நம் குரல்

கலைஞனும் வாழ்வும்

ராஜபார்ட் ரங்கதுரை படத்தை மட்டும் சமீபத்தில் மூன்று முறை பார்த்துவிட்டேன். மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கான நிறைய காரணங்களைப் படம் கொண்டிருக்கிறது. தூர்தர்ஷனில், குடியரசுதினத்திற்கு முந்தைய நாளும் ஒளிபரப்பினார்கள்.நீங்களும் எப்பொழுதாவது பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மேடை நாடகப்பின்னணியைக் கொண்ட கதை என்று மட்டுமல்லாமல், சங்கரதாஸ் எனும் மேதை, புராண நாடகத்திலிருந்து விடுதலை எழுச்சி நாடகம் நோக்கி காலம் நேர்த்தியாக முன்னகர்ந்திருப்பது, கலையையும் வாழ்வையும் ஒருசேரத் தன் தோள்களில் தாங்கும் கலைஞன், எதன் பொருட்டும் துயர்தாங்கும் வல்லமையை இழக்காதிருக்கும் நாயகன், அவனது கர்வம், கம்பீரம், எந்த ஏழ்மையிலும் உருக்குலையாதிருத்தல், சிறிய மனிதக்கூட்டத்திற்கேனும் தனிமனிதனாகப் பொறுப்பு ஏற்கும் அக்கறையும் பக்குவமும் என்று கதாநாயகன் தன் ஆளுமையால் விரிந்து கொண்டே இருப்பதை இப்படத்தில் உணரமுடிகிறது.
சொல்லப்போனால், மேடைநாடகவரலாற்றின் போக்கையும் சிக்கல்களையும் சவால்களையும் சொல்லியபடியே ஒரு குடும்பக்கதையைச் சொல்லியதுடன் இல்லாமல், முதலாளி - தொழிலாளி வர்க்கமோதலையும் முன்வைத்திருப்பார்கள், இயக்குநரும் கதையாசிரியரும். 
புராண, அடிமைத்தனக்கதைகள் சொல்லிவந்த கலைஞர்கள், தம் கலை நலியத்தொடங்கும் போது,  அதன் காரணத்தை ஆய்ந்துணரும் இடம் வெகுசிறப்பான இடம்.  மக்கள் தமக்குத்தேவையான சமூகவிடயங்கள் கிடைக்காத ஒன்றிலிருந்து விலகிச்செல்வார்கள், என்று உணர்ந்து விடுதலை எழுச்சிக்கருத்துகளை நாடகங்கள் வழியாகச் சொல்லத்தொடங்குவது என்று அவ்விடத்திலிருந்து முடிவெடுப்பார், கதைநாயகன்.  உறவும் உற்றார் உறவினரும் கலைஞர்களைப் புறக்கணிக்கையில்,  கடைசியில் ஒடுக்கப்பட்ட மக்களே, நலிந்த கலைஞர்களுக்கு உதவமுன்வருவார்கள். பகத்சிங் நாடகம் மேடையேறும். நாமும் தனிமனிதரிலிருந்து நாட்டுணர்வாளராக மாறியிருப்போம்.கதைத்தளத்தில், கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதைக் கூட மிகவும் நேர்த்தியான இடத்தில் நிறுத்தியிருப்பார். 

'அம்மம்மா, தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்' பாடல் தனிப்பட்டவிதத்தில் என்னை நெகிழச்செய்தது. பழிவாங்கல் உணர்வும், சகிப்புதன்மையற்ற குணங்களும் மட்டுமே கதாநாயகன் என்று சொல்லப்படுகிற காலகட்டத்தில், எந்தத்துயரையும் தாங்கும் வலுவும், கொடிய ஏழ்மையிலும் தன் உருசிதையாதிருக்கும் ஆளுமையும் கொண்ட கதாநயாகன் சிவாஜி மீது காதல் எழுகிறது.அப்படியான மனிதவாழ்வுடன் தான் மனம் தன்னை இணைத்துப்பார்த்து உவகை கொள்கிறது. ஒரு சரியான சினிமா தான், நம் மனதில் எவ்வளவு விடயங்களைச் சாதித்துவிடுகிறது!

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: