நம் குரல்

கதை நெய்தல்

ஆறு மாதங்களாக ஒரு திரைப்படத்திற்குக் கதை நெய்யும், வசனம் எழுதும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். மிகவும் உவப்பான அனுபவமாக இருந்தது. கதை உருவாகும் போதே பல கதாபாத்திரங்கள் தோன்றுவதும் மறைவதும் தங்கள் கைகளை நம் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்வதும் என புது விதமான அனுபவத்தைக் கொடுத்தது. கதையின் போக்குகள் நாளுக்கு நாள் மாறியவாறே இருக்கும். கதாபாத்திரங்கள் முழுமையாக உருப்பெறுவது படத்தின் முதல் திரைப்பதிப்பு உருவாகும் வரையிலும் தொடரும். அந்தப் படம் தந்த அனுபவத்திலும் ஊக்கத்திலும் இப்பொழுதும் சென்ற மாதம் முதல் மற்றுமொரு திரைப்படத்திற்குக் கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.

தற்காலத் தமிழ் சினிமாவின் சம்பிரதாயங்களுக்கும் நியாயங்களுக்கும் உட்பட்டு அந்தக் கதா பாத்திரங்களின் தலை சீவப்படும். பொட்டு வைக்கப்படும். குணச்சித்திரங்கள் கதையின் வழியாக உருவேற்றப்படும். நடிகர்கள் அந்தக் கதா பாத்திரங்களுக்குள் புகுந்து கொண்டு அவற்றின் கண்களைத் திறந்து விடுவர். நம் சிந்தனையின் இடைப்பட்ட நினைவு வெளிகளிலிருந்தெல்லாம் அக்கதாபாத்திரங்கள் தோன்றும் தருணம் மிகவும் உற்சாகம் கொப்புளிக்கக் கூடியது. இன்னொரு கதாசிரியருடன் எனது இப்பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர் தினம் தினம் கதையை தொடக்கத்திலிருந்தே சொல்லத் தொடங்குவார். கதையின் போக்குகள் சீர்ப்படுமாறு அவர் சொல்வதும் இன்னும் இன்னும் கற்பனையைச் செழுமையாக்குவதும் உற்சாகமான பணியாக இருக்கும். கதைப் போக்கைச் செதுக்குதல் என்று சொல்லலாம். மாறி மாறி கதாபாத்திரங்களின் உள்ளுலகை உருவாக்குவதில் எங்கள் இருவருக்கும் உண்டாகும் ஈடுபாடும் வேகமும் எங்களைக் கதைக்குள் தலைகுப்புற விழச்செய்வது போல் நாங்கள் நிற்கும் தரையை இழுப்பதையும் உணர்வோம். கதைக்குள் பாய்ச்சலுடன் குதித்து மூள்கித் திளைப்பதும் எதிர் நீச்சலடிப்பதும் எனக்குப் பிடித்தமானதாய் இருப்பதால் மீண்டும் மீண்டும் இந்தப் பணியைத் தேடித் தேடித் தொடர்கிறேன்.

அவரும் நானும் அதிகாலையிலேயே ஒரு பெரிய உணவு விடுதியில் சந்திப்போம். அவர் வீட்டிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அந்த உணவு விடுதிக்கு ஓட்ட கதியில் வருவார். தினமும் ஓடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ஓட்டப் பழக்கம் கற்பனையின் ஊற்றுக்கு ஆரோக்கியமானது என்று கூறுவார். நிறைய கதைக் காட்சிகளை அவ்வாறு ஓடி வரும் போது தான் கண்டடைவதாகக் கூறுவார். எனக்கு நீண்ட தூரம் நடந்து செல்வது அம்மாதிரியான அனுபவத்தைக் கொடுப்பதாக உணர்ந்திருக்கிறேன்.


கதை நெய்தல் கடுமையான உழைப்பையும் மனம் குவிந்த நிலையையும் வேண்டுவது. கற்பனையின் பாய்ச்சலும் யதார்த்தத்துடனான தொடர்ச்சியும் பேணவேண்டுவது. இந்நிலையில் உருவாகும் கதை வெறும் கதை சொல்லலை மட்டுமே பணியாகக் கொண்டிருப்பதில்லை. இயக்குநர் அல்லது கதாசிரியர் உணர்ந்த அனுபவத்தை பார்வையாளர்க்கு வாசகர்க்கு கடத்துதலாகவும் இருக்கலாம். அப்படியான மெய்ம்மையான திரைப்படங்கள் தமிழில் மிக மிகக் குறைவு. கதைக்காக ரூம் போட்டு யோசிப்பவர்களிடம் அனுபவ விளைச்சலும் குறைவாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.


தீவிரமான ஈடுபாட்டைக் கோரும் எந்தப் பணியும் உலோகாயத சம்பவங்களில் இருந்து நம்மை விடுவிக்கின்றன. அப்பொழுது புனைவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையே கூடுபாயும் நிலையை அடைகிறோம். முந்தைய திரைப்படத்திற்கு ஒரு வசனகர்த்தாவுடன் இணைந்து வேலை செய்யும் அனுபவம் கிடைத்தது. அவர் ஒவ்வொரு கதாபத்திரத்தையும் பக்கம் பக்கமாக வசனங்களால் நிறைப்பவர். அவருடைய பாத்திரங்களால் அமைதியாக ஒரு விஷயத்தை வெளிப்படுத்தவே முடியாது. கேட்டால் சொல்வார், ‘தியேட்டர் சென்று தமிழில் வரும் எல்லா திரைப்படங்களையும் பாருங்கள். வசனங்களால் தான் வசூல் பெட்டிகள் நிறைகின்றன’, என்று. ஆனால் மனித மனங்களை வசனங்கள் அற்ற உறவு நிலைகள் எப்படி வெல்லுகின்றன என்பதைத் திரைக்குக் கொண்டு வருவது தான் சினிமா விடுக்கும் சவால் என்பதே நான் புரிந்து கொண்டது.குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: