நம் குரல்

பெண்ணியக்கவிதை


பெண்ணியக் கவிதை என்று எதைக் கூறுவது? அதை எப்படி அடையாளம் காண்பது? அதன் வலிமையான கூறுகள் என்னவென்று உலக அளவில் பெண் கவிஞர்கள் பலரின் கவிதைகளையும் எடுத்துக்கொண்டு விவரிக்கமுடியுமா? என்று என்னிடம் ஒரு பெண் கவிஞர் கேட்டார். பெண்ணியக் கவிதையை எப்படி வரையறுப்பது? பெண்ணின் அடையாளங்களைத் தொடர்ந்து எழுதியெழுதி சல்லடையாக்கிக் கொண்டிருப்பவர்கள், தன் பெயரைத் தவிர மற்றெல்லாவற்றிலும் பால்நிலை விலக்கிய ஒரு பொதுத்தன்மையைக் கொண்டிருப்பவர்கள், உச்சபட்ச புதிய பெண்ணிய அடையாளங்களை வருவித்து அதன் கனம் குறையாமல் வழங்குபவர்கள் எனப்பல வகையினராக பெண்ணியத்தைப் பெண் கவிஞர்கள் இயக்கி வருகின்றனர்.



இவை எல்லாமே பெண்ணியத்தின் பகுதிகள் தாம். ஒரு பெண் தன் சிந்தனையை எழுத வரும்பொழுதே தன் இருப்பை நியாயப்படுத்துவதற்கான துணிவைப் பெற்றுக்கொண்டாள் என்று தான் பொருள். இன்றைய பட்டியலை நிறைக்கும் ஸில்வியா பிளாத், ஆன் செக்ஸ்டன், ஏட்ரின் ரிச், எமிலி டிக்கின்ஸன் போன்றோருக்கெல்லாம் மூலவராக இருப்பவர் எலிசபெத் பாரெட் பிரெளனிங் என்ற ஆங்கிலக்கவிஞரே. பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவரது வார்த்தைகளும் வரிகளும் பெண்கள் மீதான அநீதிகளை எதிர்த்து அழுத்தமான குரல் கொடுப்பன. ஓவியர் ஃப்ரைடா காலோவைப் போலவே முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தால் அறைக்குள்ளேயே தன் நீண்டகாலத்தைத் தனிமையில் கழிக்க நேர்ந்தவர். ராபர்ட் ப்ரெளனிங்குடன் காதல் கொண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். இன்றும் இவ்விருவரும் உலகின் மிகச்சிறந்த காதலராக மதிக்கப்படுகின்ற அளவுக்கு தம் உறவைப் போற்றி வாழ்ந்தனர். எலிசபெத் தனது காதல் கவிதைகளிலும் கூட தன் இருப்பைத் தீராததாக ஆக்கும் படியான காதலையே எழுதினார்.



பெண்ணியம் என்பது கரடுமுரடான முதுகுடைய விறகைப் போல படைக்கப்பட்டு, பெண்களின் இயக்கத்திற்கு எரிபொருளாக்கப்படுகிறது. அதில், பெண்ணியக் கவிதையின் பங்கு பல திசைகளிலிருந்தும் மூர்க்கமாகப் பற்றிக்கொள்ளும் தீயின் நாக்குகள் ஆகின்றன. உலகெங்கிலும் பெண்ணியக் கவிதை என்பது இயக்கமாகவே வளர்ந்து உருப்பெற்றிருக்கிறது. தீவிரமான பெண்ணியக் குரல்களெல்லாம், மேற்குறிப்பிட்ட வகைகளாக மாறித்தான் தீப்பிழம்பினாலான சொற்களாகியிருக்கின்றன.

கவிதைக்குள் நுழையும் ஒவ்வொரு சொல்லும் தன் இருப்பையும் தன்னினப் பெண்டிரையும் கூக்குரலிட்டு அழைக்கவேண்டும் என்பதாகத்தான் எலிசபெத்தின் கவிதைக் குரலும் தொனிக்கிறது. அவரது கவிதைகளைப் போலவே அவரின் மேற்கோள்களும் என்னை ஈர்த்தன. அசைபோடச்செய்தன. இன்றைய முழு பொழுதும் அவற்றின் சுவை நாவில் தித்திப்பாய் ஒட்டியிருந்தது.




முதல் முறையாக அவன் என்னை முத்தமிட்டான். ஆனால், அவன் இந்தக் கையின் எந்த விரல்களைக் கொண்டு எழுதுகிறேனோ அங்கு தான் முத்தமிட்டான். அப்பொழுதிருந்தே அது இன்னும் தூய்மையாகவும் வெண்மையாகவும் வளர்ந்தது.



இன்றைய நாளால் நாளையை ஒளியாக்கு!



நீ என்னவாக இருக்கிறாய் என்பதற்காக மட்டுமே உன்னை நான் நேசிக்கிறேன் என்றில்லை. உன்னை எதனால் ஆக்கிக்கொண்டிருக்கிறாய் என்பதற்காகவும் இல்லை. நீ, என்னுடைய எதனால் ஆக்கப்பட்டிருக்கிறாய் என்பதற்காகத்தான். நீ எனது எந்தப்பகுதியை வெளிக்கொணர்கிறாய் என்பதற்காகவும் தான் உன்னை நேசிக்கிறேன்.



முந்தைய இரவு ”ஆம்” என்று உனக்குப் பதிலளித்தேன். இந்தக் காலையில் “இல்லை” என்று உன்னிடம் சொல்கிறேன். மெழுகுவர்த்தியால் காணப்பட்ட வண்ணங்கள் பகலிலும் அதே போலத் தோன்றுவதில்லையே.



நான் பொறுமையுடன் பணியாற்றினேன். அதுவே, ஏறத்தாழ, என் வல்லமை என்று அர்த்தமானது.



குழந்தைகளை வளர்க்கும் வழிகள் பெண்களுக்குத் தெரியும். இடுப்பைச் சுற்றி அலங்கார உடையைக் கட்டிவிடவும், குழந்தைகளின் காலணிகளை மாட்டிவிடுவதற்கும் எளிமையான, மகிழ்ச்சியான, கனிவான நெளிவு சுளிவும் தெரியும். அர்த்தமெழுப்பாத அழகான வார்த்தைகளை சரமாக்கவும். வெற்றுவார்த்தைகளாகும் முழுமையான அர்த்தங்களை முத்தமிடவும். அத்தகைய அற்பங்களே வாழ்வைப் பொறிப்பதற்கான பவழங்களாக இருக்கின்றன,




ஐவிப்புதர்கள் வளர்வதற்கு முன் சுவர்கள் அந்தப்பருவநிலைக்கான கறையைப் பெறுவது இன்றியமையாதது.





குட்டி ரேவதி

3 கருத்துகள்:

ஆபுத்திரன் சொன்னது…

Yes,What you had said is true... Though the word 'feminism' was not so explicitly used by Barret Browning, she asserted herself as woman to a great extent. In fact she was and is an iconography of feminism. Though her poems seems to be pious (at a christian background)-- From my understanding Much of Barrett Browning’s work carries a religious theme. Yet, rereading her again I could derive her touch of asserting/affirming her individuality as woman. May be it was this, would have drew Robert Browning towards her.

குட்டி ரேவதி சொன்னது…

I appreciate your integrity very much. Affirming one's individuality as woman can be brought out only by the realization of Society's injustice and injuries to the self and the women.

Always Be a supporter for justice to women!Thanks for your solidarity, Aabuthiran!

Shubashree சொன்னது…

அன்புள்ள குட்டி ரேவதி,
எலிசபெத் ப்ரெள்னிங்க்கின் வரிகளைன் மொழிபெயர்ப்பு கட்டுரையுடன் அழகாய் பொருந்துகிறது. சில்வியா ப்லாத்தின்Bell Jar வாசித்திருக்கிறேன் ஆனால் கவிதைகள் அவ்வளவாய் இல்லை. ஒன்று இரண்டை இங்கே வழங்க முடியும, உங்கள் மொழியில்?