நம் குரல்

கலைஞர்கள் எனப்படுவோர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!


தமிழில் தான் கலைஞர்கள் எனப்படுவோர், எந்தத் தன்மான உணர்வுமின்றி, பாலியல் வல்லுறவு செய்தோரை விருந்தினராய் அழைக்கலாம்.

கலைஞர்கள் எனப்படுவோர், பெண் படைப்பாளிகள் ஊடகங்களின் வெளிச்சத்திற்கும், ஊடகங்களுக்கும் இரையாகித்தான் படைப்பாளிகள் ஆகின்றனர் என்ற உண்மையை உலகம் அறியச்செய்திடுவார்கள்.

இந்தக்கலைஞர்கள் எனப்படுவோருக்கு, பெண்குழந்தைகளே இருப்பதில்லை.

நாளை உலகம், பெண்களான இவர்களுக்கு அளிக்கும் சவால்களையும் இக்கலைஞர்கள் எனப்படுவோர் அறிந்திடவேண்டிய அவசியமில்லை. இது ஒரு சிறப்புத்தகுதி.

கலைஞர்கள் எனப்படுவோர் எத்தனை மனைவியர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். காதலியரும். ஏனெனில் அவர்கள் கலைஞர்கள் எனப்படுவோர். எந்த ஒரு மனைவிக்கும் காதலிக்கும் அவர்கள் நலனுக்கும் இவர்கள் பொறுப்பேற்கவேண்டியதில்லை.
ஏன் தனக்கே கூடப்பொறுப்பேற்கவேண்டியதில்லை.

கலைஞர்கள் எனப்படுவோர் உழைக்கவேண்டியதே இல்லை. ஊர்சுற்றித்திரிந்து, மேடைகளில் பேசினாலே போதுமானது.

கலைஞர்கள் எனப்படுவோர் எந்த ஏற்றத்தாழ்வையும் பாராட்டலாம். ஏனெனில், இதுவே கலை எனப்படுவது.
கலைஞர்கள் எனப்படுவோர் ஒரு கவிதைத்தொகுப்பு வெளியிட்டுவிட்டாலும் போதுமானது. அது தாண்டிய விழிப்புணர்வும் நல்லிணக்கமும் அவசியமே இல்லை.

கலைஞர்கள் எனப்படுவோருக்கு மூட ரசிகர்களும் அவசியம். குருகுலமும் அவசியம். அடிமைகள் அவசியமோ அவசியம்.

கலைஞர்கள் எனப்படுவோர் கண்டிப்பாய், மதுவருந்துவதைப் பழக்கமாய்க் கொண்டிருக்கவேண்டும். சொந்தமாக உழைத்த பணத்திலிருந்தும் வாழ்ந்திடக்கூடாது. அடுத்தவர் பாக்கெட்டிலிருந்து பறித்த பணமாகத் தான் இருந்திடவேண்டும்.
ஏனெனில், பணம் ஒரு நல்லபொருள் அன்று.

கலைஞர்கள் எனப்படுவோர் குறிப்பாக, இந்துமதச்சிந்தனைகளைத் தான் முன்மொழிந்திட வேண்டும். ஏனெனில், அது தான் ஆண்களின் பாலியல் வல்லுறவை சபையிலோ, மேடையிலோ ஒரு குற்றமாக, ஆண்களின் ஓர் இழுக்காகக் கிஞ்சித்தும் சொல்வதில்லை. ஆண்மையின் இலட்சணமாகப் போற்றுகிறது.

கலைஞர்கள் எனப்படுவோர் ஆயிரம் பக்கங்களில் நூல்கள் வெளியிட்டாலே போதும். வேறு எந்த சிறப்பு நலனும், பயிற்சியும், ஒழுக்கமும் தேவையில்லை. சமூகத்தின் நன்னம்பிக்கையைப் பெறவேண்டியதில்லை.

கலைஞர்கள் எனப்படுவோர் கறுப்பாய் இருப்பவர் தவறானவர்தான் என்று சொல்லவும் அதிகாரம் பெற்றவர்.

கலைஞர்கள் எனப்படுவோர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எதற்கும், யாருக்கும் பொறுப்பேற்கவேண்டியதில்லை. அவர்கள் வாழ்வின், இந்தக்கணம் முக்கியம். மிக, மிக முக்கியம்.
ஏனெனில், அவர்கள் கலைஞர்கள் எனப்படுவோர்.


குட்டி ரேவதி

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

உண்மையை முச்சந்தியில் அவிழ்த்த கட்டுரை.