நம் குரல்

கனவுச் சமூகத்திற்கான ஒரு நீலப்பிரதி




இம்முறை பெண்கள் மையக்கதாபாத்திரங்களாக வரும் அறிவியல் புனைவுகளைப் பற்றி உரையாடலாம் என நினைக்கிறேன். அவை அவர்களுக்கு என்ன மாதிரியான உடல் வழியான விடுதலையைத் தந்தன என்பதைக் கண்டறியும் முகமாகக் கூட நாம் இதைப் பார்க்கலாம். வேறு வேறு கற்பனை கிரகங்களுக்குச் சென்று வரும் புத்தாய்வு முயற்சியை எப்பொழுதும் ஆண்களே செய்வதான சித்திரிப்பு தொடர்ந்து இருந்து வந்தது. 1960-க்கு முன்பாக, பெண் பற்றிய அறிவியல் புனைவுகள் வெளிப்படையான பால்தன்மையுடன் வெளிவரவில்லை. எதிர்ப்பண்பாட்டு, புதிய அலை பெண்ணிய இயக்கங்களும், குடியுரிமை இயக்கங்களும் தாம் இதற்கான அவசியங்களைத் தூண்டி விட்டன. சமூகத்தில் பெண் தனக்குத் தானே உடனடியாக உருவாக்கிக் கொள்ள முடியாத உடலியல் ஊக்கங்களை எல்லாம் இத்தகைய அறிவியல் புனைவுகளில் செயல்படுத்திக் கொள்ள முடிந்ததுமே கூட, பெண்ணுக்கு புதிய உணர்வெழுச்சிகளைத் தந்தன.




சமூகச்சூழலில், குடும்பத்தில், வேலைபார்க்குமிடத்தில், கல்வி நிறுவனங்களில் பெண் என்பவள் ஒரே வகையான பால் தன்மையுடன் தான் இயங்கமுடிகிறது. அதுவும் சமூகம் என்ன வகையான கட்டுப்பாடுகளை, பெண்ணுடல் என்பதால் வழங்குகிறதோ அந்தக் கட்டுப்பாடுகளுடன் தான் செயல்படமுடிந்தது. அறிவியல் புனைவுகள் என்பவை வெறுமனே அறிவியல் விந்தைகளையும், அதன் சமன்பாடுகளையும் மட்டுமே கதையாக்காமல் ஆண்களை அதன் மையங்களாகவும் அறிவியல் என்பதன் பயன்பாடுகளை அவர்களே உடல் வழியாக நுகரக்கூடியவர்களாகவும் சித்திரித்தன. 1960-களின் முடிவில் தான் பெண் கதாபாத்திரங்கள் இந்தப் புனைவுகளில் உள்நுழைந்தனர். ஆனால், பெண்கள் வெறுமனே பாலினப் பூனைகளாக அதாவது, அந்தப் பெண்ணிடமிருந்து கிளுகிளுப்பையும் கவர்ச்சியையும் மட்டுமே கதையின் இதர கதாபாத்திரங்களும் வாசகர்களும் பெறும் பாலின ஊக்கங்களாக மட்டுமே இருந்தனர்.




ஆனால். புற உலகை எதிர்க்கும் மனித சாத்தியமற்ற, தம் மீதான ஒடுக்கப்பட்ட பிம்பங்களையெல்லாம் அழித்துவிட்டு புதிய வகை வரைபட, விளக்கப்பட புனைவுகளை உருவாக்க வேண்டியிருந்தது. பெண்ணின் உடலால் இதுவெல்லாம் முடியாது என்று வரையறுக்கப்பட்ட விதிகளையெல்லாம் இக்கதாபாத்திரங்கள் மீறின. குடும்பத்திற்குப் புறம்பான பணிகளை பெண்ணுடல் சாத்தியப்படுத்தும், விரிக்கும் கற்பனைகளையும் யூகங்களையும் தந்தன. பெண்களுக்கு கற்பனையிலும் புனைவிலும் உடல் பூர்வமான உரிமைகளைக் கொடுத்தன இத்தகைய அறிவியல் புனைவுகள்.




இதில் முதல் தரமானது ஃபிளெட்சர் ஹாங்ஸ் என்பவர் உருவாக்கிய ஃபாண்டோமா என்ற பெண் கதாபாத்திரம். இக்கதாபாத்திரம், சமூகம் காலந்தோறும் பெண்களுக்கு எதிராக உருவாக்கிக் கொண்டே இருக்கும் தீயவடிவங்களை எதிர்க்கும், ஒரு பழமையான எகிப்திய பெண். இவளுக்கு வயது எல்லையே கிடையாது. அவள் தன்னை கபால முகமுடைய பெண்ணாக மாற்றிக்கொள்ளும் சக்தி படைத்தவள். அதுமட்டுமின்றி, தீயச்சக்திகளை எதிர்த்துச் சண்டையிடும் மிகையான ஆற்றலையும் படைத்தவள். இக்கதாபாத்திரத்தின் வழியாக, ஃபிளெட்சர், எத்தகைய பெண்ணை உருவகிக்கிறார் பாருங்கள்! தொல்மரபின் கூறுகளிலிருந்தும் அதன் விடுதலை உணர்வைத் தனக்குள் பொதிந்த பெண்ணாகவும் இருக்கிறாள், பாண்டோமா. ஆண்களால் உருவாக்கப்பட்ட சமூகக்கட்டுபாடுகளுக்குள் உள்ளது போல், சிறுமி, பருவமெய்தியவள், மனைவி, தாய், பாட்டி போன்ற வயது வரம்புகளுக்கு ஏற்ற சமூகப்பொறுப்போ சுமையோ இல்லவே இல்லை. இத்தனை வயதிற்குள் இவள் மரித்துப் போவாள் என்ற உடல் சுமையும் வயோதிகமும் இல்லை. நிதர்சனத்தில், பெண் உடல் மீது, ஆணினுடையதை விட அதிக அழுத்தச் சுமை இருக்கிறது தானே! நவீன காலத்திற்கு ஏற்றபடி, இவள் தன்னை உருமாற்றிக் கொள்ளும் திறனும் உடையவள். ஏன் இவ்வாறான சக்திகளையெல்லாம் உடைய பெண்ணாக மாறியிருக்கிறாள் என்றால் சமூகத்தின் தீயச்சக்திகளை எதிர்த்து இத்தகைய பெண் தான் போராட முடியும் என்பதையும் அவள் உள்ளீடாகக் கொண்டு அதற்கே உருவம் கொடுத்திருக்கிறார்.




இத்தகைய பிற பெண் கதாபாத்திரங்களும், தம் பாலிமை நிலைப்பாடுகளை மீறின. சமூகத்தில் தாம் கடைப்பிடிக்கக்கூடா மரபுகள், பாலினப்பாத்திரங்களை மாற்றிக்கொள்ளுதல், ஒற்றைப் பாலின உலகம், உயிர்க்கதாபாத்திரங்கள் இயந்திரங்களுடன் பாலுறவு கொள்ளுதல், செயற்கைக் கருவுறுதல், பால் மாற்றப் போக்கு, பல உறவுகளை ஒரே சமயம் பேணுதல் போன்றவை இக்கதாபாத்திரங்களின் இயல்புகளாக இருக்கின்றன. சமூகத்தில் தன் உடலுக்குச் செய்யக்கூடாதவற்றை எல்லாம் இத்தகைய பால் நிலைப்பாடுகள் வழியாகப் பெண்கள் கடந்து கொண்டே இருக்கின்றனர். மெல்ல மெல்ல பெண்ணுரிமையை வலுப்படுத்தும் மிகையான பிம்பங்களைத் திரையிலும் இலக்கியத்திலும் உருவாக்கிவிட்டு அவற்றை வாழ்க்கைக்குள் புகுத்தும் சாத்தியங்களை இத்தகைய கதாபாத்திரங்கள் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், யதார்த்தத்திலும் பெண்களால் இவையெல்லாம் முடியும் தானே?





மார்கரெட் ஆட்வுட் எழுதிய, பணிப்பெண்ணின் கதை இவ்வகையில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இருபத்தியோராம் நூற்றாண்டின் கிறித்துவமதவாதிகளைப்பற்றியது. இன்னும் சொல்லப்போனால், இந்த நூல் அடிப்படையில் பெண்களின் பாலியல் அரசியலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. சமூக ஒழுக்கம் பாராட்டித் தொடர்ந்து பாலுணர்வை அடக்குவதும் கட்டுப்படுத்துவதும் என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என்ற சூழலை அலசும் நூல். விஞ்ஞானப்பூர்வமாக உணர்ச்சிகளையும் பாலியலையும் ஆராயும் கதை. சமூக மதிப்பைப் பொருத்தவரை ஒருவருக்கு ஒருவர் பொருத்தமென்று கருதப்பட்டாலும் அவர்களுக்கு இடையே குழந்தை உருவாக்கும் தகுதி இன்மையால், அவர்கள் தமக்கான பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தி, அந்தப் பெண் வழியாக குழந்தை ஈனும் வசதியையும் வாய்ப்பையும் பெறுகிறார்கள். இதன் வழியாக, ஓர் ஆண் என்ன மாதிரியான பாலியல் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் பெறுகிறான், அதன் வழியாக தன் அதிகாரத்தை எப்படி தக்கவைத்துக் கொள்கிறான் என்பதைக் கதையாக்கியுள்ளார். சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்ட வரப்போகும் நூற்றாண்டின் கதை இது.





வெறும் சக்கையாக இருந்த அறிவியல் புனைவுக்கதைகள், பெண்களால் எழுதப்பட்டதாலும், பெண் கதாப்பாத்திரங்கள் புனைவுகளானதாலும் அவை இலக்கியமாக உருவெடுத்தன. உடல் ரீதியான பரிசோதனைகளைப் பெண்களுக்குப் பெருமளவில் வழங்கின. யதார்த்தத்தில் கல்பனா சாவ்லா போன்றவர்கள் விஞ்ஞான ரீதியான பயணத்தை மேற்கொள்வதற்கான முன் தயாரிப்புகளையும் இத்தகைய நூல்களும் படைப்பாக்கங்களும் அளித்தன. தொடக்கத்தில் இவர்கள் யுடோபியன் சிந்தனையாளர்களாகக் கருதப்பட்டனர். அதாவது, கற்பனையில் மட்டுமே காணக்கூடிய முழு நிறைவானதொரு சமூகம் பற்றிய புனைவாளர்களாகப் பார்க்கப்பட்டனர். அது இவ்வுலகில் சாத்தியமே இல்லை என்பதாகவும் கருதப்பட்டது. ஆனால், ஒடுக்கப்பட்ட பெண் தன் உடலிலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியங்களைத் தான் அறிவியல் புனைவு சொல்லிவந்திருக்கிறது என்பதை மனித சமூகம் புரிந்து கொண்டது. மேலும், இதன் வழியாகத் தனக்குத் தேவையான சமூகத்தைக் கற்பனையில் ஒரு நீலப்பிரதியாகவும் உருவாக்கி வைத்துக்கொண்டது.





இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஆணாதிக்க படைப்பிலக்கியங்களையே படைத்தளித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், விர்ஜினியா வுல்ஃப் போன்ற பெண்ணிலக்கிய படைப்பாளிகள் பெண் கதாபாத்திரங்களுக்கு விஞ்ஞானப் பூர்வமான ஆளுமைகளைத்தந்தனர். பெண்ணுரிமைகளைப் பெற்றுத்தருவதில் பெண்ணிய இலக்கியங்களுக்கு இருந்த அதே அளவு பங்களிப்பு பெண்களின் அறிவியல் புனைவுகளின் வழியாகவும் இருந்தது என்பது இன்னும் அதன் அளவில் முழுமையாக அறியப்படாமலேயே இருக்கிறது. பெண்கள் தங்கள் கற்பனையை ஓருலகமாகக் கட்டமைத்தது என்பதே பெண்ணுக்கான உரிமைகளில் ஒன்றாக அவர்களின் கற்பனை உலகமும் பார்க்கப்படவேண்டும் என்பது தான். நமது இயல்பான உலகத்தை மீறி, நமது அறிவியல் அறிவின் வழியாகவும் படைப்பாற்றல் வழியாகவும் வேறு உலகங்களுக்குப் பயணிக்க முடியும் என்பது எவ்வளவு ஓர் அரிய வாய்ப்பாகப் பெண்களுக்கு இருந்திருக்கும்! ஏனெனில், பெண்ணினால் படைக்கப்படும் அறிவியல் புனைவுகள் எல்லாம் ‘அறிவியல் புனைவுகளா’க மட்டுமே பார்க்கப்படுவதில்லை. அதையும் மீறி, அவை பெண்ணால் எழுதப்பட்டது என்றும் பார்க்கப்படுகிறது.



தொடக்கக்காலத்தில் ஆண்களுக்கான படைப்புலகமாகப் பார்க்கப்பட்ட இவ்வூடகங்களில் செயற்கைத்தனமான பெண்ணுடல்களும் பெண்மை என்று கருதப்பட்ட உணர்வுகளும் அற்ற உடல்களும் தான் கதாபாத்திரங்களாயின. மேலும், அவை சாத்தியங்கள் உள்ளன என்பது போல் சிலவற்றைச் சித்திரித்தாலும் உண்மையில் அவை சாத்தியமில்லை என்பது போலும் சில புனைவுகளைக் கட்டமைத்தன. பெண் என்பவள் இவள் இல்லை, என்பதாய் சமூகத்திடம் மறுக்கவும் அக்கதாபாத்திரங்கள் உறுதுணையாக இருந்தன. நாள்பட நாள்பட, இச்செயற்கைக் கட்டமைப்புகள் உடைந்து, அவை பெண்ணின் இயல்புகளை இன்னுமாய் விரித்தன. பெண்ணிய உரையாடல்களுக்கு முதுகெலும்பாய் மாறின. மாதிரிகளாய் அவற்றை வைத்து, மேன்மேலும் விவாதங்களைப் பேச உறுதுணையாக இருந்தன. உண்மையில் இவையெல்லாம் பெண்களால் முடியும்தானே?




குட்டி ரேவதி
நன்றி: அரும்பு

கருத்துகள் இல்லை: