நம் குரல்

பெண் கவிஞர்களின் தற்கொலை



2001 -ல் ஸில்வியா ப்ளாத்தின் கவிதைகளை மொழிபெயர்த்து நூலாகக் கொண்டுவருவது என முடிவு செய்து அவரது அறுபதுக்கும் மேற்பட்ட கவிதைகளைத் தமிழுக்கு மொழியாக்கும் பணியில் ஈடுபட்டேன். ஆனால் இந்த வருடம் தான் அதை நூலாக்கம் செய்ய முடிகிறது. அவர் கவிதைகளை மொழிபெயர்க்க ஆரம்பித்த பொழுது அவரது வாழ்க்கை பற்றியும் இலக்கியச் செயல்பாடுகள் பற்றியும் முழுமையாக அறிந்தால் தான் அவர் வார்த்தைகளின் பொருத்தப்பாட்டை அறியக்கூடும் என்றுணர்ந்து அவரது மற்ற நூல்களையும் தேடிப்பிடித்து வாசித்தேன். அப்பொழுது இணைய வசதியை இன்றைய அளவிற்கு உபயோகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைக் கைவரப் பெற்றிருக்க வில்லை என்பதால் சென்னையின் அத்தனை ஆங்கில நூலகங்களுக்கும் சென்று அவர் படைப்புகளையும் படைப்புகள் பற்றிய குறிப்பிட்ட விமர்சன நூல்களையும் சேகரித்தேன். ஒரு பெண்ணின் அகண்ட கவிதை உலகத்திற்குள் பயணிக்கும் சுவாரசியமும் ஈர்ப்பும் என்னைப் புதைக்குழிக்குள் இழுத்துச் செல்வதைப் போன்ற இழுவிசையைக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

எல்லோரின் வாழ்க்கையிலும் போல என் வாழ்க்கையிலும் கருப்பான நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. ஸில்வியா ப்ளாத்தின் துயர் நிறைந்த உலகம் இன்னும் அதிகமான கனத்துடன் என் இமைகளை அழுத்தியது. என் வாழ்வைச் சூழ்ந்த இருளை இன்னும் காரிருளாய் ஆக்கியது போல் இருந்தது. அவர் கவிதைகளில் கையாண்ட நுட்பமான படிமங்கள் புதிய எழுச்சியும் தீவிரமுமான கவிதை இயக்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தினாலும் அவை மனஉளைவு நிறைந்த உலகிலிருந்து எழும் படிமங்களோடும் அவற்றிற்குரிய அழகியலோடும் மொழியானவை என்பதால் அதனுள் நுழையும் போதெல்லாம் யதார்த்தத்திற்கு ஒரு பொழுதும் மீளவே முடியாத ஒரு பால்வெளிக்குள் பிரவேசித்தது போல் உணர்ந்தேன். என் இலக்கிய வாழ்வில் நிகழ்ந்தவற்றையும் நவீன தமிழ்க் கவிதையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த பெண் கவிஞர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டிருந்தவைகளையும் ஸில்வியா ப்ளாத்தின் வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த பொழுது நிரந்தர ஒற்றுமைகள் இருந்ததாய் உணர்ந்தேன். அதே சமயம் ஒரு பொழுதும் ஒளியின் வெளியில் திறக்காத எதிர்முனையுடைய சுரங்க வழிக்குள் பயணிப்பதைப் போன்ற உணர்வு தோன்றவே ஸில்வியா ப்ளாத்தினுடான நிழற்பயணத்தைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டேன்.


பெண்கவிஞர்களுக்கும் தற்கொலைக்கும் தொடர்பு இருப்பதாக நிறைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஸில்வியா ப்ளாத்தின் நெருங்கிய நண்பரான ஆன் செக்ஸ்டனும் ஸில்வியா ப்ளாத்தைப் போலவே தற்கொலை செய்து கொண்டவர். ‘தற்கொலைஎன்பது கவிதைக்கு எதிரான துருவம் என்று நம்பும் இவர், கவிதையில் மூர்க்கமாக இயங்குவது அல்லது தற்கொலையில் ஈடுபடுவது இவை இரண்டும் தாம், தம் முன்னிற்கும் உண்மையான சவால்களாக இருக்கும் என்று நம்பினார். தற்கொலை வழியான மரணம் தான் அவர்கள் இருவரையுமே உண்மையானவர்களாக ஆக்கும் என ஸில்வியா ப்ளாத் பற்றிய தன் நேர்காணலில் குறிப்பிடுகிறார். மேலும், வேறு புனைபெயரில், விக்டோரியா என்று நினைக்கிறேன், ஸில்வியா ப்ளாத் எழுதிய ‘த பெல் ஜார்என்ற நாவல் அவரது முதல் தற்கொலை முயற்சியைப் பற்றியது.


ரஷ்யப் பெண் கவிஞர் இவானோவா ஸ்வெட்டேவா, பெண் பாலிமை பற்றியும் ஒரு பெண் தன் அந்தரங்க வாழ்வு மற்றும் பொது வாழ்வு என்ற இரண்டு நிலைகளுக்கு இடையே உட்படும் பதற்ற இழுவிசைகளைப் பற்றியும் உணர்ச்சிப்பூர்வமான கவிதைகளை எழுதியவர். தன் அரசியல் பார்வைகளைத் தீவிரமான மொழியில் முன்வைத்ததால் நாடு கடத்தப்பட்டவர். தன்னை, ‘தன்னுணர்ச்சிக் கவிதையின் நாயகிஎன்று அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர், ஒரு பஞ்சத்தின்போது தனது மகள்களைப் பறிகொடுத்தார். மன உளைச்சல் தாங்காமல் 1941-ல் தற்கொலை செய்து கொண்டார். நாடியா அஞ்சுமான் என்ற ஆப்கானிய கவிஞர் 2005- ல் தனது இருபத்தைந்தாவது வயதில் தற்கொலை செய்துகொண்டார். அவரது ஒரு கவிதைத் தொகுப்பு அவரது குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் இழிவைக் கொண்டுவந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டார். மன அழுத்தம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டார் நாடியா. பெண்கவிஞர்களுக்கும் தற்கொலைக்குமான தொடர்பு நிரந்தரமானது என்பதற்கு ஆங்காங்கு உலகெங்கிலும் பெண்கவிஞர்கள் தற்கொலை செய்து கொள்வது மட்டுமே போதுமான ஆதாரம் இல்லை. அவர்கள் கவிதைகளில் இடம் பெறும் தற்கொலை பற்றிய தொடர்ந்த கவிதை முயற்சிகளும் தாம்.


ரீதிகா வஸிராணி என்ற இந்தியப் பெண் கவிஞர் ஐக்கிய நாடுகளுக்குக் குடிபெயர்ந்தவர். கவிதை இயக்கத்திற்கு முழுதுமாய்த் தன்னை ஒப்புக் கொடுத்த கவிஞர். அங்கு வாழ நேர்ந்த போது தன் மூன்று வயது மகனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். பெண் பாலிமை பற்றிய பதற்றங்கள் அவரை ஆக்கிரமித்திருந்ததுடன் தன் உடல் மீதான இருபண்பாட்டு மோதல்கள் நிரந்தர அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கின. விர்ஜினியா வுல்ஃப் தனது தற்கொலைக் குறிப்பில் இவ்வாறு எழுதி வைத்தார்: ‘மீண்டும் எனக்குப் பைத்தியம் பிடிக்கப் போகிறது என்று நான் உறுதியாக உணர்கிறேன். மீண்டும் அது போன்ற கொடூரமான காலங்களைக் கடந்து செல்ல என்னால் முடியாது என்றும். இம்முறை நான் மீளவே மாட்டேன். நான் அந்தக் குரல்களைக் கேட்கத் தொடங்கி விட்டேன்’.


நாவலாசிரியர், நாடகாசிரியர், கட்டுரையாசிரியர் ஆகிய படைப்பாளிகளைப் போலன்றி கவிஞர்கள் தாம் சமூகத்தின் மையத் தளத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர். சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல இருக்கின்றனர். அல்லது பூடகமான காரணங்களால் நாடு கடத்தப்படுகின்றனர். கவிஞர்கள் மற்ற படைப்பாளிகளைப் போல சொகுசுகளை அனுபவிப்பதில்லை. நீண்ட நாள் மனஅழுத்தமும், பருவத்திற்குப் பருவம் அதிகரிக்கும் தனிமையும், தயக்கமும், நிரந்தரமான இதயத் தளர்ச்சியும் அவர்களை ஆட்படுத்த உடல் நொறுங்கிப் போகின்றனர் என்று சொல்லப்படுகிறது.


அதிலும் ஆண் கவிஞர்களினும் பெண் கவிஞர்களே இம்மாதிரியான விளிம்பிற்கு நிரந்தரமாகத் தள்ளப்படுகின்றனர் என்றும் அதற்கான தீர்வாக தற்கொலையைத் தேர்வு செய்கின்றனர் என்றும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதற்குக் காரணங்கள் பல. இரு மனிதர்களுக்கு இடையே நிலவும் அந்தரங்க உறவிற்கு பெண்கள் கொடுக்கும் அளவிற்கு முக்கியத்துவத்தை ஆண் படைப்பாளிகள் கொடுப்பதில்லை. பொதுமக்களின் விமர்சனங்களை எதிர்கொள்ள உச்சபட்ச படைப்பூக்கம் தேவைப்படுகிறது. அதை தத்தம் குடும்பங்களை விலக்கிவைத்து விட்டும் ஆண் படைப்பாளிகளால் எளிதாகச் சம்பாதித்து விட முடிகிறது. பெண்படைப்பாளிகளால் தம் சூழலில் உள்ளவர்களின் அன்றாடத் தேவையை முற்றிலுமாய்ப் புறக்கணித்துவிட்டு சுயநலமாக இருக்கமுடிவதில்லை. அடுத்ததாக, படைப்பூக்கமும் தீவிரமும் கொண்டு இயங்கும் பெண் கவிஞர்கள் தாம் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மேலும், பெண்படைப்பாளிகளின் கவிதைகளின் மீது வைக்கப்படும் எதிர்ப்பார்ப்புகளின் அளவிற்கு ஆண் படைப்பாளிகளின் படைப்புகள் மீது வைக்கப்படுவதில்லை. அந்த எதிர்பார்ப்பே இல்லை. ஆண்கள் என்ன எழுதினாலும் இலக்கியம் தான் என்ற மொண்ணையான பொது அபிப்ராயம். இம்மாதிரியான சமூக எதிர்வினைக்கு ‘ஸில்வியா ப்ளாத் விளைவுஎன்று பெயர். வலிந்து தன்னை விருதுகளிலிருந்தும் பாராட்டுகளிலிருந்தும் விலக்கிவைத்துக் கொள்ளும் கவிஞர்கள் தாம் படைப்பூக்கம் மிக்கவர்களாக இருக்கின்றனர். இவர்கள் இயல்பாகவே அதிக மன அழுத்தத்திற்கும் தனிமைக்கும் உள்ளாகின்றனர்.



ஒருமுறை, ‘பனிக்குடம்இதழுக்காக கவிஞர் இன்குலாப் அவர்களை நேர்காணல் செய்த பொழுது அவர் கூறியது, ‘ஒவ்வொரு கவிதை எழுதிய பின்னும் நான் இளைத்துப் போகிறேன்’. நாவல், சிறுகதை, நாடகம் ஆகியவை கவிதைக்கு நிகரான உழைப்பைக் கோரினாலும் அதற்கு இணையான உணர்ச்சி வயப்படலையும் ஈடுபாட்டையும் கோருவதில்லை. அப்படிக் கொடுத்தால் ஒன்றும் நிராகரிப்பதில்லை என்றாலும் கவிதையின் மையமான உணவே உணர்வீர்ப்பு தான். ஆகவே தான் கவிஞர்கள் மற்ற படைப்பாளிகளினும் குறைந்த ஆயுளைக் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றது ஓர் ஆராய்ச்சி. தற்சிதைவு, அவமரியாதை போன்றவற்றால் கவிஞர்களின் ஆயுள் குறைகிறது. கவிஞர்களின் படைப்புகளில் கவிஞர்களின் உளவியல் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் மன அழுத்தம் எழுத்தாளர்களை எவ்வாறு பாதிக்கிறது என்றும் ஓர் ஆரோக்கியமான சமூகத்தால் தான் சிந்திக்க முடியும்.


சமூகம், பொதுவாகவே கவிஞர்களை இந்தப் பிரபஞ்சத்திற்கான உயிரிகளாகப் பார்ப்பதில்லை. ஆகவே அக்கவிஞர்கள் கவிதைகளுக்குள் வேறொரு உலகை நிர்மாணித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. அந்த உலகம் யதார்த்தத்திலிருந்து வெகுதொலைவில் உருவாக்கப்படுகின்றது. அதிக வல்லமையை இறைஞ்சுகின்றது. அந்த உலகத்திற்கு மிக அருகில் தான் மரணமும் வறுமையும் காத்திருக்கின்றன போலும்.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: