நம் குரல்

என் உடல் சொற்களாலான தேன்கூடு


என்னுள் கொந்தளிக்கும் ஒவ்வொரு உணர்வும் சொல்லின் உருவெடுத்த பின்பே அமைதியடைகின்றது.





மறுக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட புறக்கணிக்கப்பட்ட சொற்கள் எல்லாம் என் நெஞ்சுக்குள் சிறகடிக்கின்றன. சரியானதொரு பருவ முதிர்ச்சியில் தடைசெய்யப்பட்ட உணர்ச்சிக்கீடான ஒரு சொல்லைத் தேடித் தான் என் கவிதை தொடங்குகிறது.




உணர்ச்சிகளை எல்லாம் உச்சரித்துவிடுவது மிக மிக அவசியம். எனக்கும் சரி. உனக்கும் சரி. எனக்குப் பித்தேறாது இருக்கும். உன்னைக் கொலை செய்யாது இருப்பேன். வசவுச் சொற்கள் கூட இம்மாதிரியான சந்தர்ப்பங்களுக்காகக் கண்டறியப்பட்ட கவித்துவச் சொற்கள் தாம்.




ஓர் உணர்விற்குள் ஆட்பட்டிருக்கும் நேரத்தில் நெஞ்சக் கடலில் ஒற்றைச்சொல் அலைபாய்ந்து இருக்கும். பின் அதனுடன் ஒட்டிய சொற்களை எல்லாம் கரைக்கு அழைத்துவரும். அங்கோ கவிதை பிறக்கத் துடித்து செவுள் விரிக்கும்.




என்னைப் பொறுத்தவரை கவிதையில் பங்கேற்கும் சொல் ஒவ்வொன்றும் ஒரு படிம உரு. மாறாக நேரடியான சொற்கள் எல்லாம் வணிகத்திற்கு உதவுபவை. உதாரணங்கள்: பற்று, வரவு, முதலீடு.




அல்லது கதாசிரியர்க்கு உதவக்கூடியவை. கவிதையில் சொற்கள் காலத்தின் பயணதூரமும் வலியும் பதிவான கூழாங்கற்களாக மாறவில்லையென்றால் அது கவிதையே இல்லை.




அதைவிட கவிதை உருவாக்கத்தின் எத்தருணத்தில் ஒரு சொல் குறியீடாகவோ சமிக்ஞையாகவோ பருவம் எய்துகிறது என்பது மிக முக்கியமான அவதானம்.




சொற்களின் உருவம் காணும் முயற்சியற்றவர்கள் தொடக்கத்திலேயே நின்றுவிடலாம். அவர்கள் கவிதை தரும் அலுப்பை, புரிதலின்மையைச் சந்திக்கும் அபாயமிருக்கிறது.




நேரடியான பெண்ணியச் சொற்களான ஆண் பெண் ஆண்மை பெண்மை உடல் தூமை யோனி முலைகள் செயலிழந்து போய் அவை பலபரிமாண எழுச்சியடைந்துள்ள காலத்தை எட்டியுள்ளோம்.




ஒற்றைப் பரிமாணச் சொற்கள் கரும்புச்சக்கைகளைப் போல துப்பப்படுபவை. அகராதியில் இருக்கும் சொற்களைப் போல நேரடியான அர்த்தம் கொள்வதற்கு அகராதிகளே போதுமானவை இல்லையா?




என் உடலில் எல்லா வகையான அனுபவங்களையும் நினைவுகளையும் உணர்ச்சிகளையும் சொற்களாகவே சேமித்துவைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அவற்றை என்னுள் விதைநெல்லைப் போல பேணுகிறேன். அவை விளைந்து காட்சியாக்கும் சொர்க்கத்தால் தான் நான் அமைதியுறுவேன்.




கவிதைக்குச் சொல்லே அலகு என்று சொல்லவே இத்தனை முழக்கங்களும்.




இறுதியாக ஒரு முறை என்ற இக்கவிதை 2003- ல் வெளியான தனிமையின் ஆயிரம் இறக்கைகள் கவிதைத் தொகுப்பில் பக்கம் 63-ல் இடம்பெற்றது.




இறுதியாக ஒரு முறை
இதயக்கமலங்கள் மலரும் மாலைப்பொழுது


ஓர் உறவின் முறிவைப் போல்
சடாரென்று விழுந்து நொறுங்கிப் போகின்றன
சூரியனின் கைகள் மேற்கே


தெருவெங்கும் கூச்சமிழந்த பெண்களின்
சிரிப்பொலிகள்
வாணவேடிக்கைகளாய் வெடித்து ஓய்கின்றன


நிசப்தம் ஜன்னலையும் கதவுகளையும்
சாத்தும்போது
அவள் அன்று ஐந்தாம் முறையாகக் களைப்புற்றிருந்தாள்


‘சுவர்களையெல்லாம் உடைத்துக் கொண்டு வெளியேற வேண்டும்.
ஆடைகள் எதுவும் தடுக்காது நகரத்தின் மைய வீதி வழியே
ஓடிக் கொண்டே இருக்கவேண்டும்
பருவம் காலம் இடம் மனிதர் பேதமின்றி
ஒரு பழைய ஞாபகத்தின் தொங்குபாலமும்
வேகத்தைக் குறைக்காது…
ஒரு பாடலின் கடைசி வார்த்தை மலைமடிப்புகளுக்கிடையே
ஒலித்துக் கொண்டேயிருப்பது போல்’
நிலத்திலிருந்து உடலை உயர்த்தும்போது
உடலெங்கும் பாசி படர்ந்து தரையோடு அழுத்தியது
 
குட்டி ரேவதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


கருத்துகள் இல்லை: