நம் குரல்

நிர்வாணம் - நூறு கோடி விளக்குகளின் வெளிச்சம்


பெண்ணின் நிர்வாணம் ஆபாசமானது, கவர்ச்சியானது என்பதைத் தாண்டி அதன் ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் அறிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ள சமூகக் காலக்கட்டம் இது. மாண்டோவின் கதைகளில் வரும் பெண்கள், நிர்வாணத்தைத் தான் எப்பொழுதும் தமது அணிகலன்களாக அணிந்திருப்பர். தம்மை நசுக்கும் சூழல்களையும் ஆண்களையும் தம் நிர்வாணங்களால் பரிகாசம் செய்வர். ஏன் கொலையும் செய்வர். சாதத் ஹசன் மாண்டோவின் கதைகளின் வரும் பெண்களைத் தொடர்ந்து சென்றிருக்கிறீர்களா? அவர் முன்வைக்கும் ‘பெண் நிர்வாணம்ஒரு கருப்புக் குதிரையைப் போன்றது. இரவுகளில் துரத்தும் கனவைப்போன்றது. பீதி நிறைந்தது. அல்லது மாண்டோவின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமானால் அது ‘நூறு கோடி விளக்குகளின் வெளிச்சம் பொதிந்தது. கண்ணைக் குருடாக்குவது.


பெண் நிர்வாணம் குறித்த என் இரண்டு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஆறு மாதம் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய காலம் அது. பகல் இரவு என்று பாராமல் பெண்களுக்குப் பிரசவம் பார்க்கும் பயிற்சியில் ஈடுபடவேண்டும். பொது வார்டுகளில் பெண்கள் வரிசையாக இருபுறமும் மெத்தைகளில் பெரும்பாலும் உடலில் உடையின்றி கிடத்தப்பட்டிருப்பர். ஆனால் உடையில்லாத உணர்வே அங்கு எவருக்கும் இருக்காது. நிர்வாணத்தின் பிரக்ஞையின்மை. பிரசவ வலியுடன் அவர்கள் போராடுவது கதறலாகவும் ஓலமாகவும் அழுகையாகவும் முதலில் காணும் எவரையும் நடுங்க வைக்கும். மூஞ்சில் அறையும். அங்கு குழந்தைகள் அழுது கொண்டே பிறப்பர். இறந்து பிறப்பர். உருவச் சிதைவுகளுடன் பிறப்பர். அரைகுறையான பிரசவத்தால் பல்லிகளைப் போலவும் உரித்த கோழிக்குஞ்சுகளைப் போலவும் குருதிப்பூச்சுடன் நழுவி விழும் பிண்டங்களாய்ப் பிறப்பர். அங்கு நிர்வாணம் என்பது மானுட வாழ்விற்குத் தேவையான மறு உற்பத்திப் பணியுடன் தனிமனித விழைவின் வலியை இணைப்பதாகத் தோன்றும்.

இன்னொரு நிகழ்வு. தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற ஓர் இளம்பருவப் பெண் ஆற்றொடு போக, அவளைக் காப்பாற்றும் முயற்சியில் அவளின் உடையும் நீரொடு போயிருந்தது. அம்மணமாகத் தான் காப்பாற்றப்பட்டாள். அந்த அம்மணம் அவளுக்கு அவமானமாகத் தோன்ற, தான் உயிர்பிழைத்ததினும் அவமானமே அவளுக்குப் பெரியதாகத் தோன்ற அவள் தூக்கிட்டுத் தன்னை மாய்த்துக் கொண்டாள்.

ஆனால், மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் ஆயுதப்படைக்கு எதிரான போராட்டம். மனோரமா என்ற பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற ஆயுதப்படைக்கு எதிராக பத்துக்கும் மேலான தாய்மார்கள் உடைகளைக் களைந்து, அசாம் துப்பாக்கிப் படையின் முகாம் முன்னால், ‘எங்களைக் கற்பழியுங்கள்! எங்களைக் கொல்லுங்கள்! எங்கள் சதைகளை எடுத்துக் கொள்ளுங்கள்!என்று கோஷமிட்டனர். உடலின் நிர்வாணத்தினும் கூர்மையான ஆயுதம் ஏதுமில்லை என்பதை நிரூபித்த போராட்டம் அது.

மேற்சொன்ன வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு உணர்ச்சிகளை எதிரொலிக்கிறது, நிர்வாணம். எனக்கும் நிர்வாணம் என்பது ஓர் ஆயுதமாகவே படுகிறது. அதை உறையிலிருந்து வெளியே இழுக்கும் அவசியம் பொருத்து தான் அதற்கு ஒரு மேன்மையான அர்த்தத்தைக் கொடுக்க முடியும் என்று நம்பினேன். அதன் பொருட்டே ‘நிர்வாணம்’ என்ற இக்கவிதை, 2003 - ல் வெளிவந்த கவிதைத் தொகுப்பான ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகளில்’ இடம்பெற்றது.


நிர்வாணம்

உனக்கும் எனக்கும் அவளுக்கும்
நிர்வாணம் தான் பளபளக்கும் ஆயுதம்;
குருதியின் வியர்வையில் நனையும் போதெல்லாம்
ஒரு பயிற்சியின் முழுமையை அடைகிறது
மரங்கள் நிர்வாணத்தை யடையும் போதுதான்
இறக்கைகள் துளிர்க்கும் பறவைகளாயின
சீனப் போர்வீரன் சொல்லுவான்:
‘உறையிலிருந்து ஒரு பொழுதும்
வாளை வெளியே இழுக்காதே
அவசியமின்றி
நிர்வாணம் வளர வளரத்
தீயின் கொழுந்தைப் போல்.
நிர்வாணத்துடன் வாழ்வது எளிதன்று
அது உன்னை அலைக்கழிக்கும்
உபயோகிக்கும் வாய்ப்பைத் தேடி
வாளை ஒரு போதும்
வெளியே இழுக்காதே அவசியமின்றி
அது துருப்பிடித்துச் சல்லடையானாலும்
ஆனால் உன்னோடே
எப்போதும் வரித்துக்கொள் அதை.







குட்டி ரேவதி
(தனிமையின் ஆயிரம் இறக்கைகள், முதல் பதிப்பு: 2003, பனிக்குடம் பதிப்பகம்,
பக்கம்; 38)

கருத்துகள் இல்லை: