நம் குரல்
அடுப்பு எனும் கவிதையும் சொல்மயக்கமும்
அடுப்பு
ஒவ்வொரு முறையும் கிழவியின் பேச்சில்
அடுப்பு பற்றிய அங்கலாய்ப்பே மிகையாய்
அப்படி ஒன்றும் பொங்கிப்போட
அவளுக்கென்றும் ஆளில்லை
ஆனாலும் அடுப்பின் சம்பவமே
அவளின் அலுப்பிலெல்லாம் புகையும்
‘அடுப்பில பூனை உறங்குது!’
‘அடுப்பு தான பொம்பிளைக்கு ஆற்றல் சாதனமாக்கும்!’
‘அடுப்பு ஊதறதுக்குப் புல்லாங்குழலு எதுக்கு?’
‘ஈர விறகுப்புகைச்சலில் அடுப்பிலே தீ ஏறாது!’
‘சூடுகண்ட பூனை அடுப்பங்கரையில சேருமா, என்ன?’
‘பிச்சைக்காரனுக்குப் பயந்து அடுப்பை மூட்டாமல் இருப்பேனா?’
‘அடுப்பு ஊதினா கண்ணுல தீப்பொறி விழத்தான செய்யும்?’
‘யார் மூட்டினாலும் அடுப்பு எரியத்தான் செய்யும்!’
‘அடுப்புல தீ எரிஞ்சா வயித்துப்பசி தீருமா?’
‘அடுப்புல நெருப்பில்லாம புகையுமா?’
வாதம் செய்தால் ஊதிப்பெரிதாக்குவாள்
அடுப்பின் நினைவுகளைக் கிண்டிக்கொண்டிருந்த கிழவி
மழையடங்கிய இரவில் ஒருநாள்
மரித்துத் தனியே எரிந்த போது தெரிந்தது
அடுப்பு என்று தன் கருப்பையைத் தான் கூறினாள் என்று.
சொற்களும் சொல்மயக்கங்களும் கலந்த சிக்கலான மொழியின் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. பல சமயங்களில் நாம் என்ன நினைக்கிறோமோ அதையே அர்த்தப்படுத்தும் சொற்களை நாம் பயன்படுத்துவதில்லை. அல்லது, சொற்களின் அர்த்தத்தைப் பிறழ்வாகப் புரிந்து கொண்டு வேறு அர்த்தங்களுடன் நம்மை அணுகுகிறார்கள். ஒரே சொல்லை நீங்களும் நானும் வேறு வேறு அர்த்தத்தில் புழங்குகிறோம். ஆனால், நீங்கள் உங்களுடைய அர்த்தத்தின் ஒற்றைக் கயிற்றிலும் நான் என்னுடைய அர்த்தத்தின் ஒற்றைக் கயிற்றிலும் தொங்கிக்கொண்டிருக்க, இரண்டையும் ஒரே சொல்லாக்க அல்லது ஒரே அர்த்தமாக்க ஊசலாடுகிறோம். அல்லது ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் கவிதையிலும் பேச்சிலும் உரையாடலிலும் வேறு வேறு அர்த்தத்தில் பயன்படுத்தி அச்சொல்லின் வேறு காலத்தைச் சென்றடைந்திருக்கும் போது, அந்தச் சொல்லின் கற்கால அர்த்தத்துடனோ அல்லது வழமையான சலிக்கப்பட்ட அர்த்தத்துடனோ நீங்கள் அதே சொல்லை வேறு ஒரு சொல்லாக்கி என்னை நெருங்குகிறீர்கள், நான் வெறுமனே ஒரு கவிஞர் மட்டுமே என்பதை மறந்து போய்.
நாம் மொழியை அணுகவும் அதைக் கையாளவும் ஒரு நேரடியான முறையைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. அதற்கு ஒரே வழி, ஒருவரையொருவர் உணர்வு ரீதியாக அணுகுவதும், அதற்கு மொழியை ஒரு துணைக்கருவியாக மட்டுமே பயன்படுத்துவதும். சொற்கள் இவ்விடத்தில், நவீன அர்த்தத்தையும் தற்கால அரசியலையும் பெற்று பொலிவுறுகின்றன. சொற்கள், இங்கே தான் தம் சுமையை இறக்கி வைத்து இளைப்பாறுகின்றன. அனாவசியமான சொற்கள் நெஞ்சுக்கூட்டிற்குள் தணலாய்க் கனன்று கொண்டிருக்கவேண்டியதில்லை. உணர்வின் பிணைப்புகள், அச்சொற்களின் தீயை அணைக்க வல்லன. மொழியியலாளன், சொற்களுக்கு உணர்வை ஆணையிடட்டும். கவிஞரோ, உணர்வுகளிலிருந்து சொற்களை அவிழ்த்துவிடட்டும்.
’அடுப்பு’ கவிதை கணையாழியில் பிரசுரமாகியிருக்கிறது. மேற்குறிப்பிட்டிருக்கும் சொல்மயக்கம் பெண்ணின் தரப்பில் கூடுதல் அர்த்தம் பெறுவதையும் அர்த்தம் அழிவதையும் சுட்ட முயன்றிருப்பாளாய் இருக்கும் அந்தக் கிழவி!
குட்டி ரேவதி
நன்றி: கணையாழி
கணையாழி இதழ் வெளியீடும் இலக்கியப்பண்பாடும்
கணையாழி மீண்டும் வரப்போகிறது என்றும் அதற்குப் படைப்புகள் தரமுடியுமா என்றும் அதன் ஆசிரியர் ம.ராசேந்திரன் அவர்கள் கேட்டார். இதழ்களுக்கென்றே சில கவிதைகளை எழுதி அனுப்பினேன். கடந்த சில வருட இணைய புரட்சிக்குப் பின்னும் இம்மாதிரி இதழ்களுக்குக் கவிதைகள் அனுப்பி, அவை பிரசுரமாகும் வரைக் காத்திருந்து, இதழ் வாங்கிப் பார்ப்பது உற்சாகத்தையும் பரவசத்தையும் ஒரு சேரத்தருகிறது. எழுத வந்த தொடக்கக் காலங்கள் இவ்வாறு ஒவ்வொரு இதழுக்கும் கவிதைகள் அனுப்பி அவை தொடர்ந்து பிரசுரமாவதை எதிர்பார்த்திருப்பேன். இவ்வாறான தொடர்ந்த முயற்சிக்குப் பின் ஒரு கவிதை தொகுப்புக்கான கவிதைகள் சேர்ந்ததும் பதிப்பாளரை அணுகி அவற்றை நூலாக்குவது தான் என் வழக்கமாக இருந்தது.
இம்மாதிரியான முறை, எழுதும் மனதுக்கு பள்ளிக்கூடக் காலங்களின் அதே மெனக்கெடல் உணர்வைத் தருகிறது. அதிலும் சீரிய இதழ்களுக்குக் கவிதைகள் எழுதுவது, அவ்விதழின் பிற படைப்புகள் பெறும் அடையாளங்களுக்கு இடையில் நம் கவிதைகள் இடம்பெறுவது நாம் முன்வைக்கும் சிந்தனைகள் வழி நாம் நிற்பதற்கான நெஞ்சுரத்தையும் அது குறித்த விசாரணைகளையும் தொடர்ந்து நமக்கு எழுப்பும். இது இன்னும் இன்னும் நமதென முன்மொழியும் சிந்தனையின் வழி நுணுகிய பயணத்தையும், ஒற்றையான நடையையும் கூட மேற்கொள்ள ஊக்கப்படுத்தும். காலந்தோறும் கவிதையின் உருவம் தன் கைப்பிடித்து தனக்குள்ளே வளர்ந்து வரும் அனுபவத்தை சீரிய இதழ்ப்பணியில் தொடர்ந்து ஈடுபடுபவர்களால் உணரமுடியும்.
கணையாழி இதழ் வெளியீடு மிகவும் தீவிரமானதொரு தொனியில் நிகழ்ந்தேறியது. முந்தைய தலைமுறை படைப்பாளிகள் இலக்கியம் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், படைப்புப்பணியில் இருந்த ஈடுபாட்டையும் வெளிப்படையாக உணரமுடிந்தது. இன்றைய இலக்கிய விழாக்கள் ஆர்ப்பாட்டங்களுடன் நடந்து நிறைவேறுவது வழக்கமாகிவிட்ட நிலையில், கணையாழி இதழ் வெளியீட்டு விழா முற்றிலும் மாறுபட்டிருந்தது. அடக்கமான உணர்வும் நெகிழ்ச்சியான அனுபவங்களும் அரங்கை நிறைத்தன. ஒவ்வோர் இதழும் இப்படியான பண்பாட்டுப் பாரம்பரியத்தைத் தான் வளர்த்தெடுக்க வேண்டுமோ என்றும் தோன்றியது. உரையாடல்களைத் தொடர்வும், படைப்பூக்கப்பணிக்குப் புத்துயிர்ப்பு அளிக்கவும் இத்தகைய பண்பாடு உதவும்!
அவ்விதழில் பிரசுரமான என் கவிதைகளில் ஒன்று, ‘அச்சு இயந்திரம்’!
அச்சு இயந்திரம்
சிறிது முறையான பயிற்சிக்குப் பின்பான
சில பிழைகளுக்குப் பின் தான்
நாம் தடதட தடவென்று மொழியத் தொடங்கினோம்
உணர்ச்சிகளின் ஏடுகளைத் துப்பத் தொடங்கினோம்
உடலின் முழக்கமே மொழியாய்ப் பிறக்கும்
ஓலைகள் மீது நற நறவென்று கீறத்தொடங்கினோம்
வெள்ளைக்காகிதங்களென்று ஏதுமில்லை
நம் செங்குருதிக் கறைகளைத் தொடர்ந்து அச்சாக்கிய வண்ணமே
காலம் மீறி உடலை இயக்கினோம் எழுதினோம்
காலச்சக்கரங்களின் கீழ் அரைபடும் வேகத்தில்
நெரிபட்டன நம் குரலொலிகள் ஆனாலுமென்ன
நம் பெயரின் முத்திரை அழித்துப்
பிரதிகளைக் கேட்பவரிடம்
நம் கருவனத்தின் கறைகளால்
ஆக்கிக் கொடுப்போம் அசலான பிரதிகளை
பிரசவிப்போம் பித்தமேறிய பாடல்களை
அதிர்ச்சியுற்ற கூக்குரல்கள்
நம் யாக்கையின் காகிதங்களை மோதட்டும் பிளிறட்டும்
கிழிக்கட்டும் என்றாலும்
ஆக்கிக் கொடுப்போம் அசலான பிரதிகளை
அறிவுக்கு விலை பேசுவோரிடம்
நம் வேட்கையுற்ற உடல்களைப் பிரதிகளாக்கி
நாற்சந்திகளிலும் விதைத்து வருவோம்
சுவரொட்டிகளாய்ப் பூசிவருவோம்
காண்போர் முகம்வியர்க்க
குத்திய பச்சையாய் மையாய்
துளைகளாய் தளும்புகளாய் காயங்களாய்
பிரதிகளாய்ப் பிரசவித்து ஓயோம் தாமே நாம்
கருப்பனுவல்களாய்க் காடொடுங்கிக் கிடந்து
காணாமல் போனவற்றை
காட்சிகளாக்கிச் செதுக்குவோம் எவர் நெஞ்சிலும்
காகிதத்தின் நெற்றியில்
நம் பெயர் அச்சாகியதா என
ஒருமுறை முதுகைப்புரட்டிப் பரிசோதித்தும் கொள்வோம்
குட்டி ரேவதி
நன்றி: ‘கணையாழி’ கலை இலக்கிய இதழ்
ஆலன் கின்ஸ்பெர்க்கின் ஊளை
சமீபத்தில் ஒரு பெண் கவிஞருக்கு அறிவிக்கப்பட்ட விருது அறிக்கையில், ’சித்தாந்த முகமூடிகள் எதையும் அவர் அணிந்து கொள்வதில்லை’ என்று எழுதப்பட்டிருந்தது. பெண்களோ இலக்கியவாதிகளோ சித்தாந்தம் எதையும் தன் சிந்தனையில் ஏற்றுக்கொள்ளக்கூடாது, அல்லது அவ்வாறான ஒன்றை உருவாக்கி விடக்கூடாது என்று சமூகம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது, பாருங்கள்!
புதியதோர் உலகம் என்பது புதியதொரு மனமாகத்தான் இருக்கமுடியும். மனிதர்கள் அவரவர் மனநிலைகளிலேயே ஆர்வமுற்று அவரவரிலேயே தொலைந்து போனால் புதியதொரு மனமும் சாத்தியமில்லை, புதியதோர் உலகமும் சாத்தியமில்லை என்பது வில்லியம் பரோஸின் நிலைப்பாடு. இதுவே கவிஞன் ஆலன் கின்ஸ்பெர்கின் வாதமுமாக இருந்தது. சிலதினங்களுக்கு முன் ‘Howl’ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஆலன் கின்ஸ்பெர்க்கின் ‘Howl’ என்ற மிகவும் பிரபலாமான, அதிகமும் விமர்சிக்கப்பட்ட கவிதையை அடிப்படையாகக்கொண்ட திரைப்படம். இந்தக்கவிதையை அவர் எழுதிய போது அது ஆபாச முத்திரைக் குத்தப்பட்டு தொடர் விசாரணைக்கு உள்ளானது. கின்ஸ்பெர்க் சுய பாலீர்ப்பு மிக்கவராய் இருந்தார். அதை வெளிப்படையாக வெளிப்படுத்தினார். 1950 – களில் அமெரிக்காவில் அது குற்றப்பூர்வமான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. ஆனால், கின்ஸ்பெர்க் அத்தகைய பாலுறவைத் தடையின்றி கொண்டாடினார்.
‘Howl’ கவிதையும் தடையிலாத உக்கிரமான தொனியில் வெளிப்பட்ட நீள்கவிதை. இருண்ட தவிர்க்கப்பட்ட தயங்கிய உலகத்தைப் பட்டவர்த்தனமாக அதே சமயம் கவிதையின் உச்சபட்ச சாத்தியப்பாடுகளையும் மொழி வெளிப்பாட்டையும் இணைத்திருக்கும். கவிஞர்கள், பல சமயங்களில் கவிதை குறித்த அவநம்பிக்கைகளுடன் வாழப்பணிக்கப்பட்ட நம் சமூகத்தில், இக்கவிதையையும் அதைச் சூழ்ந்த எதிர்ப்பையும், கின்ஸ்பெர்க்கின் மனநிலையையும் புரிந்து கொள்வதும் பொருத்திப்பார்ப்பதும் மிகவும் கடினம். அத்திரைப்படம், ஒரே சமயத்தில் கவிதை வாசிப்பையும், நீதிமன்றத்தில் அக்கவிதை குறித்த விசாரணையையும், அக்கவிதையில் அவர் கையாண்டிருக்கும் படிமங்கள் அசைப்படமாக்கப்பட்டிருப்பதுடன், கவிஞனுடனான ஓர் அந்தரங்க உரையாடலையும் நிகழ்ந்த்தியிருக்கிறது. படம், அக்கவிதையின் பரப்பையும் அது சார்ந்த கவிஞனின் மனநிலையையும் விட்டு வெளியேறாது, கவிதையைப் போன்றே ஓர் உக்கிரமான வடிவமாகியிருக்கிறது.
2010 –ல் எடுக்கப்பட்ட இப்படம் ராப் எஃப்ஸ்டைன் மற்றும் ஜெஃப்ரி ஃப்ரீட்மென் ஆகியோரால் இயக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஒரு கவிதைப் பயிற்சிப்பட்டறையில் திரையிடுவதாகத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், முதல் வகுப்பிலேயே கவிதைக்கும் அப்பயிற்சியில் இடம்பெற்றிருந்த இலக்கிய ஆர்வலர்களுக்குமான இடைவெளியை உணர்ந்த எனக்கு அதைத் திரையிடுவதற்கான தருணம் வாய்க்கவில்லை. கவிதையை மற்ற இலக்கிய வடிவங்களுடன் சேர்த்திணைத்துப் பார்க்கும், அலட்சியப்படுத்தும் ஒரு தட்டையான சமூக வடிவில் கவிதை வெளிப்பாட்டுக்கான வெளிகளும், அதன் நோக்கங்களும் பயன்களும் குறித்த அக்கறையும் இருக்காது தானே! ‘il postino’ போலவே இந்தப்படமும் கவிதை என்றால் என்ன என்பதையும் அகக்கிடக்கையாகக் கொண்டிருக்கிறது. கின்ஸ்பெர்க்கின் நேர்காணல்களைத் தொடர்ந்து தேடி வாசித்து முடித்தேன். அவரது அக உலகத்தின் பெரும் பரப்பையும் தெளிவான வெளிச்சத்தையும் சிந்தனை ஆழத்தையும் கவி ஆளுமையையும் நேர்காணல்களில் தாம் உணரமுடியும். அவர் கவிதைகளுக்கு நிகரான சிந்தனைத் தளங்களைக் கொண்டிருக்கின்றன, அவரது நேர்காணல்கள்.
ஆலன் கின்ஸ்பெர்க், பால்நிலை வெளிப்பாட்டை வெளிப்படையாகச் சொன்னதைக் கொண்டு அவரை வெறுமனே ஒரு ப்ளேபாய் என்ற உருவிற்குள் நாம் அடைக்கமுடியாது. வாழ்வு முழுக்க வெவ்வேறு கவிஞர்களுடன் இணைந்து பல சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். புதிய சித்தாந்தங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். அவரவர் கவித்துவத்தின் முழுமையை வெளிப்படுத்தும் பணி தான் முக்கியமானது என்பதை தன் செயல்பாடு தோறும் வலியுறுத்துகிறார். தனிமனித சமூக அக்கறையை கவித்துவமான பணியாக உருமாற்றுவதில் பலர் தோல்வியடைந்திருக்கிறார்கள். கின்ஸ்பெர்க், தான் ஓர் அரசியல் கவிஞர் என்று முத்திரைக்குத்தப்பட்ட போதெல்லாம் அதைக்கடுமையாக எதிர்ப்பதன் வழி இதை வென்றிருக்கிறார். அவர் கவிதையினை வாசிக்கும் போதே எதிரொலிக்கும் சப்தத்தையும் சொற்கள் கொண்டிருப்பதைப் போல இருக்கும். ஒரு கூக்குரல் அதன் வரிகளின், அர்த்தங்களின் அடியில் தங்கியிருக்கும். புதிய சொற்கோர்வைகளும், வரிகளின் நீட்சிகளும் வாசித்து முடித்தப்பின்னும் அந்தச் சப்தத்தை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன.
குட்டி ரேவதி
லேபிள்கள்:
கவிதை
ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப்பிரதிகள் - 8
உமா மகேஸ்வரி - பசுமையின் வரியைத் தனியாக எழுதும் ஒற்றைப்புல்
http://koodu.thamizhstudio.com/thodargal_14_8.php
நன்றி: கூடு;தமிழ் ஸ்டுடியோ
குட்டி ரேவதி
http://koodu.thamizhstudio.com/thodargal_14_8.php
நன்றி: கூடு;தமிழ் ஸ்டுடியோ
குட்டி ரேவதி
லேபிள்கள்:
உமா மகேஸ்வரி,
பெண் கவிதை,
பெண்ணியம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


