நம் குரல்

செல்வியும் சிவரமணியும் – சொற்களால் நிலம் கவர்ந்தவர்கள்


ஆதிக்க சமூகத்தினுடைய இலக்கியங்கள் தாம் இன்றுவரை உயிர்வாழும் தகுதியைப் பெற்றிருக்கின்றன. இது, சங்க இலக்கியங்களுக்கும் பொருந்தும். காலந்தோறும் அரசு மற்றும் இதர சமூக நிறுவனங்களின் அதிகார நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடுகளுக்கும் தக்கபடி தமது கருப்பொருட்களையும் வடிவ உத்திகளையும் கையாண்ட இலக்கியங்கள் தாம் வாழும் தகவமைப்பைப் பெறக்கூடிய வாய்ப்பையும் பெற்றிருக்கின்றன. சமகாலத்திலும் கூட அதிகார அரசின் சமர்ப்பணங்களுக்கு உள்ளாகிய படைப்புகளையும் நாம் அடையாளம் காட்டமுடியும். இத்தகைய சமரசங்களுக்கு ஆளாகாமல், அதே சமயம் சமூகத்தின் புண்களையும் சொறிந்து கொடுக்காமல் படைப்பாக்கம் பெறும் மொழியின் பயன்பாடுகள் முற்றிலும் வேறானவை. ஒடுக்கப்பட்ட உயிரினமாய் இருக்கும் பெண்ணின் மொழி சமூகத்தில் பெறும் பயன்பாட்டிலும் செயல்பாட்டிலும் முக்கியமான ஒன்றாய், நான் இங்கே குறிப்பிட விரும்புவது, மொழியின் வழியாக, அதிலும் தாங்கள் கூர்மைப்படுத்தி வழங்கும் சொற்கள் வழியாக அவர்கள் தங்களுக்கான மண்ணைத்தான் முதலில் உடைமையாக்க விரும்புகிறார்கள். விட்டு விடுதலையாகித் தெறிக்கும் சொற்களினும் பெரிய, தீவிரமான இயக்க நடவடிக்கை ஏதுமில்லை.

இத்தகையதொரு சித்தாந்தத்தை தம் உடல் வழியாக உள்வாங்கி, தம் சொற்கள் வழியாக பெருங்குரலெடுக்கச் செய்தவர்கள் தாம் செல்வியும் சிவரமணியும். இவர்கள் இருவருக்கும் இடையே இலங்கும் ஒற்றுமை என்பது ஈழத்தில் தோன்றிய கவிஞர்கள் என்பது மட்டிலுமே. மற்றபடி, படைப்பின் அகன்ற வெளியிலும் ஆளுமையிலும் தங்களுக்குள் செழுமையாக்கி வைத்திருந்த கருத்தாக்கத்திலும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

1996-ல் வெளிவந்த செல்வி சிவரமணி கவிதைகள் எனும் நூல் தமிழ்ச்சமூகத்தில் மிகத்தொடர்ச்சியான, அதே சமயம் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை உருவாக்கின. செல்வியின் எட்டு கவிதைகளும் சிவரமணியின் இருபத்தியிரண்டு கவிதைகளும் அடங்கிய சிறு தொகுப்பு அது. அவர்கள் இருவரையும் ஒரு சேர நான் இங்கே முன்வைப்பதற்கு காரணம் அந்நூலின் வழியாக அவர்கள் தமிழ்ப் பெண்கவிதையின் மீது நிகழ்த்திய தாக்கமும் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பமுடியாத சிதைப்பும் தாம்.

இராமனே இராவணனாய்

…………………………………………………………..

அசோக வனங்கள் அழிந்து போய்விடவில்லை

இந்த வீடே

எனக்கான அசோகவனமாயுள்ளது.

ஆனால்

சிறைப்பிடித்தது இராவணனல்ல. இராமனே தான்.

இராமனே இராவணனாய்

தனது அரசிருக்கையில் முதுகுப்புறமாய்

முகமூடிகளை மாற்றிக்கொண்டதை

பார்க்க நேர்ந்த கண்கள்…

இதயம் ஒருமுறை அதிர்ந்து நின்றது.

…………………………………………………………………………………………….

எனக்குள்ளே…….

…………………………………….

பூமியின் மையத்துள் கொதிக்கும் தழலென

எனது மனமும் கொதிக்கும்; குமுறும்

பார்; நீ – ஒரு நாள்

வாமனன் நானென நினைக்கும் உமது

எண்ணங்கள் யாவையும் பொடிப் பொடியாக்குவேன்

வானமெங்கும் அதற்கப்பாலும்

நீண்டு நீண்டு விரிக்கும் என் கைகள்

பாதாளத்துக்கும் அதற்கும் ஆழமாய்

எனது கால்கள் அழுந்திப் புதையும்

பூமிக்குள் குழம்பெனக் கொதிக்கும் தழல்போல்

சீறியெழுந்து எரிமலையாவேன்

அன்றேயுமது சாத்திரம் தகரும்;

அன்றேயுங்கள் சடங்குகள் மாளும்

இன்னதின்னதாய் இருப்பீரென நீர்

எழுதிய இலக்கியம் நெருப்பினில் கருகும்.

வானம் பொழியும்; எரிமலைக் குழம்பிலே

ஆறுபாயும்-

அதில் நான் நீந்துவேன்-

சமவெளிகள், காடுகள், மலைகள் எங்கும்

தனித்தே சுற்றுவேன்

இனிய மாலை, எழில் மிகு காலை – எல்லாம்

எனது மூச்சிலே உயிர்க்கும்.

இக்கவிதையின் வீச்சு இதுவெளியான காலத்தில் மட்டுமன்று இன்றும் புத்துயிர்ப்புடன் இருக்கிறது. வீட்டின் சுவர்களையும் வேலிகளையும் உடைத்து முறிக்கும் பெண்களுக்கு இடையே, நிலத்தின் எல்லைகளையும் அதன் வரையறைகளையும் கிழித்துப் போடும் ஆவேசமான மூச்சுடன் இவ்வெழுத்துக்கள் எழுதப்பட்டன. இவை இங்கு எழுதிக்கொண்டிருந்த பெண்களிடமும் எழுத வந்த பெண்களிடமும் தம் ‘மண்’, ‘இனம்’ என்ற கருத்தாக்கத்தை எப்படி அணுகுவது, எப்படிச் சிதைப்பது, எப்படி மீண்டும் எழுதுவது அல்லது எப்படி அவர்களின் நினைவுகளுக்குப் பயிலப்பட்டிருக்கிறது என்பதை அறிமுகப்படுத்தியது. இவை தனக்கான நிலத்தைக் கோரும் கவிதைகள்!

இன்றும் தந்தையின் நிலத்தில் பங்கு கேட்கும் உரிமையும் சட்டமும் பெண்களுக்கு இருந்தும் சமூகத்தின் அதிகாரத்தினால் அதை மறுக்கும் புறக்கணிக்கும் நோக்கமும் இருக்கிறது. இது பெண்ணை நிலத்துடன் கால் பதிய விடாமல் எப்பொழுதும் அவளை அந்தரத்தில் இருக்கச் செய்து, பேரம் செய்யும் தந்திரம் தான். இனவொடுக்கு முறையிலும் முதலில் நிலத்திலிருந்து வேரோடு பெயர்க்கப்படுவது பெண்கள் தாம். இதை உணர்ந்த ஈழத்துக் கவிப்பெண்கள் தங்கள் சொற்களாலேயே உறுதியாக நிலம் பற்றிக்கொள்ளும் வலிமையைப் பெற்றுக்கொண்டவர்கள்.

விடை பெற்ற நண்பனுக்கு

மின் குமிழ்கள் ஒளியுமிழ

நிலவில்லா வெப்பம் நிறைந்த முன்னிராப் பொழுதில்

விரைவில் வருவதாய்

உனது நண்பனுடன் விடைபெற்றாய்.

உன்னிடம் பகிர

எனக்குள்ளே நிறைய விடயங்கள் உள்ளன

முகவரி இல்லாது தவிக்கின்றேன் நண்ப.

செழித்து வளர்ந்த தேமாவிலிருந்து

வசந்தம் பாடிய குயில்களும்

நீயும் நானும் பார்த்து இரசித்த

கொண்டை கட்டிய குரக்கன்கள் தமது

தலையை அசைத்தும்

எனது செய்தியை உனக்குச் செல்லும்.

பருந்தும், வல்லூறும் வானவெளியை மறைப்பதாக

இறக்கையை வலிந்து விரித்தன நண்பா

கோழிக்குஞ்சுகள் குதறப்பட்டன;

கூடவே சில கோழிகளும்…

இந்தப் பருந்தின் இறக்கையைக் கிழிக்க

எஞ்சி நின்ற குஞ்சுகள் வளர்ந்தன.

நடந்து நடந்து வலித்துப் போகும்

கால்களின் மீது படியும் என்

மண்ணின் புழுதியை

முகர்ந்து

வீதியிலன்றி வீட்டினுள்ளும்

முளைத்துக் கிடக்கும் முட்களைப் பிடுங்கி

குப்பையைக் கிளறும் குஞ்சுகளோடு –

இறையைத் தேட,

இறக்கையைக் கிழிக்க-

வாழ்வதை இங்கு நிச்சயப்படுத்த

கொடுமைகட்கெதிராய்க் கோபம் மிகுந்து

குமுறும் உனது குரலுடன்

குழந்தைச் சிரிப்புடன் விரைந்துவா

நண்பா!

அடர்ந்த மெளனத்தை தனது உணர்வாக்கிக்கொண்டு எழும்பும் இவருடைய ஒவ்வொரு கவிதையிலுமே இம்மெளனமே மொழியாவதை உணரமுடியும். இந்த மெளனம் என்பது அவர்கள் பிறந்த நிலத்தைப் பொறுத்தவரை இன்னொரு தாய்மொழி. இம்மொழியைச் சுமந்தும் இதன் வழியாக தங்கள் உணர்ச்சிகளைச் செரித்துக்கொண்டும் வாழ நேர்ந்த தருணங்களை மொழி வழியாகக் கடக்கும் போதெல்லாம் கண்டிக்கப்பட்டிருக்கின்றனர். தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மெளனம் நாவறுந்த ஒரு பெரிய வெண்கல மணியைப் போல மிகவும் கனமான அந்தகாரம் மிக்கது. போர் மற்றும் அதிகாரத்திற்கான நேரடியான சொல்லாட்சிகள் ஈழத்தில் துலக்கம் பெறும் இக்காலத்திற்கு முன்பே சொற்களே படிமங்களாகவும் குறியீடுகளாகவும் கவிதைகளுக்குள் பேணப்பட்டன. முட்டைகளை அடைகாப்பதற்கான தகிப்பையும் அச்சொற்களுக்கு வழங்கியிருந்தனர். அக்கவிதைகள் ஒவ்வொரு முறையும் வாசிப்புக்காகத் திறக்கப்படும் போதெல்லாம் அடுக்கடுக்காய் அர்த்தங்களுடனும் உணர்வெழுச்சிகளுடனும் மன அறையை நிறைக்கின்றன. அரசியல் ஊக்கத்துடன் இயங்க வைக்கின்றன.

செல்வியின் கலக மனம் வெறும் மேம்போக்கானது அன்று. சொற்களை அலட்சியமாய் கற்களைப் போல தூக்கியெறியும் இலகுவான செய்கையும் அன்று. சொற்களைத் தீட்டித் தீட்டி அதிக பட்ச வெப்பங்களோடு தோல் தீய்க்கும் கங்குகளாக்குவது! அதுமட்டுமன்றி, இவருடைய கவிதைகள் எங்குமே கவித்துவச் செம்மை குலையாமல் கருப்பொருள் மீது கண்வைத்தே நகரும்.

கோடை

………………………………………………..

வீதியில் கிடந்த கல்லை

கால் தட்டிச்செல்ல

அதன் கூரிய நுனி

குருதியின் சுவையறியும்

ஒதுங்கிப் போன கல்

ஏளனமாய் இளிக்கும்

இதயத்தின் நினைவுகள் விரிந்து

சர்ரென்று வலியெடுக்கும்

வாடைக்காற்றின் சிலிர்ப்பும்

வரப்போரத்தில் நெடிதுயர்ந்த

கூழா மரத்தின் பசுமையும்

நிறைந்த குளத்தின் மதகினூடு

திமிறிப்பாயும் நீரினழகுமாய்

ஒதுங்கிப் போன இனிய பொழுதுகள்

ஊமையாய் மனதை அழுத்தும்.

செல்வியின் சுயசரிதை மிகவும் சுருக்கமானது. 1991 – கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்ட இவருக்கு, 1992 ஆம் ஆண்டு International PEN என்ற சர்வதேச கவிஞர்கள், கட்டுரையாளர்கள்

மற்றும் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பு சிறப்புப்பரிசு அறிவித்தது. 1994- ஆம் ஆண்டுக்கான Poetry International விருதும் இவருக்கு அறிவிக்கப்பட்டது. இவ்விரண்டு பரிசுகளுமே இவரால் பெறப்படவில்லை.

சிவரமணி

தனது எழுத்தையெல்லாம் எரித்துவிட்டு,

“எனது கைக்கெட்டியவரை

எனது அடையாளங்கள் யாவற்றையும்

அழித்துவிட்டேன்”

என்று இறுதி நேரக்குறிப்பாக எழுதியும் வைத்திருந்தார், சிவரமணி. ஈன்ற பாம்பே தன் குட்டிகளை உண்ணுவது போல! 1991 – ஆம் ஆண்டில் தனது இருபத்திமூன்றாவது வயதில் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவ்வாறு அவர் எரிக்காமல் மிஞ்சிய இருபத்தியிரண்டு கவிதைகள் தாம் இன்று சிவரமணியினுடையதாக அடையாளம் பெறுகின்றன.

சென்ற நூற்றாண்டின் எண்பதுகள் ஈழத்தின் பெண்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான பருவம். பெண்ணியக் கருத்தாக்கங்கள் எல்லாம் செயலூக்கம் பெற்று கலை இலக்கியங்களாக மலர்ந்த காலம். பெண்கள் அரசியல் போராட்டங்களிலும் இயக்கங்களிலும் நேரடியாகத் தங்களை இணைத்துக்கொண்டு பிரச்சாரக் குரல்களாகவும் கருத்தாளர்களாகவும் மாறியிருந்தனர். இது தமிழகத்தில் நிகழ்ந்ததினும் வீரியமிக்கதாயும் மொழி-நிலம் தொடர்பான பெண்ணிய அரசியலை சீரமைக்க முனைவதாயும் இருந்தது. விடுதலைப் போராட்டங்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் தங்கள் அரசியல் தெளிச்சியை வெளிப்படுத்த முடிந்தது, என்றாலும் பெண்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் வேறானது என்ற அக்கறையும் இருந்தது.

சிவரமணியின் பெரும்பாலான கவிதைகள் பிரச்சாரக்குரலாகவே எழுந்துள்ளன. இதனால் கவித்துவ அழுத்தம் பெறாமல் வெறுமனே வாக்குமூலங்களாக சரேலென்று முடிந்து போகின்றன. கவித்துவ எழுச்சிக்கான பயிற்சியை ஒருவர் தனக்குத்தானே அளித்துக்கொள்ளாமல், வார்த்தைகள், நீச்சல் குளத்தின் மேலுச்சியில் உள்ள அசைப்பலகையிலிருந்து சடேலென்று நீர் நிலையில் குதித்து நீந்த வேண்டும் என்று ஒருவர் விழைவதால், குதித்தல் என்பதில் தான் கவனம் இருக்குமேயொழிய நீச்சல் பற்றிய அனுபவத்திற்கான தயாரிப்பு இருக்காது. அப்படியான கவிதைகள் பலவற்றை எழுதிய சிவரமணி, தனக்குத்தானே ஊட்டிக்கொண்ட படைப்பூக்கத்தினால் சிறகசைப்பினாலும், அவரது மொழியும் அரசியல் பார்வையும் வலிமையுற்று வீர்யமெடுத்ததையும், இன்று வரை பெண்ணிய அரசியல் ஏட்டின் சமன்பாடுகளாய் மாறி நிற்பதையும் காண முடியும். இதை அவரது இரு முக்கியமான, பிரபலமான கவிதைகளைக் கொண்டு நிறுவலாம். அவை, ‘யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்’ மற்றும் ’அவமானப்படுத்தப்பட்டவள்.

யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்

யுத்தகால

இரவொன்றின் நெருக்குதல்

எங்கள் குழந்தைகளை

வளர்ந்தவர்களாக்கிவிடும்.

ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற

அவர்களின் அழகிய காலையின்

பாதைகளின் குறுக்காய்

வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த

முகமற்ற மனித உடலும்

உயிர் நிறைந்த

அவர்களின் சிரிப்பின் மீதாய்

உடைந்து விழும் மதிற்சுவர்களும்

காரணமாய்,

எங்களுடைய சிறுவர்கள்

சிறுவர்களாயில்லாது போயினர்.

நட்சத்திரம் நிறைந்த இரவில்

அதன் அமைதியை உடைத்து வெடித்த

ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை

எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை

இல்லா தொழித்தது.

எஞ்சிய சிறிய பகலிலோ

ஊமங் கொட்டையில் தேர் செய்வதையும்

கிளித்தட்டு மறிப்பதையும்

அவர்கள் மறந்து போனார்கள்.

அதன் பின்னர்

படலையை நேரத்துடன் சாத்திக்கொள்ளவும்

நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும்

கேள்வி கேட்காதிருக்கவும்

மெளனமாயிருக்கவும்

மந்தைகள் போல எல்லாவற்றையும்

பழகிக் கொண்டனர்.

தும்பியின் இறக்கையைப் பிய்த்து எறிவது

தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி

எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும்

எமது சிறுவரின் விளையாட்டானது.

யுத்தகால இரவுகளின் நெருக்குதலில்

எங்கள் குழந்தைகள்

“வளர்ந்தவர்” ஆயினர். (1989)

அவமானப்படுத்தப்பட்டவள்

உங்களுடைய வரையறைகளின்

சாளரத்துக்குப் பின்னால்

நீங்கள் என்னைத் தள்ளமுடியாது.

இதுவரை காலமும்,

நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து

வெளியே எடுத்துவரப்பட்ட

ஒரு சிறிய கல்லைப்போன்று

நான்

என்னைக் கண்டெடுத்துள்ளேன்.

என்னுடைய நாட்களை நீங்கள்

பறித்துக்கொள்ள முடியாது.

கண்களைப் பொத்திக் கொள்ளும்

உங்கள் விரல்களிடையே

தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்

ஒரு குட்டி நட்சத்திரம் போன்று

எனது இருத்தல்

உறுதி பெற்றது.

நிராகரிக்கப்பட முடியாதவள் நான்.

இனியும் என்ன

தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்

நான் பிரசன்னமாயுள்ளேன்.

என்னை

அவமானங்களாலும்

அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

ஆனால்,

உங்கள் எல்லோரினதும்

நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது

ஓர் அழுக்குக் குவியலாய்

பளிச்சிடும் உங்கள் சப்பாத்துக்களை

அசுத்தம் செய்கிறேன்.

என்னுடைய நியாயங்கள்

நிராகரிக்கப்படும் வரை

உங்களின் எல்லாப்பாதைகளும்

அழுக்குப் படிந்தவையே.

என் கடந்தகால இலக்கியப்பயணத்தில் எத்தனையோ முறைகள், பல வேறுபட்ட தொகுப்புகளுக்காகவும் ஆய்வின் பொருட்டும் இவ்விரண்டு கவிதைகளையும் பலமுறை கடந்து சென்றிருக்கின்றேன். ஓர் அகழியை எப்படித் தாண்டுவது? கடந்து தானே செல்லவேண்டும். அம்மாதிரியான ஒரு நிராகரிக்கமுடியாத அனுபவத்திற்கு, வாசிக்கும் எந்தவொரு பெண்ணையும் இழுத்துச்செல்பவை. இவ்விரண்டு கவிதைகளே சிவரமணியின் ஒட்டுமொத்த ஆளுமையையும் அகப்பெருவெளியையும் நமக்கு எந்தவித சிரமுமின்றி வெளிப்படுத்தக் கூடியவை. ‘யுத்தகால இரவு’ என்பதில் வாழ நேர்ந்த ஒரு பெண்ணின் அதிமுக்கியமான கவலையும், அது அகண்ட உருவம் கொள்ளும் அரசியல் சிக்கலையும் கவிதையாக்கியிருக்கிறார். இம்மாதிரியான அசாதாரண தருணங்களையும் அதற்கான நெகிழ்ச்சிகளையும் சொற்களால் முன்வைப்பதில் பெண்களுக்கு நிகர் எவரும் இல்லை என்று எழுதிக்கொள்வதன் வழியாக, சிவரமணியின் இக்கவிதையை எம்மெல்லோருக்குமான வாயில் ஆக்கிக்கொள்கிறேன்.

இனஒடுக்குமுறையின் தொடர்துயர்களுக்கு ஆளான இப்பெண்களின் கவிதைகள் வழியாகத் தாம் தமிழகத்திற்குள்ளும் பெண் கவிதை தனது அழுத்தமான பாதங்களை எடுத்துவைத்திருக்கவேண்டும். ‘இனியுமென்ன தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய் நான் பிரசன்னமாயுள்ளேன்’ எனும் ஒற்றை வரி, பெண்ணிலைவாதத்தை முன்னெடுப்பவர் எல்லோருக்கும் அவர் நெஞ்சத்தின் கூரையின் மீது அசைந்து பறக்கும் கொடியைப் போன்ற பொலிவு மிக்கது. இன்னும் சொல்லப்போனால், இக்கவிதையில் அவர் நிறைத்திருக்கும் நெஞ்சுரம் மிக்க அழுத்தமான நிலைநிறுத்தலையும் இருப்பையும் ஒவ்வொரு பெண்ணும் தன்னிலையிலிருந்து மீண்டும் மீண்டும் பிரதியெடுப்பதும் பதிவுசெய்வதும் தாம் நம் பெண்ணிலைவாதமாக இருக்கமுடியும்.

எழுத வரும் எந்த ஒரு பெண்ணும் எந்த ஒரு வரலாற்று ஆசிரியனாலும் எழுதவே முடியாத ‘தன் வரலாற்றைத்’ தாம் எழுதிச் செல்கின்றனர்!

குறிப்பு:
செல்வநிதி தியாகராஜ என்ற இயற்பெயருடைய கவிஞர் செல்வி வவுனியாவில் உள்ள
சேமமடுவில் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில், ‘நாடகமும் அரங்கியலும்’
துறையில் சிறப்புப் பட்டம் பெற்றிருந்தார். ‘தோழி’ என்ற இதழின் ஆசிரியராக
இருந்தார். கவிஞர் சிவரமணி யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் பிறந்தவர். யாழ்
பல்கலைக்கழகத்தில் அரசறிவியல், ஆங்கிலம், மொழியியல் ஆகியவற்றைக் கற்றார்.
இறுதிப்பரீட்சைக்குச் செல்லும் முன்னரே தற்கொலை செய்து கொண்டார்.
இலக்கியத்தில் மட்டுமன்றி ஓவியம்,இசை ஆகியவற்றிலும் ஈடுபாடு
கொண்டிருந்தார்

குட்டி ரேவதி

ஆயுதப் போராட்டத்திற்கான அறம்



http://inioru.com/?p=7291

நன்றி: ‘இனியொரு’. இது ஒரு மறுபதிவு




ஆண்குறி மையவாதப் புனைவைச் சிதைத்தப்பிரதிகள் - 2



இளம்பிறை – நீ எழுத மறுக்கும் எனதழகு



நண்பர்களே, இக்கட்டுரைத்தொடர், தமிழில் நவீனப்பெண் கவிதை மொழியை அறிமுகப்படுத்தும் முயற்சி. கூடு இணையத்தின் நடத்துநர் அருண் இதற்கான ஆலோசனையை என்னிடம் முன்மொழிந்தார். வெறும் விமர்சனமாக இல்லாமல், எழுதவந்த படைப்பாளிகளின் காலமும் பின்னணியும் கருதி அவர்களின் எழுத்தையும் அதன் உட்பொதிந்திருக்கும் அரசியலையும் இன்றைய காலத்துடன் பொருத்தி அறிமுகப்படுத்துவதே என் நோக்கமாக இருக்கிறது. ‘ஆண்குறி மையவாதப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்’ என்ற தலைப்பும் அந்தப் பொருளடக்கியே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஒவ்வொரு பெண்கவிஞரின் பிரதிக்கும் அதனதனளவில் பங்கு இருக்கிறது, என்பதைக் கண்டறிவதே என் பணி. பெண்ணெழுத்து, ‘உடலரசியல்’ பேசும் அரசியல் நிலைப்பாட்டிற்கு வருவதற்கு ஒரு நீள்பயணம் எடுத்திருக்கிறது என்பதையும் அது வெவ்வேறு காலக்கட்டங்களை எடுத்திருக்கிறது என்பதையும் எடுத்தாள்வதே இக்கட்டுரைத் தொடரின் மிக முக்கியமான நோக்கங்கள். மேலும், இரா.மீனாட்சி போன்றவர்கள் தீவிரமான உடலரசியலை தங்கள் எழுத்தில் முன்வைக்கவில்லை என்பதைக் கட்டுரையின் உள்ளுறையாக வைத்தே விவாதித்திருக்கிறேன். கூர்மையாக வாசிப்பவர்களுக்கு அது பழம் பிதுக்கிய விதையாக ஆங்காங்கே வெளிப்படும். எனது இக்கருத்தையே தம் கருத்துரையாக இட்டிருக்கும் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரே ஒரு விடயத்தை மட்டும் இங்குத் தெளிவாக்கிக் கொள்கிறேன். அதாவது, இன்றைய நவீன தமிழ்க்கவிதை சார்ந்த தனிப்பட்ட நமது பயிற்சியும் பார்வையுமே கூட, தமிழில் நிலவிய தொடர்க்கவிதை இயக்கத்தாலும், அதற்கு தனிநபராக நம்மை நாமே உட்படுத்திக்கொண்டதாலும் வந்தது. இல்லையென்றால், இன்றைய வாசகர்கள், இரா.மீனாட்சியின் கவிதையில் ’உடலரசியல்’ சார்ந்த பார்வையில்லை என்ற கருத்தை முன்வைக்கும் திறனையும் பெற்றிருக்க முடியாது தானே! உங்களின் தொடர் ஊக்கத்திற்கும் உரையாடலுக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேல் செல்வோம்!





இளம்பிறையின் கவிதைகளை உதிரிகளாகவும் தனித்தொகுப்பாகவும் வாசித்த அனுபவம் உண்டு. சொற்கட்டான மொழியும் இசைக்கோர்வைக்கான துல்லியமான நடையும் கலந்த நளினத்தைத் தொடக்கத்திலிருந்தே தன் கவிதை மொழியாக்கிக் கொண்டவர். ஒரு தாயின் காதல் எனும் நிலையிலிருத்தி அவர் தன் எழுத்தைப் படைப்பாக்குகிறாரோ என்று என்னும் அளவிற்கு பெண்ணின் இருநிலைகளையும் தனக்குள் வைத்துக் கொண்டு எழுதுகையில் மொழி, இது வரை நீங்கள் தமிழில் எங்கிலுமே வாசிக்காத ஒரு அனுபவத்தைத் தருகின்றன. வெறும் புகழ்ச்சிக்கில்லை என்பதை உணர, மெல்ல அவர் கவிதைகளுக்குள் ஊடுருவலாம்.



’கிராமிய மணம் மிக்கது’ என்றும் ‘நாட்டுப்புறப் பாடல்கள்’ என்றும் கவனம் பெற்றிருக்கும் நகரத்திற்கு நகர்ந்தவர்கள் தங்கள் பால்யம் சிறகடித்தச் சமூகவெளியை எழுத்தாக்குவதைப் படித்து நாம் ரொம்பவும்தான் சிலாகித்துப் போகிறோம். நகரம், கிராமம் என்ற இரு வெளிகள் தாம் சமூகத்தில் இருக்கமுடியும் என்ற நமது மயக்கத்தில் நிகழ்ந்த பிழையால், மற்றுமொரு வெளியான ‘சேரி’ என்பதை அதுவாக அடையாளப்படுத்தாமலும் காந்தி சொன்னதன் அர்த்தத்திலேயே, ‘கிராமம்’ என்பதன் பெருமிதம் போற்றுவதும் நமக்குப் பழகிப்போய்விட்டது. இதற்கு அடிப்படையான காரணமான, சாதி அழுத்தத்தை வெளிப்படுத்துவதை அநாகரிகம் என்றும் அழுக்கு என்றும் கருதும் போலிமை சூடிய மனோபாவத்தின் எழுத்து தான் கிராமியம் என்பதைத் தன்னடையாளமாக்கிக் குதூகலிக்கும், என்பதை இளம்பிறையின் கவிதை நீரோட்டத்திற்குள் கைகள் விரித்த உடனேயே தெரிந்து விடும். எந்த விதமான போலியான அடையாளங்களையும் கிராமம் எனும் நம் பிரமைகளுக்குத் தராது, இருளடர்ந்த கனவு மரங்களின் வனத்திலிருந்து எழுதுகிறார்.
இளம்பிறையின் எழுத்து முற்றிலும் எதிர்த்திசையிலிருந்து தொடங்குகிறது. நகரத்திற்கு நகர்ந்து வந்த தன் வாழ்க்கையில் நகரத்தின் நடவடிக்கைகள் என்றென்றும் அலுப்பூட்டுவதாகவும் கிராமத்தில் தான் அனுபவிக்க நேர்ந்த ஏழ்மையின் யதார்த்தங்கள் சுவாரசியம் தட்டுவதாகவும் இருக்கின்றன அவருக்கு. ஆனால், இத்துடன் தன்னெழுத்தை அவர் முடித்துக்கொள்வதில்லை. இவை இரண்டிற்கும் இடையே இருக்கும் உள்ளார்ந்த அரசியலை வெளிப்படுத்தும் தீவிரத்தைத் தொடும்வரை அவர் கவிதையின் ஒற்றைப் பயணம் முடிவதில்லை. மேலும், அதன் அத்துணை பூடக அழகோடும் முடியும் வரையிலான தெளிந்த பார்வையும் ஊக்கமும்கூட அவருக்கேயானது. பெரும்பாலும், தோல்வியும் தோல்விக்குப் பின்பான எழுச்சியும் வேகமெடுக்க, அதற்கான நடையுடன் சொற்கள் வந்து விழுகின்றன.



பெண்களின் கவிதைகள் சுயபுலம்பல்களாகவும் அழுகையின் குறிப்புகளாகவும் இருக்கின்றன என்று விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. பெண்ணின் அழுகை என்பது உயிரியல் நிகழ்வன்று. அது ஒரு சமூகவெளிப்பாடாகத்தான் இருக்கிறது. ’ஒப்பாரி’ என்பது அதன் நீட்சி. தன் திடமான எதிர்ப்பை நீர்மமாக்கும் மொழியைப் பெண்கள் இயன்றவரை பாடல்களாகவும் கவிதைகளாகவும் கொட்டித்தீர்க்கின்றனர். அழுகை அதன் இயல்பில் நெகிழ்வான, ஓர் உணர்ச்சியின் வெளிப்பாடாக இருந்தாலும், சமூகத்தின் பார்வையில் அது மிகவும் அவலமான, பரிதாபத்திற்குரிய வெளிப்பாடாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. பெண்களின் வாழ்க்கை நிகழ்வுகள் ஒட்டி நிகழும் அழுகையின் அர்த்தங்களுக்கு ஓர் அகராதி தயாரிக்கலாம். ’கண்ணீரும் கம்பலையும்’ என அடுக்கடுக்காய் அர்த்தம் பெருகக்கூடியது அந்த அகராதி. கண்ணீர்த்துளிகள், ஆழமான வேர்களிடம் பெண்களைக் கூட்டிச்செல்பவை. தொடர்ந்த மனவேட்கையின் பிரதிபலிப்பாய் எட்டிஎட்டிப்பார்த்து கண்களின் உயரத்திலிருந்து கனிந்து வீழ்ந்து கொண்டே இருப்பவை.
‘அழுத நினைவுகள்’, கவிதை, அவர் தன் இளம்பருவத்தில் அவசியமில்லாது வேண்டுமென்றே பெருங்குரலெடுத்தச் சந்தர்ப்பத்தங்களைக் குறிப்பிட்ட பின்,


குடத்தை உடைத்தது
வாத்தியார் அடித்தது
‘சட்னியைக் கொட்டிவிட்டு
நானில்லையென்று
சத்தியம் செய்தழுதது
பதினாலுக்குள்
இப்படி பல அழுகைகள்

ஒரு நாள் செல்லம்மாளுடன்
விறகு வெட்டப்போன போது
பெரியவளானேனென
அழைத்து வரப்பட்ட போது
அம்மா அழுததால்
நானும் அழுதேன்
ஏனென்று தெரியாது.’



பெண்கள் பருவமெய்தும் தருணத்தில் அழும் தாய்மார்களின் அழுகைகள் அவரவர்க்கு அவரவர் வாழ்க்கையின் எதிர்ப்பார்ப்பையும் அவற்றின் ஏமாற்றத்தையும் ஒருங்கு குவித்துக் காட்டும் கணம். இதுவே அவர் கவிதையின் பிறிதோரிடத்தில் தாயின் குரலாய், ‘கோட்டையில் பெண் பிறந்தாலும்/ போட்டபுள்ளி தப்பாதுன்னு/ எங்கிட்டுப் போயி இழுபடப்போவுதோ’ எனும் வரிகள் அதன் பின்பான பெண்வாழ்வின் நிச்சயமற்ற கோடுகளை நினைவுக்கு இழுத்து வருபவை.


புள்ளிகளும் கோலங்களும்

புள்ளி தடுமாறி
வரிசை வளைந்து
போட நேர்ந்த
கோலங்களின் கோடுகள்
துண்டுபட்டு நிற்கும்
சந்திக்க முடியாமல்

இணைக்கும் முயற்சியில்
அசிங்கப்படும் கோலத்தைப்
பெரும்பாலும்
நானே கலைத்துவிடுவேன்
இல்லையேல்
எவரேனும்
கலைத்துவிட்டுப் போய்விடுவார்கள்




நேரடியான வார்த்தைகளுக்குப் பின்னால் எரியும் பிறிதோரடுக்கு அர்த்தம், தாய் கூறிய புள்ளியையும் இழுபடும் கோட்டையும் குறித்து நிற்பது. தன்னழுகை நிலையிலிருந்து தாயின் அழுகைக்குக் கவிதையின் மொழியை இழுத்துச் செல்லும் விசை தீவிரமானது. அதுமட்டுமன்றி, எந்தப்பிறழ்வையும் சரிசெய்யும் தொடர்மனித யத்தனத்தை மாறிமாறி வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இடையே பரிமாறிக்கொண்டே இருக்கிறார். இம்மாதிரியான ‘தன்னிலை’யிலிருந்து கவிதைகள், கிளர்ச்சியடைந்து ஆண்களுடனும் ஆண் மனங்களுடனும் அயராமல் விவாதிக்கும், வேண்டுகோள் விடுக்கும், கட்டளையிடும், புறக்கணிக்கும், மன்றாடும், மன்னித்து அரவணைக்கும் வேறுபட்ட நிலைக்கும் என ஆண்களை நோக்கிய கிளைச்சாலைகளிலும் விரிந்து கொண்டே இருக்கின்றன. கபடம் என்ற இவர் கவிதையின் ‘உன் கபடங்களோடு சேர்த்தே அணைத்துக் கொள்கிறேன்’ வரியுடன் சல்மாவின், ‘எல்லா அறிதல்களுடனும் விரிகிறதென் யோனி’ வரி சென்று இணைகின்றது. இவ்விதமான சமரசம் கொண்ட பெண்ணின் தொனி, தொடர்ந்து வேறு வேறு திசைகளிலிருந்து பிறர் கவிதைகளிலும் ஒலிக்கக் கேட்கையில், அதை எளிதான அல்லது மலிவான ஓர் உடன்படிக்கையாக எடுத்துக் கொள்ள இயலவில்லை. அவலத்திலிருந்து மனிதமீட்சியை முன்னெடுப்பதற்கான ஒட்டுமொத்த உத்வேகத்திற்கான பொறுப்பையும் உறுதியையும் தம் தோள்களில் ஏற்றிக் கொள்வதுடன் அதையே தன் இறக்கையாக்கிப் பறக்கும் திட்டமும் பெண்களிடம் இருப்பதே காரணம். இன்னும் சொல்லப்போனால், இவ்விறக்கைகளால் இன்னொரு வானத்தை நோக்கிப்பறக்கும் திசையை எழுத்திலிருந்து தாம் கண்டடைகின்றனர்.




இதுவரையிலான தன் கவிதைகளுக்கு ‘நீ எழுத மறுக்கும் எனதழகு’ என்று தலைப்பிட்டிருக்கும் இவர், அவ்வார்த்தைகளால், உலகெங்கிலும் நிலவும் அழகு குறித்த அரசியலை நொறுக்குகிறார். வெவ்வேறு பெண்கள் அழகெனும் அடையாளம் வழியாகத் தன்னை முன்னிறுத்தியும், உதாசீனப்படுத்தியும் தன் அழகைப் பிரதானப்படுத்தியும், அதையே அரசியல்படுத்தியும் எழுதியிருக்கின்றனர். பெண்ணின் அழகு நுகர்வுப்பண்பாட்டின் முக்கியமான விலைபொருள் என்பது, நுகர்வுப்பொருளாகியிருக்கும் பெண்களின் அடிமனதில் உளைவை ஏற்படுத்தாமல் இல்லை. உலகெங்கும் சித்திரமாய் அலையும் கண்ணாடிக்குள் பிரதிபலிக்கும் அழகு பற்றிய இக்கருத்தலை, ஏழ்மையான சூழலில் உழன்றுழன்று வாழ்க்கையுற்ற இவரது அழகின் முன்னோ மோதிச்சிதறுகிறது. அழகென்ற கோரிக்கையால் ஏற்றத்தாழ்வுக்குள்ளாகும் பெண்ணின் உடலைப் போலவே, அதன் பின்னால் பேசப்படாது விடுபடும் பொருளாதாரச்சூழலும் காட்சி பெறாமல் ஒளிந்துகொள்கிறது. ’என் வாழ்க்கைக்குள் வந்ததில்லை உன் கேமராக்கள்’! என்பதும் ஒரு நேரடியான வரியன்று. யதார்த்தத்தின் விளைவு!




நீ எழுத மறுக்கும் எனதழகு

…………………………………………………………………………….
கவர்ச்சிக்கல்ல
இல்லாத காரணத்தால்
சட்டை கிழிந்திருக்கும்.
இழுத்துப் போர்த்த எண்ணி
சேலையும் தோற்றிருக்கும்.

………………………………………………………………………..
எனது அழகுகள் எல்லாம்
இதுவரை தெரிந்ததில்லை
உன் எழுத்து விழிகளுக்கு.
என் வாழ்க்கைக்குள் வந்ததில்லை
உனது கேமராக்கள்.

குறைந்த பட்சம்
அழகிப்போட்டிகள் நடத்தி
என்னைப் பழித்துக்காட்டாமல்
இருக்கக்கூட
நினைப்பதில்லை நீங்கள்’



அழகு, பெண்ணுடலின் புறக்கருத்தமைவு. உடலுக்கான அக ஆளுமையையும் பெண்ணுடலுக்குத் திணிக்கப்படும் அக நெருக்கடிகளையும் மொழியும் கவிதை தான் எல்லா வகையிலும் அரசியலை இன்னும் தீவிரப்படுத்துகிறது. புற அழகை, காரணமாக்கி பெண் ஆளுமையைச் சிதைக்கும் இரு வேறுபட்ட நெருக்கடிகளை உடலுக்குத் தரும் சமூக நிகழ்வுகளைச் சுட்டுகிறார் இளம்பிறை. தன் ஒவ்வொரு கவிதையையும் ஒரு கதையின் கருவாய் மாற்றிப்படைக்கும் இவர், சிறுகதைக்கான ஓட்டத்துடன் ஓடிச்சென்று முற்றுப்புள்ளியுடன் ஓய்ந்துவிடுவதில்லை. கடைசிச் சொல்லுக்கு அப்பால் எழும் அதிர்வுகள் சொற்களற்றவை. ஆழக்கிணற்றில் எறிந்த கல், ஆழம் சேரும் போது ஒலித்தல் போல. இவருக்கிணையான சொற்கட்டுடன் கவிதை ஆளும் கவிஞர் வெகுசிலரே.. அழுத்தமான குரலை தன் மனவெளிக்குப் பழக்கிக்கொண்டே இருப்பார் போலும்!





சொல்லாமலே

வெடித்த வயல் வரப்புகள்
புதர் மேடுகளுக்கப்பால்
சிற்றலைகளில் வைரங்களாய்
வெய்யில் மின்னிக்கிடக்கும்
குளத்திலிருந்து….
இரட்டைக் குடமெடுத்து
தண்ணீர் சுமக்கிறார்கள்
தாயும்… மகளும்
பண்ணைய வீட்டுத்
தென்னம்பிள்ளைகளுக்கு.

சற்று கழிந்ததும்
செம்பில் தேநீர் வாங்கிவந்து
சுடச்சுட வாயில் ஊற்றிக் கொள்ளுங்கள் என்று
ஆற்றித் தந்துவிட்டுப் போகிறார் தந்தை.
சும்மாடு நழுவி…கழுத்து குன்னி
தடுமாறிய சுமை இறக்கி
அரைஅரை குடமாய் ஊற்றி
சீக்கிரம் செல்லலாம் என்கிறாள் மகள்.

அப்படி செய்யக்கூடாது
பாவம் தென்னம்பிள்ளைகள்
இரக்கப்பட்டு மகளை
நிழலிலிருந்து இளைப்பாறச்சொல்லி
தான் மட்டும் போய்வரும் தாய் பார்த்து
அடுத்த நடைக்கே…
எழுந்தோடுகிறாள் மகள்
வெய்யிலிலேயே கிடந்தாலும்
கலையாகத்தான் இருக்கிறாய் என்று
கோணலாகச் சிரித்துக் கண்சிமிட்டிக் கூப்பிட்ட
சின்ன முதலாளி முகத்தில்
சாணியள்ளி வீசியதைச்
சொல்லாமலேயே



தொடங்கிய அதே வீச்சிலேயே நடந்து சென்று அகத்தீவிரத்தைத் தன் கடைசி வரியிலும் சொல்லிலும் முழுதாய் வெளிப்படுத்தும் கவனமான, தண்டவாளம் மாறாத நடை! சொற்கள் இறைக்கப்படுவதே இல்லை. உணர்ச்சிகள் மட்டும் பீறிடுகின்றன!



காலங்காலமாக, பெண்ணுடல் ஆண்களால் எழுதப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. அதை ஒரு கவர்ச்சியான படைப்பாக்கி, மேன்மேலும் அதன் கவர்ச்சியை மிகைப்படுத்துவதற்கான மொழியையும் தானே உருவாக்கி, அம்மொழியின் வழியாக உடலைச்சுகிக்கும் வெளியையும் வசதியையும் வாசிக்கும் அனைவருக்கும் வழங்கும் ஒரு பொதுப்பொருளாக்கி, பூவுடலைப் படைத்திருக்கின்றனர், ஆண்கள். இத்தகைய சமூகத்தில் காதலும் உடலை, புணர்ச்சியின் மயிர் உதிர்த்துக் கடந்து போகிறது. இந்நிலையைக் கடந்துவிட்ட பின் அது பெறும் விடுதலைக்கான குறியீடாக இளம்பிறைச்சுட்டுவது மிக முக்கியமானது, முழுமையும் படிமத்தேர்ச்சியானது. ’நம்பிக்கை’ கவிதையில் மிகவும் பூடகமாக ஆளப்பட்ட பருவங்களின் விளையாட்டும் தந்திரமும் நேரடியான வார்த்தைகளால் ஆனால், உள்ளே அதனதன் அரசியல் வார்த்தைகள் பொதியப்பட்டிருக்கின்றன.



பூவுடல்கள் – பொய்மொழிகள்

நெஞ்சில் வளர்ந்த நெகிழ்வுக் கல்லிரண்டின்
மேலோ கீழோ இன்னொன்று வைத்து
சமைத்துவிடலாம் என்பாள்
துரோகத்தில் சிதைந்தவள்

குனிந்து செய்யும் வேலைகளில்
ஆச்சியின் தொங்கிய மார்பகங்கள்
கோலாட்டம் செய்வதாய்
சிரிப்பாள் பெயர்த்தி

நரிக்குறப் பெண்ணின்
இடுப்பில் தொங்கும்
பழைய சுருக்குப்பை
அம்மாவின் வயிறென்பாள்
கடைக்குட்டி.

சடைப்பூரானாய்த் தடித்துக் கிடக்கும்
சிசேரியன் தழும்பு காட்டி
வயிறு பார்ப்பாள் தோழி

எழுத்துக்களில் அடுக்கப்பட்ட
பெண்களின் பூவுடல்கள் பார்த்து
பழக்கப்பட்ட நினைவை
சொல்லாமல் விடுவதும் பொய்’


கடந்து போதல்

பிறகு
எல்லாவற்றையும் கடந்து
வேடர்கள் நுழைய முடியாத
வனங்களில் திரியும்
பறவையானது காதல்.
முன்பு
அதன் பெயரில்
பேசிய எழுதிய புணர்ந்த
மயிர்கள் உதிர்த்து.

நம்பிக்கை

மேய்த்தலுக்கடங்காது
கட்டுத்தறியிலும் நிற்கமுடியாது
அறுத்துக்கொள்ளும் பருவங்களை
இழுத்துச்செல்கின்றனர் காவலாளிகள்.
‘பட்டி’யில் அடைத்து
பட்டினி போட்டபின்
கட்டணம் செலுத்தி
மீட்டுவரும் பருவத்திற்குரியோர்
இறுகக்கட்டி வெளியேறும் வரை
பரிதாப முகமணிந்து
காத்திருக்கும் பருவங்கள்
தறியிலிருந்தே அறுத்து மேய
பழகிக்கொண்ட தந்திரங்கள்
உரியவர்கள் அறியாமலிருப்பதாக
நம்பப்படுவது அவசியமாகிறது
எல்லோர்க்கும்.

வீட்டின் மூலையில் இயங்கும் அறையே சமையலறை என்று சொல்லும் அம்பையிடமிருந்து இளம்பிறையின் சமையலறை வேறுபட்டிருக்கிறது. ஒரு மிருகத்தின் வாயாக சமையலறையை உருவகிக்கிறார், இவர். வீடும் சமையலறையும் எவ்வெவ்விதத்தில் அவருக்கு ஆகியிருக்கின்றன என்பதைத் தன்னளவிலும் சமூக அளவிலும் மீளாய்வைச் செய்திருக்கும் இக்கவிதைகள், நகர யதார்த்தங்களை சொல்தோறும் உடைத்துக்கொண்டே இருக்கின்றன.




ஒளியுமிடம்

நிற்கும் இடந்தோறும்
குறிகள் புணர்ச்சி பற்றி
உரத்துப் பேசி
மனங்கூச வைக்கும்
மதுபானப் பிரியர்களின்
வார்த்தை நாற்றம்.

ஒட்டல்…உரசல்
உடன் வருதலென
போய்ச்சேரும் இடம் வரைக்கும்
தொல்லைதரும் தொடரல்கள்.

கடந்து செல்லும்
எல்லாப்பெண்களுக்கும்
உடல் அளவு கணக்கெடுக்கும்
‘நவீன ஸ்டோர்’ நண்பர்கள்.

சந்தக்கடை, சாக்கடைக்குளம்
மூத்திரச்சந்து தாண்டி
இடை ஆடாது… நெஞ்சு குலுங்காது
கால்தடுக்க நடையில் ஓடி
சென்று சேர்கிறேன் நாளும்
எனக்கொரு வீடிருக்கிறது
ஒளிந்து கொள்வதற்கு.



எரிந்து கொண்டேயிருக்கும்
மிருகத்தின் உதடுகள்

அது ஒரு இடம் அல்லது அறை
என்றே அழைக்கப்படுகிறது
எல்லா வீடுகளிலும்….

எனக்கோ தீராமல் என்னை
மென்று கொண்டிருக்கும் மிருகம்
ஆடவர்களும் அவ்விடத்தை எப்போதாவது
எட்டிப் பார்ப்பதுண்டு.

ஆனாலும் ஒருபோதும்
அதன் வாயில் குதறுபடாத அவர்கள் வாழ்வு
கடமைகள் பல புரிந்த காவிய வாழ்வாகி
வரலாற்றுச் சுவர்களில் வரையப்படுகின்றன
வித விதமான தோரணைகளுடன்…

நறநறவென என் சிந்தனைகளைக்
கடித்துக் குதறும் அதன் கோரப்பற்களுக்குள்
நானாகவே புகுந்து கொள்ளும் நிர்ப்பந்தம் நாளும்..
என் கரங்களைச் சுட்டுக்கொண்டே இருக்கும்
அம்மிருகத்தின் உதடுகள்
எரிந்து கொண்டே உள்ளன.

என் கால்களை இழுத்து
இறுக்கித் தன்னிடமே நிற்க வைத்துக் கொள்ளும்
அந்த வலிய மிருகத்தின் பற்களையும்
நானே துலக்கித் துலக்கிச் சுத்தம் செய்வதில்
தேய்ந்து கொண்டே இருக்கும்
ஆயுளின் இறுதி நாட்களுக்குச்
சில தினங்கள் முன்பாக என் சமையலறை
மிருகமே என்னை வெளியேற்றி விடும்
அதனிடமிருந்து
அப்போது
நீரும் நிறமும் இழந்த
ஒரு தாழம் பூச்சருகினைக்
காற்று தூக்கிச்சென்று
காணமுடியாது உதிர்த்துக்கொண்டிருக்கும்
வெளியெங்கும்…




ஆண்களின் இருப்பை நேரடியான சொற்களின் கோடாரிகளால் சிதைக்கும் இவர், தன் தந்தைக்கு அளிக்கும் பிம்பமும், அவரின் அவலத்தை வெளிப்படுத்தும் விதமும் வேறுபட்டது. சாதியத்தின் அழுத்தத்திற்குத் தப்பாத ஆண்களின் வாழ்க்கை அவர் அடையாளங்கள் வழியாக வெளிப்படுகிறது. நினைவு வரை சீழேறியிருக்கும் கொடுங்கனவாய்! அத்தந்தையின் பிம்பம் கவிதைகளில் தென்படும்போதெல்லாம் அதை உடனே கடந்துபோக முடியாத படிக்கு உணர்ச்சிகள் நிமிர்ந்து நிற்கின்றன. வாசித்த வெகுநேரத்திற்குப் பின்பும், ‘இரை’ என்ற அவரது கவிதை என் நெஞ்சுக்குள் ஓர் இறகைப்போல சுழன்று கொண்டே இருந்தது. ஈழப்பெண் கவிஞர் சிவரமணியின், ‘தூக்கி எறியப்பட முடியாத கேள்வியாய் உங்கள் முன் பிரசன்னமாயுள்ளளேன்’ என்ற இரையைத் தூக்கி வந்தது தன் கொடும் நகங்களால்.!



இரை

கனியும் பழங்களுக்குக் காத்திருக்கையில்
முட்களாய் பெருகி விரட்டியது
என் விளைநிலம்

பின்பொரு வனாந்தரத்தில்
மிருகங்களுடன் பழகி
மழையில் நனைந்து
விண்மீண்கள் கொணர
விழிகளைத் தூண்டில் செய்தேன்…

அரிவாள்களோடு வந்தவர்களைக் கண்டு
அஞ்சி முறிந்தன மரங்கள்.
பறவைகள் சிதறி, மிருகங்கள் இறக்க
இரண்டாவதாகவும்
என் நிலை தோற்றது.

துரும்பைப் போல்
இழுத்துச் செல்ல நினைத்த
அலைகளிடமும் என்னால்
செல்ல முடியவில்லை.

இப்பொழுது உன் தீர்மானங்கள்
என்னை நிறைவேற்றுகின்றன
என்றாலும் உண்மையில் நான்
குவிந்து கிடக்கும் வினாக்களின்
இரையாகத்தான் இருக்கிறேன்.







சிறு குறிப்பு: கவிஞர் இளம்பிறை, சென்னையில் அரசுப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இளவேனில் பாடல்கள் (1990), மெளனக்கூடு (1993), நிசப்தம்(1998), முதல் மனுசி (2003), பிறகொரு நாள் (2005), நீ எழுத மறுக்கும் எனதழகு (2007) ஆகிய நூல்களைப் படைத்திருக்கிறார்.

குட்டி ரேவதி


ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 1

இரா. மீனாட்சி: ஒவ்வோர் இறகும் ஒவ்வோர் பறவை


சுவரையே முட்டிக்கொண்டிராமல் சுவர்களுக்கு வெளியேயான இயல்பான சூழலுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் குரலாகக் கவிதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்பவர்கள் சிலரே. இயற்கையின் கருப்பொருள் எதுவும் இவர்கள் கவிதையில் கவித்துவம் பெற்று, வரிகளுக்கு இடையே அர்த்தம் பெறும். அம்மாதிரியான மொழியுறவை இவர்கள் தக்கவைத்துக் கொள்வதுடன், ஏனைய உறவு போன்றே இவ்வுறவையும் பேணி சிறப்பு அம்சங்களுடையதாக வளர்க்கின்றனர். அவ்வகையில், கவிதையைத் தன் அகக்குரலாக மாற்றிக்கொண்ட பெண்ணின் மொழி இரா.மீனாட்சியினுடையது.



ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதில் தன் முதல் தொகுப்பைப் பதிவு செய்திருக்கும் இரா.மீனாட்சியின் எழுத்தைப் பற்றி விவாதிப்பதில் இரு முக்கியமான விடயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது சமகாலத்தில் உத்வேகமெடுத்திருந்த, ‘எழுத்து’ இயக்கத்தில் பங்கெடுத்துக்கொண்ட முதல் பெண் கவிஞர், முதலாவது! எழுபதில் எழுதத்தொடங்கி தனியாக இயங்கி, இன்று நூற்றுக்கணக்கான பெண் கவிஞர்கள் இயங்கும் காலத்தும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது என்பது, இரண்டாமவது! அவர் எழுத்தில் இன்றைய பேசுபொருளாக்கியிருக்கும் உடல், பாலியல், பாலிமை போன்றவற்றை ஆய்ந்தறிவதற்கான வாய்ப்பை நான் இங்கு எடுத்துக் கொள்கிறேன். எம்மாதிரியான பெண்ணுடலை அவர் வரித்திருந்தார் என்பதைக் கண்டறியும் போது அக்காலமொட்டிய சில தெறிப்புகளும் நமக்கு வாய்க்கக்கூடும்.



முதலில் பெண்ணெழுத்து இப்படித்தான் உருவாகிறது. பெண்மையை தனது ஒரு பலமாக மாற்றிக்கொள்வது, அதனை உடலுக்குள் திடமான ஒரு பண்பாகக் கட்டமைத்துக் கொள்வது, பெண்மை என்று தான் நம்பும் சில குணநலன்களின் அதாவது, நளினம், மென்மை, அடக்கம், அச்சம், மடமை, பயிர்ப்பு போன்ற சில குணத்தொகுதிகளையேனும் உடலுக்குள் தொகுத்து வைத்துக்கொள்வது! அரவாணிகள் தம் உடல்களை அப்படித்தானே திருத்தியெழுதிக்கொள்கிறார்கள்! இதன் வழியாக உடலுக்கு ஒரு புதிய பாலியல் வெளியைப் பயிற்றுவிக்க முயல்கிறார்கள். மீண்டும் மீண்டும் அவ்வெளிக்குள் பயணிக்க விரும்புகிறார்கள். இப்படித்தான், ஆரம்பக்கட்ட பெண்நிலை வாதம் நமது புவியியல் சூழலில் தொடங்கியது. இதை சட்டை உரிக்கும் நிகழ்வாக, புற வளர்ச்சிக்கான ஓர் அடையாள நிகழ்வாகப்பார்க்கலாம்.
ஆனால், இது வெளிப்படையான பாலிமையை எங்குமே பேசத்துணியவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இலக்கியத்துறையில் காலூன்றும் தனது முயற்சியில் சக ஆண் படைப்பாளிகளுக்கு இணையாகத் தானும் வெல்லவேண்டும் என்பதாய் இருக்கலாம். குடும்பம் பின்புலமாக எழுத்தை முன்வைக்கும்போது பாலிமை என்பதை ஒரு பேசு பொருளாக்கினால், அது முதலில் குலைப்பது அவரவர் குடும்பத்தையும் மண உறவையும் தாம். இது ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். ஆகவே, சுய தணிக்கை செய்து கொண்டே இருப்பதும், மொழி வழியாக ஊக்கம் பெறும் போதெல்லாம் முளை விடும் இறக்கைகளைக் கத்தரித்து விடும் அவலமாகவும் இருக்கலாம். ஆனால், இலை மறை காய் மறையாக உடலின் வேட்கையை வார்த்தைகளில் ஒளித்து வைத்துப் பேச அவர்கள் தயங்கவே இல்லை. மேலும், ஒரு பொருளில் பெண் பயன்படுத்தும் சொல்லை அதே பொருளில் உள்வாங்கிக்கொள்ளும் உணர்வுக்கொம்புகளை இன்னும் ஆண்கள் வளர்த்துக்கொள்ளவில்லை தானே?



இவ்வாறு தான் முதன்முதலாக எழுத வந்த பெண் கவிஞர்களும் பெண்மை என்ற வரையறைக்குள்ளிருந்து முதலில் மொழியை வெளிப்படுத்திக்கொண்டார்கள். பின்பு தான், மொழியின் உடைப்பும் உடலின் தகர்ப்பும் நிகழ்ந்தன என்று சொல்லவேண்டும். இவ்விடத்தில், இரா.மீனாட்சியின் கவிதை செய்ததை விவாதிப்பது பொருத்தமான கருவாக இருக்கும் என்று நினைக்கிறேன். இயற்கையுடனான தன் கலப்பையும், மானுட உறவையும் ஓயாது பேசிவரும் மீனாட்சியின் கவிதைகள், பெண்மையின் வீறு கொண்ட கவிதைகளாக உருவாகியிருக்கின்றன.
‘எழுத்து’ இலக்கிய இயக்கத்தினுடனும், ‘சி.சு.செல்லப்பா’ போன்ற நவீன இலக்கிய முன்னணியினருடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்ற இரா.மீனாட்சி, நவீன இலக்கியப் பெண்ணெழுத்தின் தொடக்கமாகிறார். அப்பொழுது உருவாகியிருந்த நவீன கவிதையின் உத்வேகத்தைத் தானும் பயன்படுத்திக் கொள்கிறார். இன்று வரை ஓயாது கவிதையை தன் அகக்குரலுக்கான வடிவமாகத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து எழுதியும் வருகிறார்.
2002 –ம் ஆண்டு கவிஞர்கள் க்ருஷாங்கினியுடனும் மாலதி மைத்ரியுடனும் சென்று கவிஞர் இரா.மீனாட்சியைச் சந்தித்தேன். அவரது கவிதைகளை ஒரு மருங்கிலிருந்து மறு மறுங்கு வரை வாசிக்கும் அனுபவம் அதற்குப் பிறகு இக்கட்டுரை எழுதுவதற்காகவும் கிடைத்திருக்கிறது. தனது மொழியின் உள்ளீடாக இவருக்கேயான அழகியலும் நடைலயமும் உக்கிரம் நோக்கி நகரும் வாக்கிய மடிப்புகளும் கொண்டு எழுத்தில் இயங்குகிறார். கடந்த நான்காயிரம் வருட உலகக்கவிதை இயங்குதலைத் தொகுக்கும் முகமாக, அமெரிக்காவிலிருந்து வெளி வந்த கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற இருபதாம் நூற்றாண்டின் ஒரே தமிழ்க்கவிதை இவருடையது.


உலகச்சந்தையில் விற்பனைக்குப் போகும் பிற மலர்களுடன் அத்தகுதியைப் பெறாத நெருஞ்சி மலரைத் தன் முதல் தொகுப்பிற்குத் தலைப்பாக்கி இரா. மீனாட்சியின் கவிதைகள் பகிரங்கமாக வெளிவந்தன. நவீனப்பெண்ணிய இலக்கியத்தில் இரா.மீனாட்சிக்கு இருக்கும் பங்கு முதன்மையானதாக இருக்கிறது. அதாவது, அவர் வழியாகத் தான் தமிழ்ப்பெண் கவிதையின் தடம் உயிர்ப்பெறுகிறது. அதுவரை, தமிழ்ப் பேராசிரியர்களின் கைகளில் மண்டிக்கிடந்த மரபுக்கவிதைகளிலிருந்து நவீனத்தை நோக்கி ஒட்டுமொத்தமுமாக பெண்கவிதைக்குத் திசை திருப்பித்தந்த பங்கு இவருக்கு உண்டு. என்றாலும், மரபுக்கவிதையின் நடை, சந்தம், சொல்லாட்சிகளிலிருந்து விடுபடாத தொகுப்பாகவே நெருஞ்சி உருவாகியிருக்கிறது. என்றாலும், கருப்பொருள் அளவில் மரபார்ந்த சிந்தனை அடுக்குகளிலிருந்தும் அழுத்தங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் இரா. மீனாட்சி எடுத்துக்கொண்டார்.
சுடுபூக்கள் கவிதைத்தொகுப்பில், இப்படியான வரிகளுடைய காற்றோ காற்று எனும் கவிதை
’ஒவ்வோர் இறகும்
ஒவ்வோர் பறவை’





சங்கொலிப் பாதையில்
நான் ஒரு அற்பப் புழு
ஆகாசக்கைகள் என்னைத் தொட்டன.
நீவிய கையின் மந்திரமோ?
எனக்கும் சிறகுகள் முளைத்தன.
அலகால் அரிசியைக் கொத்தி
பாலையும் குடித்தேன்.
பம் பம் பம்பம்…
சங்கொலிப்பாதையில்
சங்கிலி உடைத்துப் பறக்கிறேன்
நானும் பறக்கிறேன்

(நெருஞ்சி கவிதைத்தொகுப்பு -1970)



சங்கொலிப்பாதியில் கவிதை தன் உடலுக்குள்ளிருந்து சிறகு விரிக்கும் அனுபவத்தை, உட்பொருளாக்கியிருக்கிறது. உடலுக்குள்ளிருந்து தீவிரமாக வெளியேறும் முனைப்பும் விட்டு விடுதலையாதலும் நிகழ்ந்திருக்கின்றன. இத்தகைய தன் முனைப்பை கூர்மையான மொழியாக்கவும் அனுபவமாக்கவும் முடியாமல் தவிக்கும் குரலையும் அவரே பதிவு செய்கிறார்.



எழினி
அவள் தானே வெளியேற
அவளே தடையாகி,
அவலத்துடிப்பு.
மென்குரலில் வெளியழைப்பு.
அவளுக்கோ அவலத்துடிப்பு
கழுத்து முடிச்சு பற்றுக்கோடா?
தடையுத்தரவு.
முள்வேலி.
கம்பிக்கயிறு கட்டுமானம்.

பூச்சிலை நெளிகிறது.
திரையாகி அலைகிறது.
துருப்பிடித்த
சன்னலுக்குத் தெரியுமா
சீலையின் தவிப்பு?
(நெருஞ்சி கவிதைத்தொகுப்பு -1970)



‘அக விடுதலை’யைத் தீவிரமாக முன் வைக்கும் கவிதை இயக்கம் சந்தித்த பிரச்சனைகளில் முதன்மையானது பற்றுக்கோடின்றி அலையும் அதன் கவித்துவ வேகம். அதாவது, சிந்தனைச் செழுமையுறாது என்ன தான், தீவிரமான இயக்கத்திற்குள் நம்மை உட்படுத்திக்கொண்டாலும் அது அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி வடிவம் பெறாது துவண்டு விழுந்திருக்கின்றது. இதை ஆண் எழுத்துடன் தொடர்புப்படுத்திப் பார்த்தோமானால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளலாம். இத்தகைய அகவிடுதலைத் தத்துவத்தை இன்று வரை தம் எழுத்துகளில் சீரியதாக முன்வைத்துக்கொண்டிருக்கும் ஆண் படைப்பாளிகள், ‘இயற்கை’, ‘தத்துவம்’, ‘ஆன்மீகம்’, ‘அகவிடுதலை’ போன்றவை அடிப்படையான எந்தச் சிந்தனையையும் உட்வாங்கிக்கொண்டவையாக இல்லை. சித்தாந்தம் எதையும் தனக்குள் தக்க வைத்துக்கொள்ளாத இத்தகைய எழுச்சிகள் வெறுமனே உணர்வெழுச்சிகளாக ஓய்ந்துப் போகின்றன. உடலை வெறுங்கூடு என்று நோக்கும் அடிப்படையான மனோபாவம் தான் இயற்கையின் மூலமாகவும் தீரமான அடையாளமாகவும் உடலைப் பார்க்க இயலாத பலவீனமும் எந்த விடுதலையையும் சாத்தியப்படுத்தாமல் போகின்றன. குப்பையைக் கிளறுவதை அடிப்படைப் பணியாகக் கொண்டிருக்கும் கோழி, இறக்கைகள் தேவைப்படும் வானத்தை வேட்கையுடன் பார்ப்பது போலத்தான்!




ஆனால், மீனாட்சி இதற்கான சுவடுகளை, சங்கொலிப்பாதையில் கவிதையிலேயே, தனது முந்தைய கவிதையிலேயே வைத்திருப்பதையும் பாருங்கள்!. நீவிய கையின் மந்திரமோ? என்ற வரியே உள்ளீடற்ற அர்த்தத்துடன் ஏற்கெனவே பதிவாகி இருப்பதை இங்கு மீண்டும் இணைத்துப் புரிந்து கொள்வோம்.
எங்கும் வெளி
பெரிய வெளியில்
சிறிய வெளி என் வீடு
வீட்டிற்குள் என் உடம்பு
அங்கும் வெளிதான்.
வெளியில்
பரவச ஒளியின்
எல்லையில்லாத நாட்டியம்
(மறு பயணம் கவிதைத்தொகுப்பு, 1998)
இக்கவிதையிலும் விடுதலை என்பதை உடலுக்குள் வைத்துப் பேசும் சுயம் தொனிக்கிறது. வெட்டவெளி என்பதைத் தனக்கான ஆன்மீக வெளி என்று நோக்கினாலும், அதை அடைவதற்கான சிந்தனைத்தடமற்று கவிதைகள் தொடர்கின்றன. ஆனால், இவையெல்லாமே ஆண்களின் பேசுபொருளாக மட்டுமே இருந்திருக்கின்றன என்னும் கட்டத்தில் மீனாட்சிக்கும் இவ்வெளிக்குள் நுழைந்து பார்க்கும் தன் விழைவை முயன்றுபார்க்கும் மொழியாகத் தான் இக்கவிதையைப் பார்க்கிறேன்.




இராமர், கண்ணன், சீதை, இராவணன் போன்ற இதிகாசக் கதாபாத்திரங்களைத் தன் நிலையிலிருந்து தகர்த்துக்கொண்டே வருகிறார். புராணக்கதை மாந்தர்களை விமர்சிப்பதை ஆதிக்கப் பின்னணிப் பெண்கள், தொடர்ந்து செய்து வந்திருக்கின்றனர். கவிதையில் மட்டுமன்றி, இந்தியாவின் எத்திசையில் படைப்பாற்றலை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் எந்த ஒரு பெண்ணும் இதைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இதன் காரணம், அவர்களின் உடலும் விடுதலையும் எழுச்சியும் இக்கதை மாந்தர்கள் தம் கதாபாத்திரங்களுக்கு உள்ளிருந்து பெண்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை தான்! இவர்கள் தாம் இப்பெண்களை, தந்தையராகவும், கணவராகவும், சகோதரர்களாகவும், மகன்களாகவும் தொடர்ந்து வதைக்கின்றனர். இவ்வதையிலிருந்து வெளியேற இக்கதைமாந்தர்களாக மெய்மையில் தங்களை உருமாற்றிக்கொண்ட ஆண்களின் சிறைகளிலிருந்து வெளியேற விரும்பினர். தங்கள் நினைவுகளுக்குப் புகட்டப்பட்ட பிம்பங்களைத் தகர்க்கத் தொடங்கினர். ஆகவே, தம் சிந்தனையைத் தெளிவுபடுத்திக்கொள்ள ஒவ்வொரு வீட்டிலும் இக்கதைகளால் கட்டிப்போடப்பட்டிருக்கும் உடலை விடுவிக்க வேண்டியிருக்கிறது. பின், இம்மாதிரியான ஆண் பிம்பங்களையும், அவர்களுக்கு உடன்பட்ட பெண் பிம்பங்களையும் இவர்கள் தகர்க்க வேண்டியிருந்தது, இந்த அளவிற்கேனும் விடுதலையைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.




பிற ஒடுக்கப்பட்ட பெண்களின் நினைவுகளில் இத்தகைய ஒடுக்குமுறைக்கான பிம்பங்கள் பதிவாவதில்லை. அவர்களின் பிம்பங்கள் ஆதிக்க மனிதர்களால் உருவானவை என்பதால், சீதை, இராமன், கண்ணன் போன்றவை எல்லாம் ஆதிக்க சாதி, இனப் பெண்களால் தாம் தகர்க்கப்படவேண்டும். நினைவை மொய்க்கும் இப்பிம்பங்களால் அவர்கள் உடல், கட்டுப்படுத்தப்படுவதை, சிதைக்கப்படுவதை அவர்களும் உணர்ந்திருக்கக்கூடும் இல்லையா?
மேற்கொண்ட பொருளில் உளைவுக்குள்ளாகும் மனநிலையைச் சொல்லும், மிகவும் புகழ்பெற்ற மீனாட்சியின் கவிதை,

மதுரை நாயகியே!

மதுரை நாயகியே!
மீனாட்சித்தாயே!
படியேறி
நடை தாண்டி
குளம் சுற்றி
கிளி பார்த்து
உன்னருகே ஓடிவரும்
உன்மகளை
உன்மகனே ஏ
வழிவம்பு செய்கின்றான்
கோயிலிலும் காப்பில்லை
உன் காலத்தில்-
அழகி நீ!
எப்படி உலாப்போனாய்?




(சுடு பூக்கள் கவிதைத்தொகுப்பு, 1978) இல் வெளியான இக்கவிதையும், அதே தொகுப்பில் இடம்பெற்ற ‘நாங்கள் நகரத்துக்குப்போகும் சின்னப்பெண்கள்’ எனும் சமூக யதார்த்தம் தொனிக்கும் கவிதையும் ஒரே மனநிலையில் இயங்குகின்றன. பெண்ணுடல் மீது இயங்கும் புற தாக்குதல்களை மையமிட்ட கவிதைகள் இவை.
……………………………………………………………………….
உள்ளே பார்த்தோம்.


எங்கள் மேலாடைகளைக் கிழித்து
தோல் பூச்சைத் துளைக்கின்ற
பூனைப் பார்வைகளை

பார்வைகளையே கைகளாக்கிக்
கைகளையே கொடுக்குகளாய்ச்
சக பிரயாணிகள் சுமந்திருப்பதைக்
காலங் கடந்தே
நாங்கள் பார்த்தோம்.




தொடக்கத்தில், பெண்கள் எழுத வந்த போது நேரடியான அவர்களின் வெளிப்பாடுகள் விமர்சனத்திற்குள்ளாயின. நாட்குறிப்புகள் தாம் பதிவு பெறுகின்றன என்றும் படைப்பூக்கம் இல்லா எழுத்துகள் என்றும் விமர்சனத்திற்குள்ளாயின. இவை ஆண், பெண் என இரு தரப்பினரிடமும் தாம் காணப்பட்டன என்றாலும், இதைச் சொல்லும் அதிகாரம் ஆண் படைப்பாளிகளிடம் தான் இருந்தன. இரா. மீனாட்சி, இந்த அரசியலையும் கையாளவேண்டியிருந்திருக்கும். இடது சாரி அரசியலுடன் வந்த படைப்பாளிகளையும், வானம்பாடி போன்ற இயக்கங்களையும் எதிர்கொள்வதற்கான அரசியல் பார்வையை அவர் முன்வைக்கவோ விவாதமாக்கவோ இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக அரசியல் வெளிப்பாட்டை தன் கவிதைகளில் அவர் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தாலும் கூர்மைப்படாத ஒன்றாகவே இருந்தது.


இவர்களுக்காக
……………………………………………………
………………………………………………………………

நீங்கள் தேன் வடிக்காமல்
செந்நீர் உகுத்தீர்கள்
அழவும் தெரியாமல்
அசுர விதைகளுக்கு மடி தந்தீர்கள்

புலிப் பொருளியலில்
போகப் பொருளானவர்களே!
உணர்ச்சி ஊர்களின்
மடைத் திறப்புகளே!
என்றைக்கு உடைத்தெறியப் போகிறீர்கள்
இந்த மானவேலிகளை?

பெண்களே
இவர்களுக்காக இன்னொரு முறை
அழாதீர்கள்

………………………………………………………………………………………..
(தீபாவளிப்பகல் கவிதைத் தொகுப்பு,1983)




இக்கவிதையில் அசுர விதைகளுக்கு மடிதந்தீர்கள் என்று மறைபொருளாகச்சாடுகிறார் மீனாட்சி. இம்மாதிரியான நேரடியான பிரச்சாரக்கவிதைகளில் இருக்கும் பிரச்சனைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவை ஒரு பொழுதும் பிரச்சனை எனப்படுவதன் ஆழத்திற்குக் கூட்டிச்செல்வதில்லை. ஆற்றின் மீதான பாலத்தில் நடக்கும் வசதியுடனும் கவனத்துடனும் இம்மாதிரியான கவிதைகளை எழுதுவதில் ஒரு சுகம் இருக்கிறது. அரசியல் அடையாளம் பெறுவதை, ஓர் அங்கீகாரமாக எண்ணிக்கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது.ஆனால், இம்மாதிரியான கவிதைகளால், எந்தப்பிரச்சனையும் மேலெழுந்த வாரியாகப் பேசப்படுகிறதே அன்றி அகஎழுச்சியை ஏற்படுத்துவதில்லை. சமூக அழுத்தம் பெற்ற விஷயங்களைப்புரட்டிப் போடுவதே இல்லை. இதற்கு ஓர் உதாரணமாய் ஒரு கவிதை:

நிழலாய் இருக்க விடு
உச்சி வெயில் போதில்
நிழல் பொருளுள் ஒடுக்கம்
நீ அந்த வெயில்
நிழல் நான்

வாழ்க்கைக் காலையில்
என்னை முன் நடத்து
சாயும் வேளையில்
பின் நிற்கிறேன்.

ஒளிக்காலத்தில்
நிழல் நிகழும்
இருட்டெனில் கருகும்.

உன் வழியில்
பகலைப் பார்க்க
எனக்கோர் ஆசை!




சுடுபூக்கள் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இக்கவிதையில், மேற்சொல்லியிருக்கும் அதே மாதிரியான ஆன்மீக, தத்துவத் தேய்மானங்களைக் காணலாம். அதாவது, இக்கவிதையில் முன்னிலை பெறும் நீ என்பது பேசப்பட்டிருக்கும் பொருள் சார்ந்து ஓர் ஆணாகவோ, கடவுளாகவோ இருக்கலாம். அதற்குள் தன்னை ஒடுக்கிக் கொள்ளும் தீவிர இச்சையைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்துக்கொண்டே இருக்கிறது, இக்கவிதை. ஆனால், அத்தகைய ஆன்மீக, தத்துவச் சிந்தனையே எவ்வளவு போலியானதும் வெறுமையானதும் என்பது உண்மையான தத்துவப் பின்புலங்களிலிருந்தும் நெடிய ஆய்வுகளிலிருந்தும் வருபவர்களுக்குப் புரியும். இந்தப் பயணம் படைப்பவரையும் வாசகரையும் எங்குமே கொண்டு சேர்க்காத ஒரு வண்டியில் ஏற்றியது போன்றது இல்லையா? இது வைதீக சிந்தனையின் வேர்கள் நம் அடி மன ஆழங்களில் மண்டிக்கிடக்கும் விழிப்பு அற்று இருப்பதன் பிரதிபலிப்பு தான்!





ஆனால், எனக்குப் பிடித்த தொனியில் அணுகப்பட்ட சில கவிதைகளையும் மீனாட்சியின் கவிதைத்திசைகளில் கண்டெடுத்தேன். இவை பெண் மனவெளியில் சிக்கல் உள்ள பகுதிக்குத் துல்லியமாகச்சென்று, அதன் இழைகளை மொழிக்கு இழுத்து வருகிறது. பொதுவாக, நவீனப் பெண்மனம் இந்த அணுகுமுறைக்கு எளிதானது இல்லை. பல சமரசங்களையும் மீறித் தன் சுயத்தையும் கட்டுக்குலையாமல் வைத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்நிலையில், அவள் அதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது, அதில் ஏற்படும் சங்கடங்கள் என்னென்ன என எல்லாவற்றையும் கவிதைக்கான நுண்ணிய மொழியில் கொண்டுவருவது என்பது சாத்தியம் தான் என இக்கவிதைகளை வாசிக்கும் போது உற்சாகமானேன். மீனாட்சியின் சில கவிதைகளில் மட்டுமே வாய்க்கும் நவீன உணர்வுகளை, அவரே தக்கவைத்துக் கொள்ளாமல் போய்விட்டாரே என்று என்னும் அளவில் அதற்குப் பின்பான கவிதைகள் வசனங்களாகி இருக்கின்றன. அதனாலேயே ஆழமான கருக்களங்களுக்குள் நுழைய முடியாத மனப்பிரமையும் அப்பிக்கொள்கிறது




பார்பரா என் தோழியே!

நீலக் கண்களில் நீளக்குறும்பு
கூரிய மூக்கில் கேலிப்புன்னகை
செம்பொன் முடியோ காற்றில் அலையும்
விரல்களில் அவசரம்
நடைதனில் கம்பீரம்
உன் பேச்சில் லாஸர் கற்றை.

நீ எப்போது தவித்தாய் தெரியுமா
பெண்ணே!
ஒரே ஒரு முறை
உன் முதல் காதல் அனுபவத்தை
முற்றிய நாளில் சொல்ல முயன்று
அளக்க நினைத்துத்
தோற்றாயே முன்னுரையில்!
பார்பாரா என் தோழியே!
தவிப்புமா தொற்று வியாதி?

(தீபாவளிப்பகல் கவிதைத் தொகுப்பு, 1983)







இதோ இன்னுமொரு கவிதையின் குறும்பகுதி:


அந்தரங்கவெளி

...................................................
நீர் குடிக்கத் தவிக்கின்ற சிறுபடகும்
கறையான் அரித்த துடுப்புகளும்
உப்புக்கரைசலில் எரியுண்ணும்
காயங்களும் தான் இங்கே துணை.
இவற்றோடு பயணப்படுகின்றேன்.
துக்கச் சுமைகளைத் தூக்கிவர
கூலி யாருமில்லை.
......................................................

மாலை மலர் விரிவது போல்
மெல்ல நடந்தாலும்...
கனவுகளுக்குள் இறங்கும்போது
கதவிடுக்கில் எட்டிப்பார்த்தாலும்....

பல்லாயிரர் கூடும் தேர்த்திருநாள் நெரிசலில்
ஒரு கணமேனும் ஊடுருவும்
பார்வை பட்டாலும்...
என்னை அறிந்து கொள்ளும் அந்த நீயா...

வயிற்றுக்கிரை இல்லாத
வீதி நாளில்
கதை சொல்லி வீரமுட்டி
விழிவியர்வை மாற்றினாயே

.................................................................

எல்லாம் போனபின்
உள்ளீடற்ற பின்னம்
நிழல் சின்னம்
மீதி நான்.

சோப்புக் குமிழிகளை ஊதுகிறேன்
வால் சேர்ந்த வஜ்ரப் பட்டங்களைப்
பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறேன்.

கண்ணாடித் தொட்டியில்
ஓயாது அலைகின்ற
உறங்காத
இளஞ்சிவப்பு மீன்களைப்
பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.

வாசல் வேப்பமரம் உதிர்க்கின்ற
பொன்பூக்களின்
சின்ன மழையில் நனைந்து கிடக்கின்றேன்.

கான்கிரீட் சுவர் குழைக்க
குவித்திருக்கும் மணல் முகட்டில்
வீடு கட்டக் கரண்டி பிடிக்கின்றேன்.

என்னைக் கடக்கின்ற நரைமேகங்களின்
விசித்திரச் தோற்றங்களி
மாற்றிச் சிவப்பாக்கித்
தூரிகையை கங்கையில் அலசுகின்றேன்.
மாடி மீது ஏறினாலும்
என்னைக் குனிந்து பார்த்துக் கெக்கலிக்கும்
தென்னங் கீற்றுகளைக் கிழிப்பதற்கு
கத்தியைச் சாணைப் பிடிக்கின்றேன்.

இப்போது
புதிதாக முன்னால் நட்டிருக்கும்
இரும்பு வேலிகளை வளைப்பதற்குப்
பழகிக்கொண்டிருக்கிறேன்.

இடது கண்ணில் வலது கண்ணை
அப்பி விட்டேன்.
இதயத்தைத் தனியே கயிற்றில்
கோர்த்துவிட்டேன்.

நம்பு
இன்னும் நான் சாகவில்லை
இருக்கின்றேன் உயிரோடு!

மற்றுமொரு கவிதையும்:

வித்யா
குளத்து நீரில் மீன்பிடிப்பவர்களே
ஆற்றங்கரைக் கொக்குகளே
நான் வித்தியாசமானவள்.

கணந்தொறும் கணந்தொறும்
கடலின் பாய்ச்சல்
மரத்தொட்டிலை
அலைக்கழிக்கும் வேகத்தில்
வலை போடவே விரும்புகிறேன்
நீங்கள் காத்திருத்தலையே
விரும்புகிறீர்கள்.

நான் புயலுக்குள் புயலாய்ப் போய்
மையத்தைத் தொட்டுப்பார்க்கிறேன்
நானொரு வித்யா.




இரா.மீனாட்சியின் உள்நோக்கமும் அவர் கொள்ள விரும்பும் நெடும்பயணத்தையும் சொல்லும், ‘உன்னை எதிர்கொள்ளும் முன்’ கவிதை அவரை வாசிக்கும் எவரையும் ஊக்கப்படுத்துவது. எதிரே வரும் அனுபவங்களுக்குத் தன்னைத் திறந்து கொடுப்பது. குறிப்பாக, ஒரு மனிதருக்கு தன் சமுத்திரத்தைத் திறந்து கொடுக்கும் அனுபவம் ஆணுக்கான ஒன்றாக மட்டுமே வகுக்கப்பட்டிருக்கும் சமூகச்சூழலில், ஒரு பெண் இதை முன்மொழிவதும், அம்மாதிரியான பயணத்திற்கும் அனுபவத்திற்கும் தன்னைத் தயார்செய்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது. உடல் வழியாக மட்டுமே அனுபவங்கள் சாத்தியம்!



உன்னை எதிர்கொள்ளும் முன்

வேற்றூரின் புன்னகைக்கு
மறுமொழி தந்து
சிப்பியும், மீன்முள்ளும்
காலிக்குப்பிகளும்
இடறிவிட்ட வீதிகளில்
‘மாப்சா’ சந்தைகளின்
அபூர்வ சேகரிப்பில்
திளைத்ததைப் போல்
உன்னை எதிர்கொள்ளுமுன்…
அன்பே!
பயணத்தில் இருக்கின்றேன்.
நீயே அனுபவமாய்
எதிர்கொள்ள வருகின்றேன்.



இரா.மீனாட்சி பற்றிய சிறுகுறிப்பு: 1970 –ல் எழுதத் தொடங்கிய இவர், நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு ஆகிய கவிதைத்தொகுப்புகளைப் படைத்துள்ளார். பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார். கிராம முன்னேற்றம், ஆசிரியப்பணி ஆகியவை இவரது பிற ஆளுமைகள்.





குட்டி ரேவதி


நன்றி:கூடு