நம் குரல்

கிருஷ்ணகிரி பயண அனுபவம்


எப்பொழுது செல்போனில் அலாரம் வைத்தாலும் அது ஒலிப்பதற்கு முன்பாக விழித்துவிடுவது என் பழக்கம். அதிகாலை 2.45 – க்கு அலாரம் வைத்திருந்தாலும் அதற்கு முன்பாக விழித்திருந்தேன். ஜோலார்ப்பேட்டை சந்திப்பை ரயில் நெருங்கிக்கொண்டிருந்தது. பல் துலக்கி முடிக்கவும் ரயில் நிலையத்தை அடைந்திருந்தது. இறங்குவதற்குத் தயாராக பெட்டியுடன் கதவைத்திறக்க முயல தொடர்ந்து இரண்டு பெட்டிகளிலும் கதவைத் திறக்க முடியாமல் சிரமப்பட்டேன். உதவிக்குப் பெட்டியில் ரயில் ஊழியர்களும் இல்லை. பயணிகள் எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். என்றாலும், பிளாட்ஃபாரமிற்கு எதிர்த்திசையில் இருந்த கதவு திறந்து கொண்டது. துணிந்து இறங்கினேன். ரயில் எந்நேரமும் நகரத்தொடங்கிவிடும். எதிர்த்திசையில் இறங்கி ப்ளாட்ஃபார்ம் ஏறுவதற்கும் ரயில் நகர்வதற்கும் சரியாக இருந்தது. கூதல் காதைச் சுற்றியது.



சரியாக மூன்று மணிக்கு ரயில் நிலையம் வந்துவிடுவதாகக் கூறிய அமிர்தவள்ளி இன்னும் வந்து சேரவில்லை. அரைமணி நேரம் அவருக்காகக் காத்திருந்த பின், தொலைபேசியில் அழைத்தேன். அவர் வந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாகவும் கூறினார். ரயில் நிலையத்தின் விசாரணைக்கவுண்டர் முன்பு இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். நீண்டநேரம் காத்திருக்க நேர்ந்தது. ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த ஆங்கில மகளிர் தின சிறப்பு இதழ்களைப் புரட்டி முடித்தேன். நவநாகரிகப் பாணிகளில் இருக்கும் ஆதிக்க மனநிலையை இம்மாதிரி இதழ்களில் காணமுடியும். ஃபேஷன் துறையில் எனக்கு இருக்கும் ஆர்வம் வடிவமைப்பும் அழகியலும் ஒன்றுக்கொன்று பங்காற்றிக்கொள்வது குறித்தது என்பதால் இவற்றைத் தீவிரமாக அவதானித்து வருகிறேன். அதற்குள், இரண்டு முறைகள் ரயில்வே மாஸ்டர் என்னருகே வந்து நான் எந்த ரயிலுக்காகக் காத்திருக்கிறேன் என்று கேட்டார். என் தோழிக்காகக் காத்திருக்கிறேன் என்று கூறியதும் தற்காலிக ஆறுதலுடன் திரும்பிச்சென்றார். அநியாயத்துக்குச் சர்க்கரையை அதிகமாகக் கலந்த காபி ஒன்றை வாங்கிப் பாதியைப் பருகி விட்டு மீதியை எறிந்தேன். டில்லி செல்லும் ரயிலுக்காகக் காத்திருந்த பயணிகள் பெருத்த மூட்டைகளுடன் அங்குமிங்குமாகச் சிதறி ஓடி ரயிலுக்குள் மறைய ரயில் அவர்களைச் சுமந்து கொண்டு நிலையத்தை விட்டு நகர்ந்தது. ஜோலார்ப்பேட்டை ரயில் நிலையம் சம்பந்தப்பட்ட எனது அத்தனை கடந்த கால நிகழ்வுகளும் வந்து மறைந்தன. ரயில் நிலையம் குளிராலும் இருளாலும் போர்த்தப்பட்டிருந்தது. ஐந்து மணிக்கு அமிர்தவள்ளி பதற்றத்துடன் வந்தார். கார் டிரைவர் வழி மாறி எங்கோ செல்ல, மீண்டும் வழியைக் கண்டுபிடித்து வரத்தாமதமாயிற்று என்றார்.




அமிர்தவள்ளி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் இளம் வயதில் திருமணம் செய்துகொள்ளும் சிறுமிகள் சந்திக்கும் பிரச்சனைகளை ஆராய்வதிலும் அவற்றைத் தடுப்பதிலும் முனைந்திருக்கிறார். முப்பத்தைந்து வயது பெண்ணுக்கான வேறு எந்த லோகாயதச் சிந்தனையும் இல்லாமல் முழு முனைப்புடன் இயங்கிவருகிறார். ஒற்றையாளாய் காவல் நிலையத்திற்கும், வழக்குமன்றங்களுக்கும், கொலைசெய்யப்பட்ட சிறுமிகளின் கிராமங்களுக்கும் சென்று வருவது அவரது அன்றாடப்பணிகள். கிருஷ்ணகிரி மாவட்டம் பற்றிய நெடிய ஆய்வைச் செய்தவர் போல மாவட்டம் பற்றிய எல்லா விவரங்களையும் பிரச்சனைகளையும் அக்கறையுடன் உரையாடிக்கொண்டே வந்தார். கிருஷ்ணகிரி இன்னும் விழிக்காமல் இருந்தது. பூ விற்கும் பெண்கள் பெரிய பெரிய சாமந்திப்பூக்களால் தொடுத்த மாலைகளையும் மல்லிகைச் சரங்களையும் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். இருளடர்ந்த அதிகாலையில் கூடைப்பூக்களை வைத்து வரிசையாக அமர்ந்து விற்கும் அப்பெண்களைப் பார்ப்பது அச்சூழலுக்கு ஓர் அமானுஷ்ய உணர்வைத்தந்தது. அமிர்தவள்ளி தனது தோழி வந்தனாவின் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு உறங்குவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தார். அறைக்குள் நுழைந்த உடனே உறங்கிப்போனோம். இரண்டு மணி நேர உறக்கத்திற்குப் பின் விழித்துப் புறப்பட்டோம்.




அமிர்தவள்ளி இரண்டு முக்கியமான பணிகளை எனக்குக் கொடுத்திருந்தார். ஒன்று அவர் முதல்முறையாக ஏற்பாடு செய்திருக்கும் ’பெண் நேயக் கண்காட்சியை’ப் பார்வையிட்டு கருத்துரை சொல்வது, பின், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு கலைக்கல்லூரியில் மாணவியர் முன்பாக மகளிர் தின உரையாற்றுவது. கண்காட்சிக்காக, அமிர்தவள்ளி, தோழர் அலெக்ஸ் இருவரும் காட்டியிருந்த உழைப்பு மலைப்பைத் தந்தது. இக்கண்காட்சி, தற்போதையை பெண் எழுத்தின் முகத்தையும் அதன் காத்திரத்தையும் தெளிவுபடுத்துவதாய் இருக்கிறது. தமிழகம் முழுதும் பயணம் செய்யவும் முயன்று வருகிறார்கள். அருமையான தேர்வும் சேகரிப்பும்!





கல்லூரிக்குச் சென்றோம். மதியம் மூன்று மணிக்குள் சேலம் சென்று சேரவேண்டியிருந்ததால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களையும் பேராசிரியர்களையும் அவசரப்படுத்தினேன். நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்கள் ஆண் பேராசிரியர்கள். தொகுத்து வழங்கியவர்கள் பேராசிரியைகள். எனக்கு முன்பு உரையாற்றிய பேராசிரியை, தொடர்ந்து பெண்களுக்கு எதிராகப் பேசிக்கொண்டே சென்றார். பேருந்தில் மாணவன் அருகில் உட்கார்ந்து பயணிக்கும் பெண்ணைச் சாடிய அப்பேராசிரியை, அதே வேகத்தில், மனைவியின் பிரசவத்தின் போது வெளியே நின்று மனம் குமைபவர் கணவர் என்று சம்பந்தமில்லாமல் ஆண்களை உள்ளிழுத்ததுடன் அவர்களைப் பொத்தாம் பொதுவாகப் பாராட்டிப் பேசினார். பெண்களின் பிரச்சனையை, ஏன் தன் பிரச்சனையையே உணராத உரையாக அவருடையது இருந்தது, என் உரைக்கான பேசுபொருளைத் தேர்வுசெய்துகொள்வதற்கு எளிதாக இருந்தது.




அவசரமாய் உரையாற்றி முடிக்கவேண்டிய அவசியமில்லை என்று தோன்றியது. என் உரையை மிகவும் எளிதாகவும் நேரடியானதாகவும் ஆக்கிக்கொண்டேன். பெண்கள் தங்களை வல்லமைப்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளை உதாரணங்களுடன் கூறினேன். பெண்கள் கண்ணில் சுடர் தெறித்தது. அவர்கள் உள்ளே கனன்று கொண்டிருந்த ஆர்வமும் தெளிவும் வெளியே உரையாடல்களாய் விரிந்து கொண்டே இருந்தன. எனது உரையும் சிறப்பாய் அமைவதற்கு அவர்கள் உரையாடல்கள் உதவின. எனக்கு அது நிறைவைக் கொடுத்தது. கல்லூரிப் பேராசிரியர்கள் மீது இன்னும் இன்னும் மரியாதை குறைந்து கொண்டே போகிறது. அவர்களின் மடமை, பெண்களின் பிரச்சனைகளின் போது இன்னும் வீர்யமாய் வெளிப்படுவது காணச்சகிக்கவில்லை. சமீப நாட்களில் நிறைவானதொரு பயணமாயும், அமிர்தவள்ளியைச் சந்தித்திப்பதற்கான வாய்ப்பு ஊக்கம் கொடுப்பதாயும் இருந்தது.

இம்மாதம் இறுதி தேதி வரை இந்தியாவின் வடக்கு, மேற்கு என வேறு வேறு திசைகளுக்குப் பயணம் செய்கிறேன். இதில் சில, மகளிர் தினத்தை ஒட்டிய கூத்துகள். ஆமாம், கூத்துகள் என்று தாம் சொல்லவேண்டும். மற்ற நாட்களில் எல்லாம் அவ்வடையாளத்தைப் பயன்படுத்தாமல், மகளிர் தினப்பொழுதின் போது மட்டும் பெண் ஆளுமைகளை வரவழைத்து சிறிய பரிசுத்தொகையோ, அல்லது அன்பளிப்பாக சோப்பு டப்பாவோ கொடுத்து கல்லூரியின் கணக்கு வழக்கைச் சரிக்கட்டி, ஆண்டுக்கணக்கை முடித்துக்கொள்ளலாம் இல்லையா? என்றாலும், பெண்களின் உலகம் பற்றி எனக்குப் பேசக்கிடைக்கும் சிறியதொரு வாய்ப்பையும் நான் ஒருபொழுதும் புறக்கணிக்கப் போவதில்லை.




குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: