நம் குரல்

ஆண்மை இல்லை



தாழ்த்தப்பட்ட பெண்களின் மீது தாழ்த்தப்பட்ட ஆண்களின் ஆண்மை உணர்வு இயங்கும் முறை குறித்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஓர் ஆய்வு நடந்தது.


ஆதிக்க சாதி ஆண்கள் பிற ஆண்கள் மீது செலுத்தும் ஆண்மை உணர்வு பற்றியோ ஏன் அவர்களே தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது காட்டும் ஆண்மை உணர்வு பற்றியோ ஓர் ஆய்வை செய்யத் துணியாத சூழலில் மேற்சொன்ன ஆய்வு முற்றிலும் விசித்திரமான விளைவுகளை எழுப்புவதாகவும் ஆபத்தான நோக்கங்களையும் கொண்டதாகவும் இருந்தது.


மேலும் இவ்வாய்வு ஆதிக்கசாதிப் பெண்கள் தாழ்த்தப்பட்ட ஆண்கள் மீது கொண்டிருக்கும் சாதிமயமான அகப்பிடிவாதத்தை அகற்ற விழையாததாகவும் இருந்தது.


இன்று நேரடியாக ஆண் – பெண் என்ற எதிரெதிர் நிலைகளை எடுக்கமுடியாத ஓர் அரசியல் நிலை உருவாகும் சூழலில், கவிதை, கட்டுரை, புனைவு, ஆவணம் என எல்லாவற்றிலும், ஆண் என்ற ஒன்றே போதுமானது பெண் எதிர்ப்பதற்கு என்ற காரணம், நவீனப் பெண்ணிய இயக்கங்களுக்கு பெருத்த அளவில் தோல்விகளை ஈட்டித் தந்தது என்று சொல்லவேண்டும்.


சாதியையோ மற்ற அதிகாரத் தடிகளையோ துணை கொண்டு அதே விதமான அதிகாரத்துடன் இயங்கும் பெண்களால், ஒடுக்கப்பட்ட பிற சாதி அல்லது பிற நிலைப் பெண்களுக்கு தம் அதிகாரத்தில் குறைந்த பட்ச அதிகாரத்தைக்கூட பகிர்ந்தளிக்கவோ பெற்றுத்தரவோ இயலாமல் போயிற்று. என்ன தான் கவிதை எழுதினாலும், ஓவியம் தீட்டினாலும் திரைச்சித்திரங்கள் வடித்தாலும் இந்தியப் பெண்களின் அகமனநிலை ஆண்மையை வலிந்து ஏற்றுக்கொள்வதாகவே இருக்கும் வரை அதிகாரக் குலைப்போ, அதிகார நசிவோ, ஏன் அதிகாரப் பகிர்வோ கூட சாத்தியப்படாமல் போகலாம்.


ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக, தன் கைகளில் இருக்கும் அதிகார ஆண்மையை இழக்கும் துணிவும் பெண்களுக்கு வேண்டும்.


இந்தச் சமன்பாடுகளைப் புரிந்து கொள்ள, தன் ஓய்வில்லா அதிகாரப் போட்டிகளுக்கிடையே சிறிது இடைவேளையும் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் போராடிக் கொண்டிருக்கும் அப்பெண்கள் அதிகாரப் போட்டிகளில் பங்கெடுப்பதே இல்லை. அது ஒரு பழங்குடிப்பெண்ணின் மனம்!



பெண்மையும் ஆண்மையும் மயங்கிய நிலையில் எங்கோ துயில் கொண்டிருக்கிறது உடலின் பிரக்ஞை. அதைத் தொட்டு எழுப்ப விடுதலையான மொழி உதவுக்கூடும்.

ஆண்மை இல்லை

அன்று மழையோ மழை

நதியின் மீதெல்லாம் மழைக்குஞ்சுகள்

அடிவயிற்றின் பயிர்மேடு

பரவசத்தில் சிலிர்த்து எழ

ரம்மியமான மந்தகாசப் புன்னகையை

உடலெங்கும் நழுவவிட்டபடி

மழை தரையிறங்கியது

நனைந்து உடலொட்டிய பாவாடையை

உயர்த்தி நின்றது காடு

ஓய்ந்த மழையை

அம்மாவின் சொல் மீறித்

திமிறிப் பறந்த பறவை சொன்னது

நினைவுகளின் தடயங்களை

மழையால் அழிக்கமுடிவதில்லை

பகல் முழுதும், பின்னும்

அதன் பாடல் ஓயவேயில்லை

மகரந்தச்சேர்க்கைக்குப் பின் தளும்பும் மலர்

சோர்வுடன்

பூமியில் எங்குமே ஆண்மையில்லை

தனிமையின் ஆயிரம் இறக்கைகள், (கவிதைத் தொகுப்பு, பக்கம் 9, 2003)




குளிர்ந்த விதை

ஏற்கெனவே இதயத்தின் கனிவான சதைப்பகுதிகளையெல்லாம்

அவன் தின்று தீர்த்திருந்தான். விதையைத்

தரிசுநிலப் பாழ்வெளியில் விட்டெறிந்தான்.

முன்னோர்களின் எச்சம் என்னோடு தீர்ந்துவிடாதபடிக்கு

ஆயிரமாயிரம் மரங்கள் பருவமெய்துவதற்கான

ஊட்டத்தை

எனது கால்களுக்கிடையே ஒளித்து வைத்திருந்தேன்

எறும்புகளும் சுவைத்திடா வண்ணம் ஓட்டை

வலியதாக்கிக் கொண்டேயிருந்தேன்

தளிரற்ற மரக்கிளையில் பறவைகள் வந்தமர்வதில்லை

சூரியன் ஒளியை வெப்பமாய் எங்கெங்கும்

ஊற்றிக் கொண்டிருந்தான்

அவ்வழியே களைப்பாறிய எருமை சொரசொரப்பான

தனது நாவால் எனை முழுதுமாய் விழுங்கியது

அதன் சீரணமண்டலம் குளிரூட்டியது

சிறிதும் சேதமிலாது வெளியே பாய்ந்தேன்

மழைக்குப் பூமி தயாராக

மண்ணுள்ளே கருக்கொண்டேன்

முளையெழுந்தது

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (கவிதைத் தொகுப்பு, பக்கம் 50, 2003)



குட்டிரேவதி

கருத்துகள் இல்லை: