவற்றிற்கான நடைமுறைப்பழக்கங்களும் இன்றைய தலைமுறையிடையே சமூக வடிவங்களில் மீண்டும் புணரமைக்கப்பட  வேண்டும் அவசியத்தைத் தான் இம்மாதிரியான நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. நம் சிந்தனை மரபைச் செழுமையாக்க மேற்குறிப்பிட்ட, பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற இரண்டு வார்த்தைகளை மையமாக்கிய அர்த்த விவாதமே போதுமானவை. தமிழ்ச் சிந்தனையென்று ஒன்றை வடிவமைக்க வேண்டுமென்றால், இவ்விரண்டு வார்த்தைகளை மட்டுமே மூலங்களாகவும் அளவுகோல்களாகவும் கொள்ளலாம். இந்தியப் புவியியல் பரப்பிலும், இந்தியத் தத்துவச்சிந்தனை என்ற கட்டமைப்பு இவ்விரண்டு வார்த்தைகளுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டுத் தான் பொது மக்களுக்கு ஆன்மீகமாக விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சி தான் சத்ய சாய்பாபாவும்! எனக்கென்னவோ, இம்மாதிரியான மனிதர்கள் தன் மரணம் உறுதியாக்கப்படும் முன்னே பலமுறை செத்துப்போனவர்கள் தான். பகுத்தறிவும், சுயமரியாதை உணர்வும் அற்ற ஒரு தனிமனிதன் வாழ்ந்தாலும் செத்துப் பிழைப்பவன் தான். அத்தகைய ஒருவனின் வேடம், முடிவுக்கு வந்தது. இனி, அதன் தொடர்ச்சியான அரசியல், நிறுவனக்காட்சிகளின் வேடங்கள் அரங்கேறுவதை வேறு வடிவில் பொதுமக்கள் தரிசிக்கலாம்!






குட்டி ரேவதி




ஒரு பெண், எழுத்தாளராவதற்கு என்னென்ன வேண்டும்?




இக்கேள்விக்குக் கடந்த காலத்தில் வேறுபட்ட பல எழுத்தாளர்கள் தம் அனுபவங்கள் வழியாக அளித்த பதில்களின் தொகுப்பை இங்கு பதிவு செய்கிறேன். இதில் எண்ணற்ற படைப்பாளிகள் கண்டறிந்த நூதனமான பாதைகளும் தீர்வுகளும் கூட இருக்கின்றன. அவரவர்க்கேயான முறைகளில் இதைக் கண்டறிந்திருக்கக் கூடும். அவரவர்க்கேயான தேவைகளும் கூட, எழுத்தில் தீவிரமாக ஈடுபடத் தூண்டியிருக்கின்றன. என்றாலும் நான் கீழே தொகுத்திருப்பவை, ஒரு சீரிய எழுத்தாளராகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு உதவக்கூடும்.



பல்வேறு கட்டங்களில் பெண்களின் எழுத்தை விட, அளிக்கப்பட்ட குறுக்கமானதொரு வாழ்க்கையில் தன் படைப்புப்பணியை எப்படி செழுமைப்படுத்திக் கொள்வது அல்லது தக்கவைத்துக் கொள்வது அல்லது தொடர்ந்து தீவிரப்படுத்திக் கொள்வது என்பது பெரிய விவாதமாகவே விரிந்திருக்கிறது.   பல்வேறுபட்ட பாத்திரங்களை ஏற்று இயங்குவது பெண்ணுக்கு அன்றாடமும் சவாலானதொரு செயல்பாடே. ஒரு பெண் தன்னை முழுநேர எழுத்தாளராக வைத்துக்கொள்வதற்கு என்னென்ன தேவை?


எழுதுவதற்கானதொரு மொழியும் அதில் புலமையும்

தனக்கேயானதொரு அறை (இயன்றால் ஒரு பூட்டு சாவியுடன்)

முழுமையான பொருளாதார விடுதலை

விட்டு விடுதலையாகி எழுத்தில் ஈடுபடுவதற்கான நம்பிக்கை

தன் உடல் மீது தனக்கேயான முழு உரிமை

ஊக்கமூட்டும் மரபார்ந்த வடிவங்களின் (இலக்கிய அமைப்புகள், சங்கங்கள், வாசகர் வட்டம், நூலகங்கள், விமர்சன மரபு) ஆதரவும், முன்மாதிரிகளும்.

தானும் ஒரு பலிகடாவாக மாறிப்போவதை மறுப்பதற்கான நெஞ்சுரம்

ஆர்ப்பாட்டமில்லாத வாழ்க்கைமுறையும் உடல் ஆரோக்கியமும்

இலட்சியங்களாலும் வெற்றிகளாலும் தன்னை வரையறுத்துக் கொள்ளாதிருத்தல்

தான் நம்பும், மானுட விடுதலைக்கான சித்தாந்தத்தில் எந்தத்தடையும் இல்லாது ஈடுபடுவதற்குத் தேவையான ஊக்கத்தைத் தனக்குத் தானே வளர்த்துக் கொள்ளல் 


அன்றாடமும் உழைப்பதற்கான இச்சை 

தனக்கே உரித்தான முறைகளில் தன்னை வரையறுத்துக்கொள்வதற்கும் தனக்குத் தானே கற்பித்துக் கொள்வதற்குமான தீர்மானம்

தனிக்காட்டில் இயங்கவேண்டியிருப்பதற்கான முன்னெச்சரிக்கையும் எந்த அற்பமான விமர்சனங்களுக்கும் செவிசாய்க்காது இருக்கும் கவனக்குவிப்பும்

இதையெல்லாம் எந்த வித பாதுகாப்பும் இல்லாத முறைகளில் இயக்குவதற்கும், நினைத்துப் பார்க்கவே சாத்தியமில்லாதவற்றை நினைப்பதற்கும், தான் வாசிக்க விரும்பியதொரு நூலையே தான் எழுதுவதற்கும் அவசியமான துணிவும் விருப்பமும்.

ஒட்டு மொத்தத்தில் தன் விடுதலையைத் தானே உருவாக்கிக் கொள்வதற்கான வேட்கையும் அதைச் சிதறாமல் கொண்டாடுவதற்கான பக்குவமும் நேர்மையும்.







குட்டி ரேவதி








‘மாதவிக்குட்டியின் கதைகள்’







மாதவிக்குட்டி என்கிற கமலா தாஸ் எழுதிய இருபத்தியிரண்டு சிறுகதைகள் மொழியாக்கம்  பெற்றிருந்த தொகுப்பைப் படித்தேன். உதயசங்கர், மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கிறது.


மிகையான ஆளுமையைக் கொண்டிருந்த எழுத்துப் பெண்ணான கமலாதாஸின் கவிதைகளை வாசித்தவர்கள் கண்டிப்பாக அவரது இச்சிறுகதைத் தொகுப்பையும் வாசிக்கவேண்டும். பெண்ணின் இருப்புக்கான வரையறுக்கப்பட்ட எல்லைகளையெல்லாம், அதனுள்ளே தன்னை நிலைநிறுத்தியவாறே தன் எல்லா சக்தியையும் ஒன்று திரட்டி விரிக்கும் முயற்சி கமலாதாஸினுடையது என்ற எண்ணத்தோன்றுகிறது, அவர் கதைகளைத் தொகுப்பாக வாசித்தப் பின்பு. அதுமட்டுமன்றி, தன் புறத்தோற்றமாக விரிந்த பிரமாண்டமான ஆளுமைக்கும் இக்கதைகள் வழியாக நேர்மையாக இருந்திருப்பதை உணரமுடியும்.


எழுத்தாளரும் வம்சி புக்ஸின் பதிப்பாளருமான கே.வி.ஷைலஜா, இந்நூலுக்குத் துல்லியமானதொரு முன்னுரையை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சிலவரிகளிலிருந்து தொடங்கி கமலாதாஸைத் தொடர்வது என்பது எவருக்கும் எளிதானதாக இருக்கும். ‘மெளனம் உடைபடும் சப்தத்தில் முற்றிலும் பேச்சினை இழந்து மெளனம் காத்த தமிழ்ச்சூழலை நானறிவேன்!’ என்ற வரி கடந்த கால இலக்கிய நெருக்கடிகளைத் தெளிவுபடுத்தியது.


பெண்ணின் உடலார்ந்த சொற்களையும் அரசியலையும் சகஜமாக ஏற்றுக்கொண்ட கேரளச்சூழலில், ‘முலைகள்’ கவிதைகளும் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து ஏற்கப்பட்டன. தமிழ்ச்சூழலில் நிலவியதோ, மெளனம் உடைபடும் சத்தத்தில் பேச்சினை இழந்த மெளனம்!


பெண்கள் பெரும்பான்மையான தம் நேரங்களில் அரூபமான உறவு வெளிகளில் தாம் நீந்திக்கொண்டிருக்கின்றனர். யதார்த்த உலகில் பிடிமானமற்றுப் போய், அந்த அரூப   உறவுகள் கலைந்து, கரைந்து,  இல்லாமல் போவதை இத்தொகுப்பில் நிறைய கதைகளின் தன்மையாய்,  அல்லது பெரும்பான்மையான கதைகளின் அடிப்படைத் தன்மையாய்க் காணலாம்.


ஒவ்வொரு கதையும் நீளமான அலங்காரங்களின்றி தன்னைப் பெண்ணாக்கிய கதையாகவோ, அல்லது தான் சந்தித்தப் பெண்ணின் கதையாகவோ, தொடங்கிய வேகத்தில் கதையை உக்கிரப்படுத்தி முடிகிறது.


பெண்ணின் பார்வையில் காதலன்,  தந்தை இருவருக்குமிடையே நிகழ்ந்த உருவப்பிழையைப் போலவே, ஆணின் பார்வையிலும் காதலி, மகள் என்ற உருவச்சிதைவு கொள்வதைக் கூடக் கதையின் நடையில் சென்று மொழியாக்குவது கமலாதாஸின் தன் முனைப்பின் தீவிரத்தினால் தான்.


சமூகம் வரையறுத்திருக்கும் பெண்மை – ஆண்மை வரையறைகளை உணரும் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் முறையே அதைக் கடக்கத் தலைப்படும்போதெல்லாம், தந்தை, கணவன், மகன், தாய் , மனைவி, மகள் இதுபோன்ற கதாபாத்திரக் கொள்கலனுக்குள் அதை அறியாத நிலையில் சென்று சிக்கிக்கொள்கின்றனர். பின், மாட்டிக்கொண்ட உடலையோ, தலையையோ, உறுப்பையோ விடுவிக்கமுடியாதபடிக்கு, கொள்கலனுக்குள் மாட்டிக்கொண்ட உறுப்பு நினைவுகளில் பூதாகரப்படுவதையும் உணரமுடிகிறது.


ஆனால், இதுவரை வெளிப்படுத்தமுடியாது அடக்கிவைத்திருந்த பெண்களின் துயரை வார்த்தைப்படுத்தவே ஒவ்வொரு கதையிலும் கமலாதாஸ், அத்தகைய பெண்களை இழுத்து வந்து பேசச்செய்கிறார்.     


‘கிழட்டு ஆடு’ என்ற கதையில், தன் நலன் நோக்காது கணவனுக்கும் மகன்களுக்கும் சமைத்துப் போடும் பெண், வயது முதிர அவள் ஒரு கிழட்டு ஆட்டைப்போன்று தோற்றமளிப்பதாகக் கூற, அவள் எல்லோரும் சென்ற பின், கண்ணாடியில் சென்று தன் முகத்தை உற்று நோக்குவதன் வேதனை குறையாத கதை. 


‘தண்டனை’ கதையில் ‘கல்யாணம் முடிஞ்சா தூங்கக்கூடாதா?’ என்று பாட்டியிடம் கேட்கும் புதிய மணப்பெண்ணின் கதை.


பெண்மனம் தன் வாழ்வில் தடுமாறும் இடங்களில் எல்லாம் கமலாதாஸின் கதை முளைத்து வருகிறது. புறக்கணித்து வைத்திருக்கும் நினைவுகளையும் நிகழ்வுகளையும் சீண்டி விடுகிறது. பிறகென்ன? வாழ்வின் முழுமைக்கான விழைவு தீராததாகிறது. 




குட்டி ரேவதி