நம் குரல்

சினிமாவை எவரும் விமர்சிக்கலாம்!



தமிழ் சினிமாவின் சமூகத்தாக்கம் அளவிடமுடியாதது. இன்னும் சொல்லப்போனால், சமீப காலங்களில், அது சமூக மையம் நோக்கித் தன்னை வேகமாக நகர்த்திக்கொண்டு வரும் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு நிரந்தரமில்லாத கொந்தளிப்பான நிலையில், இன்னும் முடிவெடுக்க முடியாத ஒரு தத்தளிப்பான, தன்னை சீரமைத்துக்கொள்வதற்கான நிலையில் இருக்கிறது.

மேட்டுக்குடித்தன்மையையும் மேல்சாதியாதிக்கத்தையும் சரளமாகக்கொண்டிருந்த பழைய சினிமா போக்கிலிருந்து நகர்ந்து, பாமரனின், ஒடுக்கப்பட்டவனின் குரலாக, நவீனத்தின் அடையாளமாக மாறிக்கொண்டே இருக்கிறது.
இதில் பல தனிமனித கலைமுயற்சிகளும், எவரும் சினிமாவை விமர்சனம் செய்யக்கிடைத்த வாய்ப்பும், டிஜிட்டல் புரட்சியும், இணைய வீச்சும் மிகப்பெரிய பங்குகளை வகிக்கின்றன.
இன்னும் சினிமா பெருவாரியாக மாறும். சினிமாவிற்கான முதலீடு மீது இருக்கும் அதிகாரமும், குறிப்பிட்ட பணபலம் மட்டுமே இருப்பவர்களுக்கான வாய்ப்பும் மாறும் போது, தற்பொழுதைய சூழலும் மாறும்.


உலக சினிமாவுடனும், பிற மாநில மொழி சினிமாக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் தமிழ் சினிமாவைப் புரிந்து கொண்டாலும், சீர்தூக்கிப் பார்த்தாலும் கூட, தனித்துவப் போக்கில், தமிழ் சினிமா தனக்கென புதிய உருவாக்கங்களை, உள்ளடக்கங்களை, தாக்கங்களை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறது.
மாற்று சினிமா, கலை சினிமா, வணிக சினிமாவுக்கு எதிரான சினிமா என்பதையெல்லாம் இன்றைய இளைய தலைமுறையின் சினிமா தன் புறங்கையால் உதறி, முற்றிலும் புதிய இடத்திற்கு நகர்த்திச் செல்ல முயற்சிசெய்த வண்ணம் உள்ளது.

நித்தமும் தன் அதிகார வரையறைகளை மாற்றும் தமிழ்சினிமாவுடன் ஓட்டம் பிடிக்க முடியாதவர்கள், அதன் மீது ஒவ்வாமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்கள். ரகசியமாக, நேசித்திருக்கிறார்கள். சினிமா மீது பேதலிப்புடன், காதலுடன் திரிந்திருக்கிறார்கள். தம் வாழ்வைப் பணயம் வைத்திருக்கிறார்கள்.

சினிமா என்னும் கலை ஊடகத்தின் மீதான மக்கள் விமர்சனம் கூர்மையாக, கூர்மையாக, அது இன்னும் அதிகமாகத் தன்னைச் செம்மையாக்கிக் கொள்ளும். சமூகத்திற்கானதாக ஆக்கிக்கொள்ளும். அதிகாரத்தின் கைகளிலிருந்து பிதுங்கி வெளியேறி எப்பொழுதும் தன்னை நவீனமாக்கிக்கொள்ளும், விடுதலையாக வைத்துக்கொள்ளும் சினிமாவின் தாக்கத்தை யாரும் புறக்கணிக்க முடியாது. சினிமா தான் இன்றைய நம் கை ஆயுதம்!

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: