நம் குரல்

பஷீரின் கதைகளில் நானும் ஒரு காதலியாவது….


தியேட்டர் லேப்’பின் ஆறாவது ஆண்டு விழா நிகழ்வில் வைக்கம் முகமது பஷீரின் சப்தங்கள் நாவலும் பம்மல் சம்பந்த முதலியாரின் சங்கீதப்பைத்தியமும் நாடக ஆக்கம் பெற்றிருந்தன. ‘தியேட்டர் லேப்’, நாடக இயக்குநர் ஜெயராவின் நாடகக்கம்பெனி. நாடக நிகழ்விற்குப் பின்பான விவாதம் மற்றும் கலந்துரையாடலுக்கு இயக்குநர்கள் திருச்செல்வன் மற்றும் மீரா கதிரவனுடன் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். கரும்பு தின்னக் கூலியா? வெல்லத்தை எந்தப் பக்கம் கடித்தாலும் இனிப்பாய் இனிப்பது போன்றவர் தானே பஷீர்! பஷீரைப் பற்றிப் பேச எந்தத் தருணமென்றாலும் உகந்தது தான். நாடகங்கள் 6.03.2011 அன்று சென்னை அல்லையன்ஸ் ஃப்ரான்சைஸில் நிகழ்த்தப்பட்டன.



கதைக்கு வரலாம். ‘சப்தங்கள்’ கதை ஓர் இராணுவ வீரனின் தனிமனித அனுபவங்கள் பற்றியது. அவன் தன் தொடர்பான கேள்விகளைக் கேட்டுக்கேட்டுப் பதில் பெறும் அனுபவம் அந்தத் தொடர்முயற்சியே கதையாவதும் தான் கதை. பொதுவாகவே, பஷீரின் கதையில் வரும் எல்லா கதாப்பாத்திரங்களும் அவராகவே இருப்பதும் அவரின் குரலே சுற்றியுள்ள எல்லா உயிர்களின் வழியாக ஒலிப்பதும் தாம் அவரது எழுத்தின் தனிச்சிறப்பு. மேற்சொன்ன நாடக நிகழ்வை ஒரு சாக்காக வைத்து தமிழில் மொழியாக்கம் பெற்றிருந்த அவரது அத்தனை சிறுகதை, நாவல்களையும் வாசித்து முடித்தேன். அவரது கதைகள் இலங்கும் வெளியிலிருந்து வெளியே வரமுடியாத அளவிற்குத் தம் நிலம் சார்ந்த பண்புகளால் கயிற்றைப் போல என்னைப் பிணைத்துவைத்திருக்கின்றன அவருடைய கதாபாத்திரங்கள். அக்கதாபாத்திரங்களின் உருவங்களை திரையிலோ நாடகத்திலோ கொண்டு வருவதென்பது கோட்டுச்சித்திர அளவிற்குத் தான் இயலும். கதாபாத்திரங்களின் அதே விதமான சதையையும் எலும்பையும் இரத்தத்தையும் வேதனையையும் எப்படித் திரையில் கொண்டு வருவது?




எத்தனை முறை வாசித்தாலும், பிற எழுத்தாளர்களிடம் இல்லாததும் பஷீரிடம் இருப்பதுமான தனிச்சிறப்பு, எழுதப்படும் கதாபாத்திரங்களின் மனநிலை அல்லது அம்மனநிலைக்கு எல்லா கதாபாத்திரங்களையும் கொண்டு சேர்க்க அவர் உருவாக்கும் நெடுஞ்சாலை. இன்று வரை இம்மனநிலையை நான் வாசித்த இந்திய இலக்கியங்களில் எங்குமே காணநேர்ந்ததில்லை. அல்லது திட்டுத்திட்டாய், தீவுகளாய் அம்மாதிரியான மனநிலையை எழுத்தின் களத்தில் உருவாக்கமுடிந்ததே அன்றி, முற்றும் முழுதுமாய் எவருக்கும் சாத்தியப்படாது திணறுவதை வாசிக்கும் போது உணரமுடியும். வெறுப்பு, கோபம், வன்மம், குரோதம் ஆகியவை மட்டுமே பிழம்பாக எரியும் கதாபாத்திரங்களைக் கொண்ட இலக்கியங்களிலிருந்து வேறுபட்டு எதிர்த்திசையில் பயணிக்கிறது, இவரது எழுத்து. எல்லா மனிதர்களின் உடலிலும் பாயும் குருதியை ஒரே நதியினுடையதாய் ஆக்கும் இவரது கதைகள்.



பஷீரிடம் உத்தி என்று ஏதும் இல்லை. கதையை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம். அதிர்ச்சியான விஷயம் என்று ஏதும் இல்லை. எந்த வெளியில் வேண்டுமானாலும், அதாவது ஒரு வீட்டின் சமையலறையிலோ, பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் படுக்கையறையிலோ. முலைப்பாலூட்டும் பெண்ணின் கனத்த முலைகளின் தொடுகை வெளியிலோ எங்கு வேண்டுமானாலும் கதை நிகழலாம். அது ஒரு பொருட்டன்று. கதைக்குள் அப்பெண்ணின் பார்வை துருத்திக்கொண்டிருக்கவேண்டும். அவள் ’என்ன சொல்ல விரும்புகிறாளோ’, அதைச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால், இது சுலபமான பணி அன்று. ஒருவர் உடலை ஒருவர் கிழித்துக் கொல்ல விரும்பும் அக்கதாபாத்திரங்களினூடே, அவர் தன் மனநிலையை, எதனாலும் குத்திக்கிழிக்க முடியாத, ஒரு துளி இரத்தமும் சொட்டுவதை விரும்பாத தன் மனநிலையைத் தான் வெளிப்படுத்த முயல்கிறார். பஷீரின் ‘மதிலுகள்’ என்ற கதையை அடூர் கோபாலகிருஷ்ணன் திரைப்படமாக்கியிருக்கிறார். அதிலும் வரும் முகம் தெரியாத, குரலே பெண்ணாகி நிற்கும் உருவம் அவரின் எல்லா கதைகளிலும் பிரதிபலித்துக்கொண்டே தான் இருக்கிறது.



பால்ய காலத்துச்சகி! இதயத்திற்குள் கைகளை நுழைத்து அன்பைப் பெற்றுக்கொள்ளும் காதலைப் பற்றிய கதை. பஷீரின் கோட்டுச்சித்திரங்கள், காதலில் தான் முழு உயிர் பெறுகின்றன. அவரின் கதைகளில் நானும் ஒரு காதலியாவது என்பது இனியும் சாத்தியமாவெனத் தெரியவில்லை.



நாளை கிருஷ்ணகிரி செல்கிறேன். ‘பெண்நேயப் புத்தகக்கண்காட்சி’யில் சிறப்புரை ஆற்றுகிறேன். பின் அங்கிருந்து சேலம், மகளிர் தினக்கொண்டாட்டப் பேரணிக்குத் தலைமை தாங்குகிறேன். இந்தவருடம் கொஞ்சம் அதிகப்படியான பெண்கள் தினக்கொண்டாட்டமோ என்றும் தோன்றுகிறது! கொண்டாட்டத்தால் என்ன குறைந்துவிடப்போகிறோம்!



குட்டி ரேவதி

1 கருத்து:

மதுரை சரவணன் சொன்னது…

vaalththukkal... nalla pakirvu.. penkal thina kondaattamaaka amaivathil naattukkum , veettukkum nalamee...