நம் குரல்

‘மாதவிக்குட்டியின் கதைகள்’







மாதவிக்குட்டி என்கிற கமலா தாஸ் எழுதிய இருபத்தியிரண்டு சிறுகதைகள் மொழியாக்கம்  பெற்றிருந்த தொகுப்பைப் படித்தேன். உதயசங்கர், மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கிறது.


மிகையான ஆளுமையைக் கொண்டிருந்த எழுத்துப் பெண்ணான கமலாதாஸின் கவிதைகளை வாசித்தவர்கள் கண்டிப்பாக அவரது இச்சிறுகதைத் தொகுப்பையும் வாசிக்கவேண்டும். பெண்ணின் இருப்புக்கான வரையறுக்கப்பட்ட எல்லைகளையெல்லாம், அதனுள்ளே தன்னை நிலைநிறுத்தியவாறே தன் எல்லா சக்தியையும் ஒன்று திரட்டி விரிக்கும் முயற்சி கமலாதாஸினுடையது என்ற எண்ணத்தோன்றுகிறது, அவர் கதைகளைத் தொகுப்பாக வாசித்தப் பின்பு. அதுமட்டுமன்றி, தன் புறத்தோற்றமாக விரிந்த பிரமாண்டமான ஆளுமைக்கும் இக்கதைகள் வழியாக நேர்மையாக இருந்திருப்பதை உணரமுடியும்.


எழுத்தாளரும் வம்சி புக்ஸின் பதிப்பாளருமான கே.வி.ஷைலஜா, இந்நூலுக்குத் துல்லியமானதொரு முன்னுரையை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சிலவரிகளிலிருந்து தொடங்கி கமலாதாஸைத் தொடர்வது என்பது எவருக்கும் எளிதானதாக இருக்கும். ‘மெளனம் உடைபடும் சப்தத்தில் முற்றிலும் பேச்சினை இழந்து மெளனம் காத்த தமிழ்ச்சூழலை நானறிவேன்!’ என்ற வரி கடந்த கால இலக்கிய நெருக்கடிகளைத் தெளிவுபடுத்தியது.


பெண்ணின் உடலார்ந்த சொற்களையும் அரசியலையும் சகஜமாக ஏற்றுக்கொண்ட கேரளச்சூழலில், ‘முலைகள்’ கவிதைகளும் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து ஏற்கப்பட்டன. தமிழ்ச்சூழலில் நிலவியதோ, மெளனம் உடைபடும் சத்தத்தில் பேச்சினை இழந்த மெளனம்!


பெண்கள் பெரும்பான்மையான தம் நேரங்களில் அரூபமான உறவு வெளிகளில் தாம் நீந்திக்கொண்டிருக்கின்றனர். யதார்த்த உலகில் பிடிமானமற்றுப் போய், அந்த அரூப   உறவுகள் கலைந்து, கரைந்து,  இல்லாமல் போவதை இத்தொகுப்பில் நிறைய கதைகளின் தன்மையாய்,  அல்லது பெரும்பான்மையான கதைகளின் அடிப்படைத் தன்மையாய்க் காணலாம்.


ஒவ்வொரு கதையும் நீளமான அலங்காரங்களின்றி தன்னைப் பெண்ணாக்கிய கதையாகவோ, அல்லது தான் சந்தித்தப் பெண்ணின் கதையாகவோ, தொடங்கிய வேகத்தில் கதையை உக்கிரப்படுத்தி முடிகிறது.


பெண்ணின் பார்வையில் காதலன்,  தந்தை இருவருக்குமிடையே நிகழ்ந்த உருவப்பிழையைப் போலவே, ஆணின் பார்வையிலும் காதலி, மகள் என்ற உருவச்சிதைவு கொள்வதைக் கூடக் கதையின் நடையில் சென்று மொழியாக்குவது கமலாதாஸின் தன் முனைப்பின் தீவிரத்தினால் தான்.


சமூகம் வரையறுத்திருக்கும் பெண்மை – ஆண்மை வரையறைகளை உணரும் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் முறையே அதைக் கடக்கத் தலைப்படும்போதெல்லாம், தந்தை, கணவன், மகன், தாய் , மனைவி, மகள் இதுபோன்ற கதாபாத்திரக் கொள்கலனுக்குள் அதை அறியாத நிலையில் சென்று சிக்கிக்கொள்கின்றனர். பின், மாட்டிக்கொண்ட உடலையோ, தலையையோ, உறுப்பையோ விடுவிக்கமுடியாதபடிக்கு, கொள்கலனுக்குள் மாட்டிக்கொண்ட உறுப்பு நினைவுகளில் பூதாகரப்படுவதையும் உணரமுடிகிறது.


ஆனால், இதுவரை வெளிப்படுத்தமுடியாது அடக்கிவைத்திருந்த பெண்களின் துயரை வார்த்தைப்படுத்தவே ஒவ்வொரு கதையிலும் கமலாதாஸ், அத்தகைய பெண்களை இழுத்து வந்து பேசச்செய்கிறார்.     


‘கிழட்டு ஆடு’ என்ற கதையில், தன் நலன் நோக்காது கணவனுக்கும் மகன்களுக்கும் சமைத்துப் போடும் பெண், வயது முதிர அவள் ஒரு கிழட்டு ஆட்டைப்போன்று தோற்றமளிப்பதாகக் கூற, அவள் எல்லோரும் சென்ற பின், கண்ணாடியில் சென்று தன் முகத்தை உற்று நோக்குவதன் வேதனை குறையாத கதை. 


‘தண்டனை’ கதையில் ‘கல்யாணம் முடிஞ்சா தூங்கக்கூடாதா?’ என்று பாட்டியிடம் கேட்கும் புதிய மணப்பெண்ணின் கதை.


பெண்மனம் தன் வாழ்வில் தடுமாறும் இடங்களில் எல்லாம் கமலாதாஸின் கதை முளைத்து வருகிறது. புறக்கணித்து வைத்திருக்கும் நினைவுகளையும் நிகழ்வுகளையும் சீண்டி விடுகிறது. பிறகென்ன? வாழ்வின் முழுமைக்கான விழைவு தீராததாகிறது. 




குட்டி ரேவதி

3 கருத்துகள்:

Shubashree சொன்னது…

குறுகிய வடிவத்தில் தரப்பட்டிருக்கும் கவித்துவமான கருத்து. இன்னும் கூட கதைகளை பற்றி எழுதியிருக்கலாமே?

Unknown சொன்னது…

ஆம் இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

குட்டி ரேவதி சொன்னது…

ஆம், இன்னும் விரிவாக எழுதி இருந்திருக்கலாம்!