நம் குரல்

குட்டிப்புலியும் அபாயகிரகமும்!









'அபாய கிரகம்' என்ற பெயரில் வெளியாகியிருக்கும் 'ஆஃப்டர் எர்த்' படம் பார்த்தேன்.  நாம் வாழும், இந்தப் பூமி ஆயிரம் வருடங்களுக்குப் பின் 'அபாயகிரகம்' என்று சித்திரிக்கப்படும் ஓர் அறிவியல் புனைகதை.

நண்பர் ஒருவர் 'குட்டிப்புலி' பார்த்துவிட்டு, அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சியைக் குறிப்பிட்டு கண்டிப்பாய், அந்தப்படத்திற்குக் குழந்தைகளை அழைத்துச்செல்லவேண்டாம் என்று எல்லோரிடமும் அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்.  பெரும்பாலான நேரங்களில், நான் பெரியவர்கள் மட்டுமே (அடல்ஸ் ஒன்லி) பார்க்கக் கூடிய படங்களைப் பார்க்க விரும்புவதில்லை. குழந்தைகளால் பார்க்கமுடியும் படங்களைப் பார்த்தாலே போதும் என்று தோன்றுகிறது. குழந்தைகளை அழைத்துச் சென்று காட்டவேண்டிய படம், 'அபாய கிரகம்'.

வசூலில் மிகப்பெரிய சரிவு என்றும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட திரைக்கதையாகவும் எதிர்கொள்ளப்பட்ட, 'ஆஃப்டர் எர்த்' - ஐ, தோல்வியின் கண்களால் மட்டுமே பார்க்கமுடியவில்லை. 'பயம்' என்பதை ஓர் அசாதாரண உயிரியாகச் சித்திரித்ததுடன் மட்டுமல்லாமல், அது ஒரு கண்மூடித்தனமான உணர்வு என்ற நிலையிலும் தத்துவார்த்தமான நிலையில் அணுகப்பட்ட திரைக்கதை. ஒரு பெரிய கேள்விக்கு, நேரடியான ஒற்றை பதில். அவ்வளவே படம். வில் ஸ்மித்தும் அவருடைய மகன் ஜேடன் ஸ்மித்தும் நடித்திருக்கின்றனர்.

பயம், வலி, மரணம் போன்றவை மானிட இனத்திற்கு காலந்தோறும் எழும்பி நிற்கும் கேள்விகள் என்றாலும், மானுட பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவகையில் விடை காணும் வித்தையில் தேர்ந்தவர் 'புத்தர்'. பெரும்பாலும், கீழைத்தேய நாடுகளின் சிந்தனை, இவற்றின் தோற்றவாயை ஆராய்ந்தவிடத்து, மேலைத்தேய சிந்தனைகள், இந்த உணர்வுகளை வெல்லும் வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கும்.

'குட்டிப்புலி' பார்க்காமல் நான் ஏதும் விமர்சிக்க முடியாது என்றாலும், ஓர் இனப்படுகொலையைச் சந்தித்த நமக்கு இனி வன்முறையை ஒரு காலும் கருணையிலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாத மரத்துப் போன இதயம் வாய்த்துவிட்டதோ என்று தோன்றுகிறது. 'காட்சிப் படிமங்கள்' ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து விடுபடமுடியாத  பரிணாம வளர்ச்சியின் கட்டத்தை நாம் எய்தி விட்டோம் என்பது எவ்வளவு பெரிய அபாயகரமான எச்சரிக்கை!



குட்டி ரேவதி






கவிதைகளின் குளம்படி!

ஸர்மிளா ஸெய்யித்தின் 'சிறகு முளைத்த பெண்' கவிதைத்தொகுப்பு பற்றி... தமிழ் ஆழிக்கு எழுதியது.




1990 -களில் தமிழ் நாட்டில் பெண் கவிதை வீர்யம் பெற்றதற்கு பெருமளவில் காரணமாக இருந்தவை ஈழத்திலிருந்து வந்த பெண்களின் அரசியல் கவிதைகள். அவர்கள் தாம்   தம் 'உடலை' முதன்முதலாக இலக்கியத்தின் பேசு பொருளாக ஆக்கினர். அவர்கள் உடல் மீது செலுத்தப்பட்ட அதிகார வன்முறையையும் போர்ச்சூழலையும் வெகு யதார்த்தமாக கவிதைகளில் பிம்பப்படுத்தினர். அந்தக் கவிதைச்  செயல்பாட்டின் உத்வேகம் தான், தமிழகத்தின் பெண் கவிதை மொழியையும் கூட பீடித்தது. அது வரை ஆண் மொழியில் வெறும் வர்ணனைகளாகவும் உள்ளீடற்ற கூடுகளாகவுமே இடம்பெற்று வந்த பெண் உடல், பெண்கள் கவிதைகளில் அவர்களின் அரசியல் பொருளுடன், சமூக வேட்கையுடனும் வெளிப்பட்டது. இந்தப் பத்தாண்டுகளில் பொதுவெளியில் பெண் உடல் என்பது பேசுபொருளாக மாறுவதற்கு பெண்களின் இந்நீண்ட இலக்கியப் பயணம் தேவைப்பட்டது. அதே சமயம்,பெண் உடல் பற்றி வெளிப்படையாகப் பேசிப்புழங்குவதற்குத் தேவையான வார்த்தைகளும்  பெருமளவில் இக்கவிதைகளாலேயே  சமூகத்திற்குப் வழங்கப்பட்டன. இன்று தமிழ்ப் 'பெண் உடல்' பெரிய அரசியல் பிம்பத்தைக் கொண்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



ஸர்மிளா ஸெய்யித்தின் 'சிறகு முளைத்த பெண்' கவிதைத் தொகுப்பு மேற்சொன்ன வழியிலேயே தன் சிந்தனைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. 'நீ இல்லாத இரவு என் கழுத்தை நெரிக்கிறது', என்று தன் காமத்தைப் பேசுவதிலாகட்டும், 'குளம்புகள் கற்களில் மோத அதோ எம் கலவியைக் களவில் பார்த்த புரவிகள் தேரை இழுத்துக்கொண்டு விரைந்தோடி வருவதைப் பார்', என பெண் மீதான சமூகக் கண்காணித்தலைப் பேசுவதிலாகட்டும்,  'நான் மழை. ஆட்டுத்தொழுவத்திலும் வீழ்வேன். அரசமாளிகையிலும் வீழ்வேன். என்னைக் கண்டு ஒதுங்கியேயாகனும். ஆளுநர் அரசாங்கத்தலவர் அனைவரும் குடைபிடித்தாகனும் எனக்கு. நான் மழை. வேறுபாடின்றி நனைப்பேன்' என எளிமையான முறையில் தன் உரிமைப் போரை நிகழ்த்துவதிலாகட்டும் ஸர்மிளா ஸெய்யித்தின் கவிதைகள்  சமூகப்பார்வையின் வெளிச்சம் பெறுகிறது. சிந்தனையின் நெடுஞ்சாலையில் சீரான வேகத்தில் ஓடும் குதிரையில் பயணிக்கும் ஒரு பெண்ணின் தனி முழக்கம் போல, தனி சாட்சியங்கள் போல ஸர்மிளா ஸெய்யித்தின்  கவிதைகள் இத்தொகுப்பு முழுக்க உருக்கொண்டிருக்கின்றன.  பெண்கள் இதுவரையிலும் பேசாத தம் உணர்வுகளை நேர்மையைப் பேசுமிடத்து ஸர்மிளா மிகுந்த கவனம் கொள்ளத் துணிந்திருக்கிறார். தமிழ்ப் பெண்ணிலக்கிய வரலாற்றின் அரசியலை முற்றும் அறிந்த ஒரு கவிஞரின் மன எழுச்சி தான் அவரைக் கவிதை காலகட்டத்தின் அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். ஸர்மிளா ஸெய்யித்தின் கவிதை மொழியும் குரலும் அத்தகையதோர் எழுச்சியைத் தன்னுள் கொள்வதன் வழியாக பெண் கவிதையின் அரசியலை கூர்மைப்படுத்தமுடியும் என்று நம்புகிறேன்!





குட்டி ரேவதி

உடலை விட்டு எப்படி வெளியேறுவது?




பகல் இரவு என்றில்லாது
எலும்பின் மஜ்ஜையும் நிணம் பாய்ந்த வெளிகளும் கூட
ஒவ்வொரு கணமும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றன
கனவுகளின் பெருவெளிகளாய் சிதறிக்கிடந்த அங்கங்களை 
வாரிச்சுருட்டி அள்ளி எடுக்கவே
நூறாண்டுகள் ஆயிற்று
இவ்விடம் இக்கணம் என்னிடம் மிச்சமிருப்பது
இவ்வுடல் மட்டுமே நீ கூட உடனில்லை
புழுக்கள் நெளியும் சிந்தனை வெளியை விசிறி விசிறி
தின்றுக் கொழுத்தப் புழுக்களிடமிருந்து
எலும்புகளின் திட மிச்சங்களைப் பொறுக்கி எடுப்பதற்கே
வாழ்வின் வறண்ட பாலைகளையும் பாறைகளையும்
கடக்க வேண்டியிருந்தது
மொழியைத் துலக்கித் தான் கண்கள் என்றும்
செய்து கொள்ளமுடிந்தது
கங்குகள் விரித்த பாதைகள் எங்கும்
வரலாற்றின் பொதிகளைச் சுமந்து வந்திருக்கிறேன்
இன்னும் இன்றும் கூட
யாக்கை என்பது வாக்கிற்கும் உன் தீண்டலுக்கும்
வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கருவறைச் சிற்பம்
நீ உருவி எடுத்த பின்னும் உன் குறியை மறந்து
சிந்தித்துக் கொண்டிருக்கும் கலையைச் 
செய்து கொண்டிருக்கும் உடல்
உன்னுடன் வெளிகளுக்கிடையே
வேகமாய்ப் பயணித்தும் கொண்டிருக்கும்
நீ நினைப்பது போல உடல் சொற்பமுமன்று 
நான் நினைத்திருப்பது போல
அது அற்புதமுமன்று
அற்பங்களால் கட்டியெழுப்பப்பட்ட உடலை
இன்னது இதுவென சுட்டிக்காட்ட நான் மட்டுமே 
எஞ்சியிருக்கிறேன்
என் காலடியில் உடலை எறிந்து விட்டு எட்டப் போ
அல்ல அதற்கு உன் யாக்கையை அறிமுகப்படுத்து
உன்னால் இப்பொழுது இயலாது என நான் அறிவேன்
இன்னும் உனக்கும் ஒரு நூறு ஆண்டுகளேனும் ஆகும்
ஆகட்டும் அதற்குள் என் உடலுக்கு
சில நூறு வானங்களையேனும் விரிக்க வேண்டும்


குட்டி ரேவதி

பெண்கள் தினம்!





எந்தக் காலகட்டத்தையும் விட, தற்பொழுது தான் பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதற்கான தேவையும் பொருத்தமும் நிறைய இருப்பதாக நினைக்கிறேன்!

சமீபத்திய நிகழ்வுகளால், பெண்கள் மீது இது வரையிலும் மறைமுகமாக இயங்கிக் கொண்டிருந்த வன்முறை பகிரங்கமாவதையும் அதிகமாவதையும் உணரமுடிகிறது.

பெண்களுக்குக் குடும்பமும் வீடும் கூட பாதுகாப்பானதாக இல்லை என்பதை முதலில் நாம் அறியவேண்டும்.

பெண்கள் ஆண்களை அறியவும் கையாளவும் முடியாதபடிக்கு அறியாமையே பெண்களுக்கு உணவாக அளிக்கப்படுவதை முதலில் பெண்கள் மறுக்கவேண்டும்.

சாதிய அமைப்புகளின் 'மினியேச்சர்' போல இயங்கிக்கொண்டிருக்கும் வீடு, திருமணம், குடும்பம் ஆகியவற்றை எதிர்கொள்ளவும் அவசியப்பட்டால் புறக்கணிக்கவும் பெண்களுக்குப் பெரிய அளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

ஆனால், நம் உடல் தான் எல்லா அறநெறிகளையும் பயில்வதற்கும் பாராட்டுவதற்கான இருப்பிடம் என்பதும் நமக்கு பெருத்த மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கக் கூடியது இல்லையா?

தனிமனித அதிகாரத்தால் இந்த உலகத்தில் எதையும் செய்ய முடியாது என்ற நிலையை ஒட்டுமொத்த உலகமும் அடைந்துள்ளது. 

அதே சமயம், அன்பினாலன்றி அதிகாரத்தால் ஏதும் செய்ய இயலாது என்பதும் வாழ்வியலின் இலக்கணமாக இருக்கிறது.

பெண்கள் தம் கலைத்திறமைகளையும் பிற பெண்களுடனான ஒருங்கிணைதலையும் தாம் இதற்கு ஆயுதமாக்கவேண்டும்.

பெண்ணுடல் என்பது இயற்கைச் செயல்பாட்டின் மூலமாக இருக்கிறதே அன்றி உடலின் பாவனைகளாலும் வெற்று உடல் நடவடிக்கைகளாலும் ஏதும் செய்ய இயலாது!

பெண்களே, ஆண்களுடன் நாம் அன்பு பாராட்டும் 'பூவுலகமாக' இதை மாற்ற நம்மால் தான் இயலும்! அதை சாதிப்போம்! 

பெண்கள் தின வாழ்த்துகள்!



புகைப்படத்தில் இருப்பவர்: போராளி ஆங் சான் சூ கி

நவீனக்கவிதை!






நவீனக்கவிதைக்கான விமர்சனக்குரலை எப்படி, எங்கே தொடங்குவது?

அதற்கு இலக்கிய அரசியல் தெரியவேண்டாமா?

அது எப்பொழுதும் ஒரு பக்கச்சாய்வுடன் இயங்கியதை நவீனக்கவிஞர்கள் அறியவேண்டாமா?

அறியாமையுடன், தன் சுயம் சார்ந்த சொற்ப, அற்ப உணர்ச்சிகளைச் சொறிந்து கொடுக்கும் சொற்கள் மட்டுமே கவிதைக்குப் போதுமா?

அற்பமான உணர்ச்சிகளிலிருந்து மானுடத்திற்குப் பொதுவான உணர்வெழுச்சிகள் நோக்கி தனிமனிதனை உந்திச்செல்லும் நெம்புகோல் இல்லையா, கவிதை?

தமிழ்க்கவிதையியல் அறிய வேண்டாமா?

காலந்தோறும் நவீனக்கவிதையின் அகக்குரல் சமூக நீதிக்காகத் தன் உயிர்பலி ஈந்ததை நாம் மறைக்க முடியுமா?

கவிதை என்ற பெயரில் சாதி எழுத்தை எழுதிக்குவித்த சொற்களில் வீசும் முடை நாற்றத்தை இல்லை என இயலுமா?

உரத்த குரலால் கவிதை, கவிதை எனப்பட்டவை எல்லாம் காலத்தின் சுழிப்பில் இன்று செத்துப் போனது ஏன் என்று கேள்வி எழுப்பினோமா? உரத்த குரல்களால், உரையாடல் சாத்தியப்படாமல் போனதை மறுப்பீர்களா?

கவிதையைத் தொங்கிக்கொண்டிருக்கும் இரும்புக்குண்டுகளாய் நாம் ஆனக்காலத்தில் நவீனக்கவிதையின் வரையறை தான் என்ன?

எல்லா வகையிலும் கவிதையாக இருக்க முடிந்த ஒன்று, சமூகத்தில்  அன்று செய்யமுடிந்ததை ஏன் இன்றைய நவீனக்கவிதை செய்யவில்லை? குருதியில் தோய்ந்த சொற்களைச் சிறந்த கவிதைகள் என்று ஏன் கொண்டாடுகிறோம்?

ஒரு சிம்மாசனத்திற்காகத்தானே 'நவீனக்கவிஞர்' பட்டம் தேவைப்படுகிறது, இல்லையா?

சிந்தனையின் வெளியில் தக்கையாக மிதக்கும் சொற்களின் பயணம் மட்டுமே கவிதை என்பதா?








குட்டி ரேவதி