நம் குரல்

Love in the time of Cholera


இது காப்ரியல் கார்சியா மார்க்வெசின் நாவல். இந்த நாவலை, இதே பெயரில் அப்படியே திரைப்படமும் ஆக்கியிருக்கிறார்கள்.
இத்திரைப்படம், மார்க்வெசின் நாவலின் தன்மையிலிருந்து, பல நூற்றாண்டு காலம் தூரத்தில் பின்தங்கி இருந்ததைப் போல இருந்தது.
என்றாலும், மார்க்வெஸ் தன் புனைவுகளுக்கு எடுத்துக்கொண்ட கதைக்களம் குறித்து எனக்கு எப்பொழுதுமே தனிப்பட்ட ஆர்வம் உண்டு.
பெண் - ஆண் தமக்கு இடையேயான காதலை, நீண்டகாலத்திற்குத் தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளும் போராட்டமும் அதற்கான பயணங்களுமே மார்க்வெசின் முதன்மையான தேர்வாக இருந்திருக்கிறது.
ஏறத்தாழ, அவருடைய பெரும்பாலான கதைகள் இந்த விடயத்தை ஒட்டி இருந்ததாகவே உணர்கிறேன்.
Love in the time of Cholera - இந்தக்கதையில், ஐம்பத்து மூன்று வருடங்களாக ஒரு தன் காதலியைக் காதலிப்பவர் பற்றிய கதை.
காதலுக்கு, காலாதீதத்தையும் அதே சமயம் அந்த அகண்ட காலத்திற்குத் தக்கவைத்துக்கொள்ளும் தீவிர உணர்வெழுச்சியையும் கொடுப்பதில் மார்க்வெஸ் வல்லவர்.
நாவலாசிரியர்களிலேயே, இந்தப்பூமியின் காலஅட்டவணைக்குள் திணிக்காமல் காதலை நீட்சியடைய வைக்கும் திறன் கொண்டவர் என்றும் சொல்லலாம்.
அதே சமயம், உறவுகளிலேயே சமத்துவத்தைச் செயல்படுத்தக்கூடிய உறவு, காதல் தான் என்பதையும் இவருடைய அணுகுமுறையில் காணலாம்.
இப்படி, கதையின் வழியாக மனதைப் பீடிப்பதிலும் சில நாட்களுக்குத் தொடர்ந்து கனவுக்கான முதல் கற்பனைகளை வழங்குவதிலும் மார்க்வெஸ் தனித்தப்படைப்பாளியாக இருக்கிறார்.
புனைவு என்றால், யதார்த்தைக் கதையாகத் திரித்தல் அன்று; எழுத்தின் வழியாக, ஆகச்சிறந்த கற்பனையை வனைவதே புனைவு என்பதையும் இவர் நாவல் புலப்படுத்தும்.
'இண்டர்ஸ்டெல்லார்' படத்தில் ஒரு வசனம் வரும். 'காதல், மனிதனின் அரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று' என்று.
இதற்கான அத்துணை முக்கியத்துவத்தையும் இந்தக்கதையில் உணரலாம்.
இத்திரைப்படம், மார்க்வெசின் நாவலின் தன்மையிலிருந்து, பல நூற்றாண்டு காலம் தூரம் பின்தங்கி இருந்ததைப்போல் இருக்கிறது.
ஆனால், காதலைச் சொல்லும் விதத்தில், மார்க்வெஸ், அடுத்த நூற்றாண்டு நவீன மனிதனுக்கும் கூட நெருக்கமானவராய் இருப்பார் என்று தோன்றுகிறது.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: