நம் குரல்

'மரப்பசு'வும் பல பேருடன் உறவும்!





'மரியான்' பணி முடிந்ததோ இல்லையோ, படிப்பதற்காகவென்று எடுத்துவைத்திருந்த நூல்களை எல்லாம் வாசிக்கவென வரிசைப்படுத்தி வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றையும் சுரவேகத்தில் வாசிக்கிறேன். ஒரு வகையில் வேலைப்பளு, மனதை ஆக்கிரமித்திருந்த வேலை எல்லாவற்றிலிருந்தும் பெற்ற விடுதலை உணர்வு கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

நண்பர் ஒருவரின்  திரைக்கதைப் பணிக்காக தி.ஜா.வின் 'மரப்பசு' வாசித்துமுடித்தேன். ஏற்கெனவே முன்பொரு காலத்தில் வாசித்திருந்த போதும், தற்பொழுது வாசிக்கும்போது சுய மனமாற்றங்களுக்கு ஏற்பவும், வளர்ச்சிக்கு ஏற்பவும் நாம் உள்வாங்கிக் கொள்ளும் கருத்துகளும் மாறியிருப்பதை உணரமுடிகிறது. 'மோகமுள்'ளிலிருந்து  முற்றிலும் மாறுபட்ட பெண் பாலியல் விழைவைச் சொல்லும் நாவலாக  'மரப்பசு' விரிகிறது.

பெண்ணின் பாலியல் விடுதலை என்பது காலந்தோறும் விவாதிக்கப்படும் அதி சூடானதொரு கருப்பொருளாகவே இருப்பது தெரிகிறது. 'அம்மணி' என்ற கதாபாத்திரம் தன் நிலையிலிருந்து நிகழ்வுகளை அனுபவங்களைப் பயணமொழியில் சொல்லிச் செல்கிறது. நாவல் முழுதும் ஒரு பார்ப்பனப் பெண்ணாகவே இருந்து விடுதலையைப் பெற விழையும் பெண்ணாகத்தான் அம்மணி இருக்கிறாள். 

பெண், ஏன் பல பேருடன் உறவு கொள்ள வேண்டும்? அது என்ன விடுதலையைத் தந்துவிடப்போகிறது? இது ஒருவகையில் நோக்கமற்ற போராட்டம் தான். இந்தியாவின் மதம், குடும்பம், சாதி, திருமணக் கோட்டைகளைத் தகர்ப்பதற்கேற்ற பாலியல் போராட்டங்களைத் தான் நாம் கையில் எடுக்கவேண்டும். இந்தியாவின் சாதியச் சதுரங்கத்தைக் கலைத்துப் போட, 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கட்டாயம் ஒருபொழுதும் உதவப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அது சதுரங்கக் கட்டங்களை பெரிய அரண்களாகவே ஆக்குகிறது. எந்த ஆணும் சமூகத்தில் 'ஒருவனுக்கு ஒருத்தி' யைப் பின்பற்றுவதில்லை. இது பெண்ணின் உளவியலில் வலிந்து திணிக்கும் ஒரு எச்சரிக்கையே.

பல பேருடன் உறவு என்பது பெண்ணைப் பொருத்தவரை சமூக நிறுவனக்கட்டங்களைத் தகர்ப்பதன் வழியாகவே சாத்தியம்.  'மரப்பசு'வின் கதாநாயகி அம்மணி பார்ப்பன ஆணின் அதிகார முறைகளைத் தகர்க்க முயல்கிறாளே தவிர,  மேலை நாட்டு ஆண்களின் ஆண்மையைக் கேள்வி எழுப்புகிறாளே தவிர, இந்திய நிலப்பரப்பில் பிற சாதியினர், பிற மதத்தினர் அவர்களுக்கு இருந்த பாலியல் உரிமைகள், அதிகாரங்கள் குறித்த கேள்வியையோ ஏன் சிந்தனையையோ கூட  எழுப்புவதே இல்லை. ஏதோ இந்தியாவில் உள்ள பெண்கள் எல்லோருமே "பார்ப்பனப் பெண்" என்ற மனநிலை ஓங்கிய நிலை தான் உள்ளது.

'மரப்பசு' என்பதே பெண்ணை ஒரு பசுவின் வடிவில் சடமாக்கிய குறியீடாகத் தான் கையாண்டிருக்கிறார் தி.ஜா. அம்மணியைப் போல பல பெண்கள்,  நான் அறிந்த அளவில் இந்திய அளவில் பல பேருடன் உறவு என்பதை விடுதலைக்கான ஆயுதமாகக் கையில் எடுத்திருக்கின்றனர். என்றாலும், அது அவர்களை விடுதலையை நோக்கி ஓர் அடியும் அழைத்துச் செல்லவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதில் தன் சுயம் சார்ந்த புரிதலுக்கும் அறிதலுக்குமே முழுக்காலத்தையும் முழு உடலையும் பணயம் வைக்க வேண்டியிருக்கிறது. சமூகத்தின் கட்டங்களில் சிக்கிக்கொண்ட பிற பெண்களை இணைத்துப் புரிந்து கொள்ளாத இந்தப் பாலியல் போராட்டம், எந்த வகையிலும் அந்தப் பெண்ணுக்கே கூட விடுதலை அளிப்பதில்லை. 

இந்தியாவின் பெண்ணிய விடுதலை என்பது ஒரு பெண்ணின் விடுதலையும் உரிமையும் அதிகாரமும் பிற பெண்களுடன் முழுமையான தொடர்புடையது. இதைப் புரிந்து கொள்ளாதவரை, 'அம்மணி' போன்ற தனி கதாபாத்திரங்களின் பாலியல் விடுதலை வெறும் பேசுபொருளாகவே இருக்கும். ஆனால், தி.ஜா. இந்நாவலில் சில அகழிகளைக் கடந்திருக்கிறார். அவர் காலத்தில், அல்லது அவரையொட்டிப் பின்வந்த பல படைப்பாளிகள் 'அம்மணி' கதாபாத்திரத்தின் நவீனம் தொனிக்கும் மன எழுச்சியைக் கடக்கமுடிந்ததில்லை. அவருக்குப் பின் வந்த, இன்று புகழோங்கிய பல படைப்பாளிகளின் நாவல்களின் அம்மணியின் குரல் தொனியைக் கேட்கமுடிகிறது. தி.ஜா. செய்த புரட்சியைக் கூடச் செய்யமுடியாத மனக்கூண்டில் சிக்கியிருக்கின்றனர் சில எழுத்தாளர்கள் இன்றும்.


சமீபத்திய சாதிமறுப்பு எழுச்சியும் தலித் மக்களின் உரிமைப்போராட்டங்களும் தாம் இந்த நாவலை, சீர்தூக்கிப் பார்க்கவைக்கிறது.





குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: