நம் குரல்

இரண்டடுக்குச் சிந்தனை - 2

மிகப் பெரிய மருத்துவமனைகளின் இரவு நேரப் பொழுதுகள் அவசரங்களாலும் அழுகைகளாலும் நிறைந்தவை. விடியும் பொழுது நோயாளிகளின் உடன் வந்தவர்களின் இமைகள் தடித்துப் பழுத்துப் போயிருக்கும்.

குழந்தைகளின் உலகில் பயம் குறித்த கற்பனையோ பயிற்சியோ இல்லை என்பதால் அவர்கள் தொடர்ந்து சாகசங்களை உருவாக்கிய வண்ணமே இருக்கிறார்கள்.

எப்பொழுதும் அருகருகே இருந்தாலும் அடுத்தவர் சிந்தனை ஓட்டத்தைத் துல்லியமாக அறிந்து கொள்ளமுடியாத புதிர் நிலை, மானுடத்தை வன்முறையின்றி புத்துயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக.

அவரவர்க்குப் பிடித்தமான உணவு அவரவர் உடல் இயல்பைப் பற்றிச் சொல்கிறது.

முப்பரிமாண கற்பனைவெளிதான் சினிமாவை மனிதனுக்கு முற்றிலும் விந்தையானதொரு வடிவாக்குகிறது.


இப்படியாக நிகழ்ந்து விட்டதே என்ற புலம்பலில் ஏன் அப்படி நிகழ்ந்தது என்பது புலப்படாமல் போகவே ஓர் அனுபவத்திற்கான ரேகையை இழந்துவிடுபவர்கள் எவருமே வேடிக்கைக்கு உரியவர்கள்.

யாரிடமுமே தன்னை முழுமையான உண்மையுடன் வெளிப்படுத்திக் கொள்ள முடியாத வாய்ப்பின்மையால், தான் என்ன விதமான எண்ண மாற்றங்களால் நெய்யப்பட்டவள் என்பதை ஒரு பொழுதுமே அறியாமல் போகிறாள் பெண்.


ஒரு வாசகர் தனக்குப் பிடித்தமான எழுத்தாளரைச் சந்திக்கும்பொழுதெல்லாம் தன்னிலும் நேர்மையான ஒரு வாசகரையே சந்திக்கிறாரே அல்லாமல் எந்த வகையிலும் அந்த வாசகரையும் விட உசத்தியானவரையன்று.


ஒரே ஓர் ஆணுடன் அல்லது ஒரே ஒரு பெண்ணுடன் தான் வாழ்க்கை முழுதுமாய் வாழ்வதாய் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்களின் நிறைய எண்ண நிலைகள் வழியாகவெல்லாம் வாழ்ந்து வெளியேறிய பின் நிறைய மனிதர்களுடன் ஒரே சமயத்தில் வாழ்ந்து தீர்த்த மனோநிலையைத் தான் வந்தடைந்திருக்கிறோம். வாழ்க்கை அத்தனை இலட்சம் எண்ண நிலைகளினினும் நீளமானது.

காடு என்பது முற்றிலும் கற்பனையானதொரு திணைவெளி. இல்லையெனில் உங்களின் கற்பனையில் காடு வேறாயும் என் கற்பனையில் பிறிதொன்றாயும் இருப்பது எப்படித்தான் சாத்தியம்!

ஃபேஷன் ஷோ பெண்களின் உடலசைவுகள் மிருகங்களின் உடல் மொழிகளால் நவீனம் பெறுகின்றன. மனிதப் பரிணாமத்தின் திசைஎதிர் வடிவம்.



குட்டி ரேவதி

2 கருத்துகள்:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

எல்லாமே அருமை

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் சொன்னது…

//மிகப் பெரிய மருத்துவமனைகளின் இரவு நேரப் பொழுதுகள் அவசரங்களாலும் அழுகைகளாலும் நிறைந்தவை. விடியும் பொழுது நோயாளிகளின் உடன் வந்தவர்களின் இமைகள் தடித்துப் பழுத்துப் போயிருக்கும்.//

மிகச் சமீபத்தில் நான் உணர்ந்த உண்மை. அந்த இரவு மட்டும் விடிவதற்கு வெகுநேரம் எடுத்துக்கொள்வது தான் பெரிய கொடுமை!