நம் குரல்

பயண வெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயண வெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாடுகாண் காதை – கண்ணகியின் கதைளைத் தேடிச்செல்லும் பயண ஆவணப்படம்



கண்ணகி எனும் சிலப்பதிகார நாயகியின் மீதான எனது தனிப்பட்ட நாட்டத்தை அடுத்த கட்டச் செயல்பாடாக மாற்றுவது என்று முடிவு செய்திருந்த பொழுது தான், அமெரிக்க ஆய்வாளரான எரிக் மில்லர், ‘கண்ணகி வாழ்ந்த இடங்களின் கதை சொல்லும் சுற்றுலா’, ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்தச் சுற்றுலாவின் அடிப்படையான வடிவமைப்பும் பயண நோக்கமும் என்னை ஆர்வமூட்டக்கூடியதாக இருந்தன. சென்னைக் கடற்கரையிலிருந்து தொடங்கி பூம்புகார், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை வழியாக வால்பாறையில் நிறைவு பெறும் என்றும் அவ்வாறான பயணம் கடல், காடு, மலை, வயல், வெட்டவெளி என ஐந்து நிலவெளிகளையும் உள்ளடக்கக் கூடியதாக இருக்கும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தச் சுற்றுலாவை பயண ஆவணப்படமாக எடுப்பது என்ற என் விருப்பத்தை எரிக் மில்லரிடம் தெரிவித்ததும் படத்தை ஒரு கூட்டுத்தயாரிப்பாக எடுப்போம் என்று உற்சாகமானார்.

இந்தச் சுற்றுலா ஓர் ஒப்பிலாத பயண அனுபவத்தைத் தந்தது. வெவ்வேறு பொருள் கருதி தமிழகத்தை வெவ்வேறு காலகட்டங்களில் கடக்கவேண்டி இருந்திருக்கிறது. தமிழகத்தின் பன்பரிமாணத்தை அறியும் வாய்ப்புகளாகவே அப்பயணங்கள் நிறைவேறி இருக்கின்றன. சிலப்பதிகாரத்துக்குள் சொல்லப்படும் நிகழ்வுகளின் வரைபடம் வழியாகப் பயணிப்பது அன்று நம் நோக்கம். மாறாக கண்ணகி பற்றிய கதைகள் எங்கெங்கெல்லாம் ஊடுருவி இருக்கின்றனவோ அந்தந்த நிலப்பரப்புகள் வழியாகப் பயணிப்பதும் அங்கங்கு வாழும் மாந்தர்களிடமிருந்து கண்ணகி பற்றிய காலங்காலமான நாட்டுப்புறக் கதைகளையும் ஐதீகங்களையும் நினைவுகளையும் சேகரிப்பதும் தாம் இப்பயணத்தின் நோக்கங்கள்.

சிலப்பதிகாரம் செவ்விலக்கிய வடிவம் பெற்ற கண்ணகியின் கதை. அதில் திரிபுகளுக்கும் மயக்கங்களுக்கும் சாத்தியமில்லை. மாறாக, இப்பயணத்தில் நாங்கள் சேகரித்த கதைகள் நாட்டுப்புற வடிவிலானவை. வாய்மொழி மரபுடையவை. கதாபாத்திரங்களைப் பற்றிய நாட்டுப்புற அங்கதங்கள் அடிவயிற்றில் சிரிப்பு மூட்டுபவை. கண்ணகி என்பவள் தெய்வப் பெண் என்பதாலேயே அவளுக்கும் கோவலனுக்கும் இடையே உடலுறவு நிகழச் சாத்தியமில்லை, கடைசியாக கோவலனைக் கொன்றவள் கண்ணகியே, மாதவியின் மாமன் என்ற கதாபாத்திரத்திலிருந்து தான் ‘மாமா வேலை பார்ப்பவன்என்ற சொலவடை எழுந்தது, கண்ணகி மதுரையை எரித்தபோது அறம் பயின்றவர்களைத் தன்னுடன் பாதுகாப்பாகக் கூட்டிச் சென்ற மக்களே இன்றைய முதுவர்கள், கண்ணகி எரித்த மதுரையை குளிரச்செய்ய அனுப்பப்பட்ட பெண்ணே இன்றைய மீனாட்சி தெய்வம், கோவலன் கொலையுண்டதும் தன் உக்கிரம் தீராமல் வெவ்வேறு திசைகளுக்குப் பயணித்த கண்ணகி என பலதரப்பட்ட கண்ணகிகள் பிறந்து வாழ்ந்துள்ளனரோ என்று எண்ணும் பட்சத்தில் அவளின் முடிவு வேறுவேறு எல்லைகளில் உச்சக்காட்சி அடைந்துள்ளது.

எங்களுடன் இப்பயணத்தில் முதல் நபராக இணைந்த தர்மபுரியைச் சேர்ந்த வரலாற்றாசிரியை தில்லையம்மாள் எங்கள் பயணத்தை இன்னும் சுவையூட்டினார் என்று சொல்லவேண்டும். ஐம்பது வயதான இவர் இப்பயண அனுபவத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததும், பயணத்தின் பதினைந்து நாட்களும் முதல் நபராய் எழுந்து நிலவெளியோடு சங்கமிக்கும் உற்சாகமும் எங்கள் அனைவர் மீதும் அவர் காட்டிய அக்கறையும் அன்பும் கொள்ளை அழகுமிக்கது.

மேற்சென்ற பயணத்தை ஒருமணி நேரப்படமாகத் தொகுத்திருக்கிறோம். அதே பயண அனுபவமும் நாட்டுப் புற வெளிகளில் உருப்பெற்ற கண்ணகியின் சித்திரமும் உருப்பெறும் வகையிலும் ‘நாடுகாண் காதைஎன்ற பொருளில் படமாக்கியுள்ளோம். ஆங்காங்கே திரிதிரியாக சொல்லப்பட்ட கதைகளை இணைத்து ஒரே கதையாக இழைத்துள்ளோம். இன்று எங்களுடைய மனோ வெளியில் உலவும் கண்ணகி என்பவள் கற்பின் வேறுவேறு நிலைகளை ஆள்பவள். இந்தச் சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்த எரிக் மில்லரின் ‘கதை சொல்லும் நிலையம்’, பாட்டிகள் காலத்தில் நிலவிய கதை சொல்லும் மரபைப் புணரமைக்கும் பணியை முதன்மையானதாகக் கொண்டுள்ளது. கதை சொல்லும் கலையே, மானுட படைப்பூக்கம் முழுமையுறும் படைப்புக் கலை என்பதை இப்பயண நிறைவில் உணரமுடிந்தது. இத்தகைய புனைவுக் கலைவடிவம் வழியாகத் தான் ‘கண்ணகிஎனும் பெண் இன்னும் இன்றும் கடற்கரையோரமாயும் காடுகளூடேயும் மலைத்தொடர்கள் வழியாகவும் வயல்வெளியிலும் வெட்டவெளிகளிலும் நடந்தேகிக் கொண்டே இருக்கிறாள். அவளைத் தொடரும் பயணமோ ஒருபொழுதும் முடிவுறாது.

இப்பயணம் பற்றிய புகைப்படங்களுக்கு:

http://kannagistorytellingtour.blogspot.com/

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYiu1coR2GPVZ7dTNojlH3LK-tgrGAD1Nisv83AwaeH5xddomLPEFGDR1cypoBnyHOjaDwH26CBAVwlju9g8Nup-rVDTWxB7x2NuOurpmRennqQbJUx6748tmn0XbrDWQZtrHII6mnFo4i/s1600/20__Reliving+Kannagi's+Life+Through+Places,+People.jpg

குட்டி ரேவதி

குளிர்கால ரயில்பயணம்

அன்றாட வாழ்வில் ரயில் பயணம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொருளாதார வசதிகள் பயணநேரத்தைக் குறுக்கும் விமானப்பயணத்திற்கு அனுமதிப்பதில்லை. நேரத்தை நீட்டித்தும் மெளனத்தைத் திடப்படுத்தியும் தொடரும் இரயில் பயணம் மிகவும் எனக்கு வழக்கமானதாகவும் அதனாலேயே பிடித்தமானதாகவும் ஆகிவிட்டது. சமீபத்தில், டில்லி வரையிலும் பின்பு அங்கிருந்து சண்டிகர் வரையிலும் பயணிக்க வேண்டித் தொடர்ந்த ரயில் பயணத்தில் குளிர் என்ற ஒரு புதிய நண்பரையும் உடன் கூட்டிச் செல்ல வேண்டியதாக இருந்தது. ஆரம்பத்தில் சில நச்சரிப்புகளோடும் குற்றங்குறைகளோடும் தொடங்கும் நட்பு சில பரிமாறல்களுக்குப் பின் புரிதல்களுக்குப் பின் பொருள்விளக்கங்களுக்குப் பின் நெருக்கமானதாகி விடுவது போன்று இருந்தது. என்றாலும் குளிரைப் பழக்கப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. மூன்று டிகிரி செல்ஷியஸைத் தொடும் அக்குளிர், இருபத்தைந்திலிருந்து முப்பது டிகிரி செல்ஷியஸ் கோடையின் வெப்பத்தை ஒரு கதாபாத்திரமாகவும் அன்றாட வாழ்க்கையாகவும் ஏற்றுக் கொண்ட நமக்கு முற்றிலும் மொழி புதிதான புரியாத ஒரு நண்பன் தான்.
கூதலுடன் பனிப் போர்வையினூடே நகரும் ரயில் கற்பனையானதொரு வெளிக்குள் நம்மை நகர்த்திச் செல்வது போலவே தோன்றுகிறது. பனிப்படலங்கள் விரிந்த வெளிக்குள் தோன்றும் கருவேல் உடை மரங்களும் பருத்தத் தெருநாய்களும் நீர்நிலைகளை கரை அலங்காரமாக்கிய வயல்வெளி வடிவமைப்புகளும் அதிகாலைத் தேநீர்க்கடைகளின் முன் தடித்தப் போர்வைகளுக்குள் புதைந்து தேநீரின் வெப்பத்தைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் மனிதர்களும் கடந்து செல்லும் சிறு ரயில் நிலையங்களும் குளிர்காலத்தின் தீவிரத்தையும் சொல்லித் தொலையாத நேரமாயைகளின் கவர்ச்சியையும் பற்றிய கதைகளை நமக்குச் சொல்லத் தொடங்குகின்றன. பெட்டிகளாளான ரயில் இக்கதைகளினூடே நம்மைச் சுமந்து செல்வது ஒரு விநோதமான அனுபவம் தான்.



எந்தப் பருவத்தையும் நிந்திப்பது மனிதனின் பொது வியாதி. கோடை என்றால் ‘மண்டையைப் பிளக்குற வெயில்!’ என்றும், குளிர் என்றால், ‘முதுகெலும்ப முறிக்குற குளிர்!’ என்றும் சலித்துக் கொள்வது அந்நிய நிலம் பற்றிக் குறிப்பு வரையும் பொதுவான மனித மனோபாவம் தான். ஆனால் அந்தச் சூழ்நிலைக்குப் பழகிக் கொள்ள அங்கங்கு நிலவும் வாழ்வியலின் அடித்தளப் பழக்க வழக்கங்களைப் பழக்கிக் கொள்ளும் போது அந்த விசித்திர பருவம் தனது கதைகளையெல்லாம் சொல்லத் தொடங்கி விடுகிறது. மூன்று நாட்களாகியும் டில்லியைச் சென்றடையாத தொய்வடைந்த ரயில் பயணத்தை, இது வரை படிக்காது விட்டு வைத்திருந்த நாவல்களைப் படிப்பதற்கான வேளையாக வைத்துக் கொண்டேன். இந்நேரங்களில் கதை சொல்லிகளாகி நாவலாசிரியர்கள் நம்முடைய இருக்கைகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். மானுடத்தின் தீராத பயணங்களைக் கதையோட்டமாகக் கொண்ட அந்நாவல்களைப் படித்த பின்பு ஏனோ உடலும் மனமும் தடித்த உணர்வும் புலனுணர்வுகள் கூர்மையடைந்த தேர்ச்சியும் ஏற்பட்டதான ஓர் அனுபவம். அந்த ரயில் பயணத்தின் உடை தைக்கப்பட்ட தன்மையுடனும் நிறத்துடனும் அந்த நாவல்களின் கதையோட்டம் இன்னும் நெஞ்சுக்குள் நெளிந்து கொண்டிருக்கிறது.



குட்டி ரேவதி

இன்று எனது 120-வது பயண நாள்!

இன்றைய வருடத்தின் என்னுடைய நூற்றி இருபதாவது பயண நாள். ஏதேச்சையாக டைரியைப் புரட்டி இந்த வருடம் பயணம் செய்த நாட்களை எண்ணிப்பார்த்த போது ஏறத்தாழ நான்கு மாதங்கள் அளவிற்கு பயணம் செய்திருக்கிறேன். சென்ற வருடம் இதைக் காட்டிலும் அதிகமாயிருக்கும். எழுத்தாளர் சிவகாமி அவர்களுடன் இணைந்து தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பயணித்து பெண்களிடையே அவர்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தோம். எங்களை ஒரு மூர்க்கமான நல்விசை அவ்வாறு பயணிக்கச் செய்தது என்றே சொல்ல வேண்டும். இவ்வாறு பயணிக்கவில்லையெனில் என் கூடு நூலாம்படை படர்ந்து வீச்சமடிக்கத் தொடங்கிவிடும் என்று நம்புகிறேன். எண்ணங்களைத் தீர்க்கவும் உடனுக்குடன் கருத்துக்களைப் புதிப்பிக்கவும் முக்கியமாக மனோபாவத்தை ஆரோக்கியமானதாகப் பேணவும் ஒவ்வொரு மனிதனுக்கும் பயணம் அவசியம் என்பது என் கருத்து. இந்த மாதத்தில் இன்னும் பன்னிரண்டு நாட்கள் பயணிக்க வேண்டியிருக்கிறது.

இன்று சேலத்தில் வந்து இறங்கியிருக்கிறேன். பாலின சமத்துவம் பற்றிய விழிப்புணர்வுக்கான பயிற்சிகள் அளிப்பதற்காக. தொலைதூரக் கிராமத்துப் பெண்களைச் சந்தித்து அவர்களுடன் சிந்தனைப் பரிமாற்றம் செய்ய வேண்டும். பாலின சமத்துவம் பற்றிய அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதுடன் என்னுடைய கருத்துக்களை அவர்களுடன் பரிமாறிக் கொள்ள வேண்டும். இன்னும் நான்கு நாட்களுக்கு இதுவே என் பணி. பெண்களை அதுவும் கிராமத்து, அடித்தட்டுப் பெண்களைச் சந்திப்பதை எனக்கே நான் அளித்துக் கொள்ளும் பயிற்சியாக வைத்துக் கொள்கிறேன். ஓர் அளவுமானி போல. பெண்ணியம் என்பது அதரப் பழசான வார்த்தை தான். என்றாலும் என்னளவில் அது தொடர்ந்து இயங்க வேண்டிய தேவையையும் எவர் மறுத்தாலும் அதன் பாதையில் நான் சீராகப் பயணப்படுவதில் என்னுடைய முழு கவனத்தையும் கோருவதாகவும் உணர்கிறேன்.

சேலத்தில் பெண் சிசுக் கொலை நிகழ்வது அன்றாடச்செயல்களில் ஒன்று. இன்று காலையிலும் செய்தித் தாளில் ஒரு செய்தி உண்டு: ஒரு பெண் தனது எட்டு மாதக் குழந்தையை மருத்துவமனையில் உட்கார்ந்திருந்த ஒரு முதிய பெண்ணிடம் கொடுத்து, ‘கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்! பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன்’, என்று சொல்லிவிட்டுச் சென்றவர் திரும்பவும் வரவே இல்லை. பெண் சிசுக் கொலை முன்பை விட இப்பொழுது குறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் பிரசவத்திற்குத் தாய்வீட்டுக்குச் சென்றவர் திரும்பி வரும்போது பிரசவத்தில் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறுவார். மேலும், பெண் குழந்தைகள் வளர்ப்பில் தொடரும் அலட்சியமும் வெறுப்பும் வேதனையை அளிக்கக் கூடியது. முதல் குழந்தை பெண் என்றால் தப்பித்தது. முக்கியமான இன்னொரு விஷயம் இளம் வயதுத் திருமணம். பெண்கள் தங்கள் பதினைந்து வயது வரைக் கூடத் தாமதிப்பதில்லை. அரை குறையான கல்வி. கல்வி துண்டிக்கப்படுவதன் காரணத்தைக் கேட்டால் வறுமை என்று கூறும் பெற்றோர் உடனே நடத்தப்படும் திருமணத்திற்குச் செலவு செய்யத் தயங்குவதில்லை. தான் ஒரு காவல் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்த ஒரு பெண், காதல் திருமணம் செய்து கொண்ட கணவனே படிக்கக் கூடாது என்று தடையிட்டதைக் கூறி அழுதார். பெண்களுக்கு எதையும் விட திருமண ஆசை இளம்பருவத்திலேயே தாயாலும் சுற்றியுள்ள பெண்களாலும் நாடி நரம்பெல்லாம் ஊட்டப்படுகிறது. அது ஒரு சொர்க்கம் என்பது போலத்தான் கழுத்தில் மாலையை வாங்கிக் கொள்கின்றனர். பின்னர் தான் அது பலி கொடுப்பதற்கான நிகழ்வு என்று விளங்குகிறது. இத்தகைய திருமணங்கள் ஆண்களையும் கண்டிப்பாய் வாட்டி வதைக்கத் தான் செய்யும்.

இன்று அத்தகைய பெண்களுடன் ஏழு மணி நேரம். நீண்ட உரையாக இல்லாமல் உரையாடலாக எல்லோரின் வாழ்வையும் பிளப்பாய்வு செய்வதான வேலையை எளிதாகவும் வருத்தமில்லாமலும் செய்து பார்த்தோம். கொஞ்சம் கொஞ்சமாய் வலி மருந்தை ஏற்றிப்பார்ப்பது போல. தொடர்ந்து கண்ணீர் முட்டும் விழிகள் சுடரும் வரை உடனிருக்க வேண்டியிருக்கும். கல்வி, வேலை, வருமானம், ஆரோக்கியம் என்பதெல்லாம் பெண்களுக்கு யாரோ வந்து கொடுக்கப் போவதில்லை. அதைப் பெறுவதற்கான ஊக்கமும் பிடிவாதமும் அவர்களே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதை ஏதும் பெற முடியாத பெண்கள் அன்றாட வாழ்வோடும் வறுமையோடும் கணவனோடும் நோயோடும் படும் பாடுகள் வேகவேகமாய் முதுமையைக் கூட்டி வருகின்றன. மேற்கண்ட எனது அனுபவத்திற்குப் பிறகு சேலம் என்ற நகரம் ஒளி மங்கிய தூங்குமூஞ்சி நகரத்தின் தோற்றம் கொள்கிறது என் நினைவில். கூட்டங்களில் கலந்து கொண்ட பானுமதியும் கீதாவும் ஒருவரோடொருவர் கை கோர்த்து சிரித்து சிரித்துக் களித்தது அவர்களின் நாற்பது வயதுக்கான அழகாகவும் இன்றைய நாளின் வெளிச்சமாகவும் தோன்றியது! மாலையினை இரவுக்குள் அழைத்துச் சென்ற பெருமழையும் இன்றைய நாளுக்கான வரவு தான்.


குட்டி ரேவதி