நம் குரல்

கவிதைக்குத் தலைப்பு
கவிதைக்குத் தலைப்பு அவசியம் என்பது பற்றிப் பல சமயங்களில் என் கவித்தோழிகளுடன் வாதாட வேண்டியிருக்கிறது. கவிதைக்குத் தலைப்பு அவசியமில்லை என்பது அவர்கள் வாதம். தலைப்பில்லாமல் கவிதை முழுமை பெறுவதில்லை என்பது எனது. சிறுகதைக்கோ நாவலுக்கோ இம்மாதிரியான கேள்வியின் அவசியமே இருந்திருக்காது. இந்நிலையில் அவர்கள் கூறுவது: கவிதை எழுதி முடித்த பின்பு சடங்கார்த்தமாக அல்லது கவிதை வரியிலிருந்து ஒரு வார்த்தையை அல்லது வரியை தலைப்பாய் இடுவது முற்றிலும் செயற்கையானது என்று. ஆனால், எனக்கோ, கவிதை என்பது ஒரு குறியீட்டுக் கலை வடிவமெனில் அதற்குக் குறியீட்டுத் தன்மையைத் தருவதே அதன் தலைப்பு தான். வடிவம் சம்பந்தப்பட்ட நியாயங்களும் உடன் உண்டு.

உணர்ச்சிகளின் தீப்பிழம்பு தோன்றும் இடத்தை, காலத்தை அல்லது அந்தத் தீநாக்கு நோக்கிச் செல்லும் திசையைப் பெயரிட்டுக் குறிப்பிடுவது தான் தலைப்பு. இந்த நிகழ்வு கவிதையில் தான் ஏற்படுகிறது. இதன் க்ஷண வேகத்தைப் பெயரிட்டு விடுவது அவசியத்திலும் அவசியம். ஏனெனில் அதே வேகத்தில் கவிதை முடிந்தும் போகிறது. அது முடிந்து போகும் முன் பெயரிட்டு அதை அழைத்து விடுவது தான் கவிதைக்குக் கொடுக்கும் மரியாதை என்று தோன்றுகிறது. கடலின் ஆழத்தைத் துளாவி முத்துக் குளித்து எழும் மீனவன், கண்டடையும் கடலுக்கு வெளியிலான ஆசுவாசம் போலவும் தலைப்பு உருக்கொள்கிறது. சிற்பி, படைப்பின் வளைவுகளையும் நுணுக்கங்களையும் கூர்மைப்படுத்திய பின்பு கண் திறப்பதைப் போலும். வாசகனை படைப்புக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் திறவுகோலாகவும் இருக்கலாம். படைத்தவனுக்கு படைப்பிலிருந்து தன்னையே வெளியே உந்திப் படைப்பைப் பொதுவுடைமை ஆக்கும் வாயிலும் அதுவே.


கவிதை என்பது கதை விடுவது அன்று. ஒரு நிகழ்வைச் செய்தியாக்குவதுமில்லை. அது ஒரு பெயர்ச் சொல்லும் அன்று. உணர்ச்சியின் பருப்பொருள் தன்மையைச் சொற்கள் மற்றும் அதன் அர்த்தங்கள் வழியாக வரைந்து காட்டி, மழுங்கற் தன்மையால் நுண்மைகளைக் கேட்டுணரும் சக்தியிழந்த சாமானியனுக்கு விளக்க முயல்வது போல. கவிதையில் நிகழும் யதார்த்தத்தின் சிதைவைத் தலைப்பு என்பது குறியிட்டுக் காட்டுகிறது. தலைப்பிடுவதும் கவிதை எழுதும் திறனுடன் சேர்ந்தது தான். கவிதை பேசும் அழகியலை நிறைவு நிலைக்குக் கொண்டுவருவது. கவிதையின் தலைப்பு என்பது அந்தக் கவிதையின் வரிச்சுவர்கள் எங்கும் எதிரொலித்து ரீங்கரித்துக் கொண்டேயிருப்பது. வாசகருக்கு அந்தக் கவிதையை அதன் உண்மையான அர்த்தத்தில் அடையாளம் கண்டறிய உதவுவது. ஒரு துப்பறியும் நாவலில் எழுத்தாளன் என்பவன், துப்பைத் தேடிச் செல்லும் வழியில் எல்லாம் ஆங்காங்கே ஆவலை, புதிரை, தவிப்பை, ஊசல் நிலைகளை வாசகனுக்கு ஏற்படுத்திச் செல்வது போல கவிதையும் தன் இறுதி வரியில் சுமந்திருக்கும் துப்புக்கான புதிரைத் தலைப்பிலேயே சுட்டுகிறது. தாயின் கருவுக்குள் துடிப்புடன் காத்திருக்கும் சிசுவைப் போன்றது தலைப்பு.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: