நம் குரல்

குளிர்கால ரயில்பயணம்

அன்றாட வாழ்வில் ரயில் பயணம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொருளாதார வசதிகள் பயணநேரத்தைக் குறுக்கும் விமானப்பயணத்திற்கு அனுமதிப்பதில்லை. நேரத்தை நீட்டித்தும் மெளனத்தைத் திடப்படுத்தியும் தொடரும் இரயில் பயணம் மிகவும் எனக்கு வழக்கமானதாகவும் அதனாலேயே பிடித்தமானதாகவும் ஆகிவிட்டது. சமீபத்தில், டில்லி வரையிலும் பின்பு அங்கிருந்து சண்டிகர் வரையிலும் பயணிக்க வேண்டித் தொடர்ந்த ரயில் பயணத்தில் குளிர் என்ற ஒரு புதிய நண்பரையும் உடன் கூட்டிச் செல்ல வேண்டியதாக இருந்தது. ஆரம்பத்தில் சில நச்சரிப்புகளோடும் குற்றங்குறைகளோடும் தொடங்கும் நட்பு சில பரிமாறல்களுக்குப் பின் புரிதல்களுக்குப் பின் பொருள்விளக்கங்களுக்குப் பின் நெருக்கமானதாகி விடுவது போன்று இருந்தது. என்றாலும் குளிரைப் பழக்கப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. மூன்று டிகிரி செல்ஷியஸைத் தொடும் அக்குளிர், இருபத்தைந்திலிருந்து முப்பது டிகிரி செல்ஷியஸ் கோடையின் வெப்பத்தை ஒரு கதாபாத்திரமாகவும் அன்றாட வாழ்க்கையாகவும் ஏற்றுக் கொண்ட நமக்கு முற்றிலும் மொழி புதிதான புரியாத ஒரு நண்பன் தான்.
கூதலுடன் பனிப் போர்வையினூடே நகரும் ரயில் கற்பனையானதொரு வெளிக்குள் நம்மை நகர்த்திச் செல்வது போலவே தோன்றுகிறது. பனிப்படலங்கள் விரிந்த வெளிக்குள் தோன்றும் கருவேல் உடை மரங்களும் பருத்தத் தெருநாய்களும் நீர்நிலைகளை கரை அலங்காரமாக்கிய வயல்வெளி வடிவமைப்புகளும் அதிகாலைத் தேநீர்க்கடைகளின் முன் தடித்தப் போர்வைகளுக்குள் புதைந்து தேநீரின் வெப்பத்தைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் மனிதர்களும் கடந்து செல்லும் சிறு ரயில் நிலையங்களும் குளிர்காலத்தின் தீவிரத்தையும் சொல்லித் தொலையாத நேரமாயைகளின் கவர்ச்சியையும் பற்றிய கதைகளை நமக்குச் சொல்லத் தொடங்குகின்றன. பெட்டிகளாளான ரயில் இக்கதைகளினூடே நம்மைச் சுமந்து செல்வது ஒரு விநோதமான அனுபவம் தான்.



எந்தப் பருவத்தையும் நிந்திப்பது மனிதனின் பொது வியாதி. கோடை என்றால் ‘மண்டையைப் பிளக்குற வெயில்!’ என்றும், குளிர் என்றால், ‘முதுகெலும்ப முறிக்குற குளிர்!’ என்றும் சலித்துக் கொள்வது அந்நிய நிலம் பற்றிக் குறிப்பு வரையும் பொதுவான மனித மனோபாவம் தான். ஆனால் அந்தச் சூழ்நிலைக்குப் பழகிக் கொள்ள அங்கங்கு நிலவும் வாழ்வியலின் அடித்தளப் பழக்க வழக்கங்களைப் பழக்கிக் கொள்ளும் போது அந்த விசித்திர பருவம் தனது கதைகளையெல்லாம் சொல்லத் தொடங்கி விடுகிறது. மூன்று நாட்களாகியும் டில்லியைச் சென்றடையாத தொய்வடைந்த ரயில் பயணத்தை, இது வரை படிக்காது விட்டு வைத்திருந்த நாவல்களைப் படிப்பதற்கான வேளையாக வைத்துக் கொண்டேன். இந்நேரங்களில் கதை சொல்லிகளாகி நாவலாசிரியர்கள் நம்முடைய இருக்கைகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். மானுடத்தின் தீராத பயணங்களைக் கதையோட்டமாகக் கொண்ட அந்நாவல்களைப் படித்த பின்பு ஏனோ உடலும் மனமும் தடித்த உணர்வும் புலனுணர்வுகள் கூர்மையடைந்த தேர்ச்சியும் ஏற்பட்டதான ஓர் அனுபவம். அந்த ரயில் பயணத்தின் உடை தைக்கப்பட்ட தன்மையுடனும் நிறத்துடனும் அந்த நாவல்களின் கதையோட்டம் இன்னும் நெஞ்சுக்குள் நெளிந்து கொண்டிருக்கிறது.



குட்டி ரேவதி

1 கருத்து:

சக்தி சக்திதாசன் சொன்னது…

அருமையான பதிவு. அழகாக ஆக்கப்பட்டுள்ளது. சொல்ல வந்த கருத்து எளிமையான் முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.

வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி