நம் குரல்

கண்ணை அவிழ்க்கும் கவிதை

சமீபத்தில் எம்.ஏ.நுஃமான் அவர்கள் தமிழாக்கம் செய்து தொகுத்திருந்த ‘பலஸ்தீனக் கவிதைகள்’ என்ற கவிதைக் தொகுப்பை வாசித்தேன். அப்போது என் மனதில் சிக்கிக்கொண்ட கவிதை இது:

கிட்டத்தட்ட நான்கு வயதுச் சிறுமி ஒருத்தியின் நாட்குறிப்பில் இருந்து

நாளை கட்டை அவிழ்ப்பார்கள்
எனக்கு யோசனையாக இருக்கிறது
எஞ்சியிருக்கும் என் ஒற்றைக் கண்ணால்
ஆப்பிள் பழத்தின் ஒரு பாதியை மட்டும்
தோடம் பழத்தின் ஒரு பாதியை மட்டும்
என் தாயின் பாதி முகத்தை மட்டும் தான்
என்னால் பார்க்க முடியுமா?

துப்பாக்கிக் குண்டை நான் பார்க்கவில்லை
என் தலைக்குள் வெடித்த
அதன் வலியை மட்டுமே உணர்ந்தேன்
பெரிய துப்பாக்கியுடன்
நடுங்கும் கைகளுடன்
கண்களில் ஒரு வெறித்த பார்வையுடன்
அந்த ராணுவ வீரன்
என் மனதில் அழியாதிருக்கிறான்
அதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை

என் மூடிய கண்களால் இவ்வளவு தெளிவாக
அவனைப் பார்க்க முடியுமென்றால்
எங்கள் தலைகளுக்குள்ளே
நாம் இழக்கும் கண்களை ஈடுசெய்ய
ஒன்னும் ஒரு சோடிக் கண்கள் உள்ளன போலும்

அடுத்த மாதம் என் பிறந்த நாளுக்கு
முற்றிலும் புதியதோர் கண்ணாடிக்கண்
எனக்குக் கிடைக்கும்
சில வேளை பொருட்கள் நடுவில் தடித்தும்
வட்டமாயும் தெரியக்கூடும்
நான் விளையாடும் கண்ணாடிக் குண்டுகள் ஊடே
உற்றுப் பார்த்திருக்கிறேன்
அவை உலகத்தை வினோதமாய்க் காட்டும்

நான் கேள்விப்பட்டேன்
ஒன்பது மாதக் குழந்தை ஒன்றும்
ஒற்றைக் கண்ணை இழந்த்தாக

என்னைச் சுட்ட ராணுவ வீரன் தான்
தன்னை உற்றுப் பார்க்கும்
சின்னஞ்சிறுமிகளைத் தேடும்
ஒரு ராணுவ வீரன் தான்-
அவளையும் சுட்டானோ என்று
எனக்கு யோசனையாக இருக்கிறது

நானோ வளர்ந்தவள்
கிட்டத்தட்ட நாலு வயது
போதிய அளவு நான்
வாழ்க்கையைப் பார்த்துள்ளேன்
ஆனால் அவளோ சின்னக் குழந்தை
எதுவும் அறியாச் சின்னக் குழந்தை



-இது ஹனான் மிக்காயில் அஷ்ஹாவி என்ற பலஸ்தீனப் பெண்கவிஞரின் கவிதை.
இக்கவிதையின் பின் குறிப்பு இதோ:
றஷா ஹெவ்சிய்யே 1988 மார்ச் மாதத்தில் ஒரு கண்ணை இழந்தாள். இஸ்ரேல் வீரன் ஒருவன் றப்பர் குண்டுகளால் சுட்ட போது அவள் கண்ணை இழக்க நேர்ந்தது. அச்சமயம் றமல்லாவுக்கு அண்மையில் உள்ள அல்-பிறெஹ் என்ற ஊரில் தன் பாட்டியின் வீட்டு மாடியில் றஷா நின்று கொண்டிருந்தாள். அச்சமயம் அதே போன்று வேறு இரண்டு குழந்தைகளும் (இருவரும் 9 மாத வயது உடையவர்கள்) ஒவ்வொரு கண்ணை இழந்தனர். இன்ரிபதா இயக்கத்தின் ஏழாவது மாதத் தொடக்கத்தில் சுமார் 40 பேர் இதே போல் பாதிக்கப்பட்டனர்.


ஒரு வித்தியாசமான பார்வைக் கோணத்தில் அஷ்ஹாவி இக்கவிதையைச் செதுக்கியுள்ளார். இராணுவ பயங்கரவாதத்தின் அவலத்தை ஒரு நிகழ்வின் வழியாகச் சொல்லும் போது அது வெறுமனே நிகழ்வைப் பற்றிய வர்ணனையாக இல்லாமல் அதன் காட்சி வெளிக்குள் நுழைவது அதன் அவலத்தை இன்னும் நுட்பமாக வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
குறிப்பாக,
‘ஆப்பிள் பழத்தின் ஒரு பாதியை மட்டும்’

‘என் மூடிய கண்களால் இவ்வளவு தெளிவாக
அவனைப் பார்க்க முடியுமென்றால்
எங்கள் தலைகளுக்குள்ளே
நாம் இழக்கும் கண்களை ஈடு செய்ய
இன்னும் ஒரு சோடிக் கண்கள் உள்ளன போலும்’

‘சில வேளை பொருட்கள் நடுவில் தடித்தும்
வட்டமாயும் தெரியக்கூடும்
நான் விளையாடும் கண்ணாடிக் குண்டுகள் ஊடே
உற்றுப் பார்த்திருக்கிறேன்’

போன்ற வரிகளின் ஊடாக கண்ணின், பார்வையின் விஞ்ஞானப் பரிமாணம் சித்திரம் பெற்றுத் தொடர்கிறது. நகை முரணாயும் யதார்த்தமாயும் காயத்தை விடுவிக்கும் இவரது சொற்கள் காயமுற்று ஒற்றைக்கண் பறிபோன நான்கு வயது குழந்தை கண்ட, காணும், காண்பதாய் கற்பனை செய்து கொள்ளும் உலகமாகிறது. வெளிப்படையான அல்லது மேலோட்டமான எதிர்ப்புணர்விலோ காட்சிச் சித்திரத்திலோ கவிதை உயிர்கொள்வதில்லை. மாறாக, உணர்வின் அடியாழங்களுக்குள் நீந்தும் திடகாத்திரமான பயணத்தை மேற்கொள்ளும் கவிஞரால் தான் கவிதைக்கு உயிர் தர முடிகிறது.

பல சமயங்களில் கவிஞர்கள் உணர்வுகளின் மோலோட்டமான ஒழுக்குகளோடு மட்டுமே பயணித்துவிட்டு கவிதையை எழுதும் போது அது வெறுமனே ஓர் அதிகாரத்தை எதிர்க்கும் பிரச்சாரமாக மட்டுமே முடிந்து விடுகிறது. இடையறாத உணர்வுகளின் பெருக்கத்தில் நீச்சலடித்து அகவெளி காணுவோரின் கவிதைகளில் இம்மாதிரியான மாயாஜாலங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். இக்கவிஞர்கள் ஆகவே கவிதைகளைப் படைப்பதில் சோர்ந்து போவதேயில்லை.

நிகழ்வுக்கும் அனுபவத்திற்கும் இடையில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தினாலும் நிகழ்வையும் அனுபவத்தையும் விட இக்கவிதையில் கவிஞர் பயன்படுத்தும் ஒப்புமைகள் மிகுதியான அதிர்ச்சியை அளிக்கின்றன. அதே சமயம் அவ்வதிர்ச்சி என்றென்றும் அழியாயதாய் பொதியப்பட்டு காலந்தோறும் இடந்தோறும் படிக்குந்தோறும் துல்லியமாகவும் ஆர்ப்பாட்டமின்றியும் வழங்குவதாயும் வடிக்கப்பட்டுள்ளது.


இப்பொழுது மீண்டும் இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள்.




நன்றி: ‘அடையாளம்’ வெளியீடு


குட்டி ரேவதி

3 கருத்துகள்:

மண்குதிரை சொன்னது…

wow excellent
thanks for sharing

சித்தாந்தன் சொன்னது…

மிகவும் மனதைப் பாதிக்கும் கவிதை இது. யுத்தம் குழந்தைகள் மீதும் தன் வெறியை நிகழ்த்திக் கொண்டுதானிருக்கிறது.ஈழத்தின் அகதிமுகாம்களில் அடைபட்டிருக்கும் குழந்தைகளின் மனதுக்குள்ளும் இவ்வாறான வேதனைகள் மீந்திருக்கின்றன

S.A. நவாஸுதீன் சொன்னது…

மனதை பிழிந்தெடுக்கும் கவிதை.