நம் குரல்

ஆண்கள் தாலி அணிவதற்கான தீர்ப்புவரின் நான் மகிழ்ச்சியடைவேன்!





ஆண்கள் தாலி அணிய நேர்ந்தால் இது மாதிரியான விவாதப் பொருளாக ஆகியிருக்காது என்று நம்புகிறேன். 'தாலி' என்பது 2013 - ல் எவ்வளவு பெரிய வேடிக்கை என்பது எல்லோரும் அறிந்ததே.

என்றாலும், திருமணம் என்று வரும் போது தாலி கட்டாமல் கல்யாணம் செய்வதோ அல்லது, சாதி பாராமல் திருமணம் செய்து கொள்வதோ இன்றும் பரவலாக இல்லை. இன்னும் சொல்லப்போனால், முற்போக்குக் கருத்துகளை உதிர்க்கும் ஆண்களுக்குக் கூட  அவரவர் திருமணத்தின் போது, இது பெருத்த குழப்பமாக இருப்பதைப் பல  பார்த்திருக்கிறேன்.

ஆண்கள் 'முற்போக்கு'க் கருத்துகளைப் பேசும் அளவுக்குத் தம் வாழ்க்கையில் அதை நிலைநிறுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதே நான் காண்பது.  ஏனெனில், அது உடன் வாழும் பெண்ணின் சமத்துவத்தையும் அதிகாரத்தையும் விடுதலையையும் உள்ளடக்கியது என்பதால். ஆண்களின் 'முற்போக்கு'க்கருத்துக்கள், 'பெண்நிலை' அற்றவையே பெரும்பாலும்!

பெண் - ஆண் பாலுறவு வைத்துக்கொண்டாலே திருமணம் நடந்ததாகத்தான் அர்த்தம் என்ற இன்றைய தீர்ப்பு கூட பல வகைகளில் பெண்ணுக்குச் சாதகமானதே. இருப்பினும், இம்மாதிரியான சட்டங்களும், தீர்ப்புகளும் நடைமுறை என்று வரும் போது உலர்ந்து ஆவியாகிவிடுவதை பல வழக்குகளில் காண முடிகிறது. 'பெண் சொத்துரிமை' என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருப்பது போல.

இன்னும் ஒரு விஷயத்தையும் குறிப்பிடவேண்டும். 'தாலி' என்பது இந்து மதத்தின், அதன் நிறுவன வடிவமான சாதிப்பிரிவுகளின்  குறியீடாகவே இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆகவே, மேலே குறிப்பிட்ட தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்து மதத்தின் அடிமை முறைகளிலிருந்து பெண் விடுதலை அடைய முதன்மையான வழியாக இருக்கும்.


என்றாலும், ஆண்கள் தாலி அணியும் முறையை இது போன்ற ஏதேனும் தீர்ப்புகள் கொண்டு வரின் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். திருமணம் ஆன ஆண் என்பதன் அடையாளமாய்,  அவர்கள் கழுத்தில் தாலி தொங்குவதே சமூகத்தின் முற்போக்காக இருக்கமுடியும்.  பெண் தாலியால் பெண்களுக்குக் கிடைக்காத சமூக உரிமைகள், ஆண் தாலியால் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஏன், முற்போக்கு ஆண்கள் இதற்கு முன்வரக்கூடாது? ஏதேனும் ஒரு வகையிலேனும், ஆண்கள் 'அடிமைத்தளையை' உணரும் போது தான் விடுதலையின் முழுமையான பொருளை உணரமுடியும், இல்லையா?  பெண்களின் விடுதலை அவர்கள் பற்கடிக்கு உள்ளாவதைக் காணச்சகிக்கவில்லை!




குட்டி ரேவதி






ஆனந்தவிகடன் பத்திரிகைக்கு என் கண்டனம்!








இயக்குநர் மணிவண்ணனைப் பற்றிய இயக்குநர் பாரதிராஜாவின் பதிவு கடந்த வாரம் ஆனந்தவிகடனில் வெளியாகியிருந்தது எல்லோரும் அறிந்ததே. 'ஆனந்தவிகடன்' பத்திரிகை அதை அப்படியே வெளியிட்டிருக்கவேண்டாம் என்பது என் கருத்து!

இயக்குநர் பாரதிராஜா அப்படிச் சொல்லியிருப்பது உரையாடலுக்கும் விவாதத்திற்கும் உட்பட்டது என்றாலும், பத்திரிகைகள் இதுமாதிரியாக ஒரு மனிதர் பிறரைப் பற்றிச் சொல்லும் அவதூறுகளை வெளியிட்டுத் தம்முடைய வணிகச்சந்தையை நிலைநிறுத்திக் கொள்ள முயல்வது ஒரு சமூகக் குற்றமே.

இதை ஒது தனிமனிதரின் கருத்துச் சுதந்திரம் என்றோ, பத்திரிகைகளின் உரிமை என்றோ சொல்லமுடியாது. இது ஒன்றும் கருத்தும் இல்லை. உரிமையும் இல்லை. ஒரு பதிவின் விபரீதங்கள் அறியாத குருட்டுச் செயல்பாடு தான்.  சமீப காலங்களில், தமிழ் உரையாடல்கள் எல்லாம் பிற மனிதர்களைப் பற்றிய அவதூறுகளாலேயே நிறைந்திருக்கின்றன. அது போன்ற ஒன்று தான், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் மணிவண்ணனைப் பற்றிச் சொல்லியிருப்பதும், அதைப் பதிவுசெய்திருப்பதும். இப்படியான இரு ஆளுமைகளின்  உறவு விரிசலைக் கொண்டாடும் மனநிலை, சமூகத்திற்கு ஆரோக்கியமானது அன்று.

நம் பண்பாட்டை மெல்ல மெல்ல அவதூறுகளின் பண்பாடாக்கிக் கொண்டிருக்கிறோம். இரு சகோதர்கள் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்து ரசிக்கும் மனம் மேலோங்கி நிற்கிறது.  இத்தகைய வன்மம் எல்லோருக்குள்ளும் பாம்பின் படம் போல் தலைதூக்கி நிற்கிறது. அது மட்டுமன்று. சமூகத்தில் பொது மனிதராய் இயங்கிக் கொண்டிருக்கும் பலரின் சமூகச்செயல்பாடுகளை மறுப்பதற்கு அவருடைய சொந்தவிஷயங்களைத் தனிமனிதப் பார்வையில் அள்ளிவீசி அவரை முடக்க நினைக்கின்றனர். 

சமூகத்தின் மையத்தளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் 'ஆனந்தவிகடன்' இது போன்ற பதிவுகளைத் தவிர்க்கும் படிக் கேட்டுக் கொள்கிறேன். பத்திரிகையின் தர்மத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது, ஆனந்தவிகடனில் வெளியாகியிருக்கும் அவதூறு! 







குட்டி ரேவதி

இயக்குநர் மணிவண்ணனுக்கு அஞ்சலிகள்!








இயக்குநர் மணிவண்ணனின் மறைவு பெருத்த அதிர்ச்சியைத் தந்துள்ளது எல்லோருக்கும். 

கடந்த சில வருடங்களில் பல சந்தர்ப்பங்களில் அவரைப் பொதுக்கூட்டங்களில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் வாய்த்தன. 
சமூகப் போராட்டங்கள் எழுச்சியுற்றபோதெல்லாம் தன் கொள்கையிலும் தான் கொண்ட நிலைப்பாட்டிலும் உறுதியாக இருந்து, அதையே வெளிப்படுத்தினார். 
மிகவும் தீவிரமான அரசியல் நிலைப்பாட்டையும் நகைச்சுவை தொனிக்கப் பேசுவதில் வல்லவர்.
மூவர் தூக்குதண்டைனைக்கு எதிராகப் போராட்டம் கனன்று கொண்டிருந்த காலத்தில், சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் எந்த விதமான உதவி வேண்டுமென்றாலும் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

சமூகத்தைப் பிரதிபலிக்கிறது, திரைப்படம். திரைப்படம் சமூகத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது. சில திரை ஆளுமைகள் திரைவெளியையும் கடந்து தம் ஆளுமை நிலைகுலையாமல் வைத்துக்கொள்ளக்கூடியவர்கள். நான் அறிந்த அளவில் மணிவண்ணனும் அத்தகையவரே.

இயக்குநர் மணிவண்ணனுக்கு இந்த உலகத்தைப் போல மோசமானதாக இருந்துவிடாது, அவரது மரணம்! அமைதிபெறட்டும்! ஆழ்ந்த அஞ்சலிகள்!





குட்டி ரேவதி



கூழாங்கற்கள் இலக்கியச் சந்திப்பு - 4



இடம்:
தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் - மதி திரையரங்கம் அருகில் . ஆரப்பாளையம் . மதுரை .

நாள்:

16.06.2013, காலை 10 மணி

1.  கவிஞர் கணியன் செல்வராஜ் எழுதிய "மீனவனும் இந்தியனே" தொகுப்பிற்கான கருத்துரை கவிஞர் யாழி கிரிதரன் 


2. கவிஞர் வெண்புறா எழுதிய 'தகிப்பின் குரல்" தொகுப்பிற்கான கருத்துரை கவிதா குமார் 


3. கவிஞர் குட்டி ரேவதி எழுதிய "இடிந்தகரை "தொகுப்பிற்கு கருத்துரை கவிஞர் லிபி ஆரண்யா .




சிறப்புரை : தொழில் நுட்ப வளர்ச்சியில் மொழியும் மக்களும் - ஈரோடு கதிர் .நண்பர்கள் அனைவரையும் வரவேற்கிறோம் ........

சொற்கத்திகள்








சமீபத்திய சொற்கத்திச் சண்டைகள் எனக்குக் கீழ்க்கண்ட பிம்பத்தைத் தந்தன. 


கற்பனை நாற்காலிகள்


வெளியில் சுழன்று கொண்டிருக்கின்றன அவரவர் ஆசைக்கும் அதிகாரத்திற்கும் ஏற்ற அழகில் நாற்காலிகள்.
எவர் கண்களுக்கும் தென்படுவதில்லை மற்றவரின் நாற்காலிகள்
ஒன்றுடன் ஒன்று மோதும் போது மட்டும் தலைகுப்புற தரை தட்டி வீழ்கின்றன
அப்பொழுது அறியத் தந்தோம் நாற்காலியின் வண்ணங்கள்



*

கீழ்க்கண்ட வரிகளும் வன்முறை நிரம்பிய ஒரு தருணம் பற்றியது.


இரவு

இரத்தம் வாங்கிய வாளை
வசதியாக மறைக்கும்
ஓர் உறையாகிறது இரவு
உறைந்த இரத்தத்திட்டுகள்
பொருக்குத்தட்டி உதிர ஏதுவாகிறது
கவனமாய் வடிவமைத்திருந்த இதயத்தை
வன்மம் வகிர்ந்த வலியை
வாள் அதன் குளிர்ச்சியுடன் 
நினைவில் வைத்துக் கொள்கிறது
மெளனத்தின் பெருவிரல் அழுத்தத்தால்
எல்லாவற்றையும் அடக்குகிறது
வேகமாய் இயங்கிய வாள்களை
எல்லாம் உறைக்குள் செலுத்தமுடிகிறது
இரத்தக் கொதிப்புடைய வாள்முனை
உறையின் இருளை முட்டியதும்
முடங்கிப் போகிறது
அதன் கைப்பிடியில் பதிந்திருந்த ஆத்திரம்
கண்விழித்து இரவைத் துழாவுகிறது
வேட்டைக்கான மூர்க்கத்துடன்.


*




குட்டி ரேவதி

'காயாம்பூ' என்னும் புனைவு









ஒரு முறை 'சங்கம் ஹவுஸ்'  என்ற அமைப்பின் கூட்டுறவினால் தரங்கம்பாடியில் இரண்டு வாரங்கள் தங்கி எழுதும் வாய்ப்பு கிடைத்தது.  அச்சு இயந்திரத்தின் 300 வருட நிறைவைக் கொண்டாடும் முகமாக இந்த எழுத்து உறைவிட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐந்து இந்திய எழுத்தாளர்களும் டென்மார்க்கிலிருந்து வந்திருந்த ஐந்து எழுத்தாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

ஒரு நாவலுக்கான முனைப்பு தீவிரமாக இருந்த நேரம். மனதின் அடித்தளத்தில் அதற்கான நீரோட்டங்கள் பாய்ந்து கொண்டிருந்தன. எழுதுவதற்கான தனிமையும், காலமும் வாய்க்காமலிருந்த பொழுது, 'தரங்கம்பாடி' நாட்கள் மிகவும் முக்கியமாகப்பட்டன. பெண்களின் வெவ்வேறு போராட்ட வெளிகளும் அதை அவர்கள் தனி மனித அளவில் வெளியேறி வரும் திறமும் அளவிட முடியாத அளவிற்கு பெண்களிடம் நிறைந்திருப்பதைப் பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் என்னிடம் மேலோங்கியிருந்தது. அப்பொழுது உருவானது தான், 'காயாம்பூ' நாவல். நவீனம் என்று அடையாளப்படுத்தப்படும் எல்லா வாய்ப்புகளையும் தொட்டுவிட்ட ஒரு பெண்ணும், மலை மற்றும் மரபு சார்ந்த நம்பிக்கைகளைத் திடமாகத் தன் உடல் வழியாக உள்வாங்கிய பெண்ணும் சந்தித்துக் கொள்ளும் தருணங்களையும் நிலக்காட்சிகளையும், எண்ணப் பகிர்தலையும் பதிவு செய்தேன்.  நாவல் நூற்றி இருபது பக்கங்களுக்கு விரியத் தொடங்கியது.

'காயாம்பூ' எனும் புனைவை, எழுதி முடிக்கும் போது முத்தாய்ப்பாக மனதில் தோன்றியவை இவை தாம். புனைவு என்பது கற்பனையின் எல்லையின்மையையும் அதன் சாத்தியங்களையும் கண்டறிவது. பெண்களைப் பொறுத்தவரை கற்பனை என்பது படைப்பாற்றலின் வெளிப்பாடு.   பெண்களாய் இருப்பதாலேயே சமூகத்தின் எந்தத் தருணத்திலும் சலுகை என்றோ ஆதரவு என்றோ ஒரு துளி கூட வாய்ப்பது இல்லை. தீவிரமான எதிர்ப்பையும், அதிகப்படியான போராட்ட வலுவையும் காட்டியே எந்த ஒரு பெண்ணும் ஒரு சிறிய உரிமையைக்கூடப் பெறமுடிகிறது. என்னளவில் நான் இது வரை சந்தித்த ஆளுமை நிறைந்த நிறைய பெண்களை நினைவூட்டிக் கொள்ளும் வாய்ப்பாகவும் இருந்தது இந்தப்பயணம். 

நாம் நிறைய நாவல் ஆளுமைகளைக் கண்டுவிட்டோம். கதை சொல்லல், அசாதாரண குணச்சித்திரிப்பு, மொழியில் நவீனம் என நாவலின் வழியாக நம் கற்பனை வெளியை விரிக்கும் ஆற்றல் கொண்டவர்களை எல்லாம் பரவலாகக் கண்டு விட்ட நிலையில் தற்காலத்தன்மையை எவ்விதம் கருப்பொருளாக்குவது என்பது பெரிய கேள்வியாகவே இருந்தது. சிந்தனையின் விடுதலையில் சமரசங்கள் அற்ற பெண் மனம் தான் இந்நேரத்தில் சமூகத்திற்கான தேவையாக இருக்கும். அது தான் பெண், ஆண் இருபாலாருக்கும் சிந்தனை ஊட்டமளிக்கக் கூடியது. 

'காயாம்பூ' நாவலின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும், டேனிஷ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு தற்பொழுது அச்சிற்குச் செல்கிறது. நாவலை தமிழுக்குக் கொண்டு வரும் எந்த முயற்சியும் எடுக்கமுடியாமல் 'மரியான்' திரைப்படப் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த வாரத்துடன், 'மரியான்' திரைப்பணி நிறைவுறுவதால் நாவலை வெளியிடும் முயற்சி இனி சாத்தியமாகிவிடும் என்று நினைக்கிறேன்.



குட்டி ரேவதி