நம் குரல்

கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தயவுசெய்து யாரும் என் எழுத்தை வாசிக்காதீர்கள்! - ஒரு கடிதம்





இக்கடிதத்தை சிலவாரங்களுக்கு முன்பே வலைப்பதிவில் எழுத எண்ணியிருந்தேன். இப்பொழுது தான் சமயம் வாய்த்தது. அன்பார்ந்த நேயர்களே! என் எழுத்துகளை தயவுசெய்து யாரும் படிக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் மறைமுகமாக உங்களை வாசிக்க வைக்கும் தந்திரம் ஏதுமில்லை.


என் எழுத்தை பத்து வாசகர்களுக்கு மேல் படிப்பதை நான் விரும்பவில்லை. அத்தகைய எழுத்து குறித்த சந்தேகங்கள் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்தே இன்னும் ஆழ ஆழ வேரோடிக் கொண்டே இருக்கின்றன என்னுள். எண்ணிக்கை நிமித்தமான வாழ்க்கை எத்தகைய பேதலிப்பைத் தரும் என்பதை எல்லா வகையிலும் மேலும் மேலும் நான் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்.


என்னுடன் வதியும் மனோ கூட என் கவிதைகளை வாசித்திருக்கமாட்டார். அத்தகைய பாதுகாப்பை என் எழுத்துகளும் பெற்றிருக்கின்றன என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவ்வளவு சொற்பமான இடத்தைத் தான் எழுத்து வாழ்க்கையில் கொண்டிருக்கிறது. மேலும் அதிகமானோர் வாசித்தால் என் எழுத்தில் ஏதோ குறையிருப்பதான ஒரு குற்ற உணர்வு என்னைத் தொற்றிக்கொள்ளும். ஆகவே, தயவு செய்து யாரும் என் எழுத்தை வாசிக்காதீர்கள்!




தமிழகத்தில் கவிதையை வாசித்தோ விவாதித்தோ வாழ்வதற்கான உரையாடலையும் இன்முகத்தன்மையையும் இலக்கிய அரசியல் இழந்து விட்ட நிலையில் என்னிடம் பராதிகள் ஏதும் இருக்கமுடியாது அல்லவா? எழுதிய கவிதையை வாசித்துக்காட்டி அதன் நுணுக்கங்களைப் பற்றி விரிவாக உரையாடுவதற்கான பெருந்தன்மைகள் அபூர்வமானவை.


நான் எனக்காக மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறேன். வலைப்பதிவு என்பதையும் ரகசியமான ஒரு நாட்குறிப்பேட்டைப் போன்றதொரு வெளியாக உணர்கிறேன். அத்தகைய அக உலகிற்கான பிரவேசங்கள் மிகக் குறைந்த நபர்களுக்கே சாத்தியமானது என்பதை நீங்கள் அறிந்ததில்லையா? என் எழுத்தின் இறுக்கத்தைத் தாண்டி செல்வதற்கான துணிவை எடுத்துக்கொள்வோருக்காக மட்டுமே நான் எழுத்தைத் திறந்துகொடுக்கிறேன்.


மெல்லிய குறட்டை சத்தங்கள் என் வரிகளுக்கிடையே ஒளிந்திருக்கக்கூடும். என் வாழ்வின் சுவாரசியங்கள் குறித்த சத்தியங்களை எழுத்தின் வழியாக செய்து கொள்ளவேண்டிய அவசியமில்லை தானே! அத்தகைய சத்தியங்கள் வேட்டைநாய்களுடையவை என்று ஒரு பழமொழி உண்டு. நான் நிறைய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். அதில் எழுதுவது என்பது என் தீவிரத்தை ஆற்றுப்படுத்தும் ஒரு பணி. நிறைய பயணம் செய்தல், வேறு வேறு உலகங்களை என் ஆழ் மனநிலைக்கும் உடல்நிலைக்கும் பரிச்சயப்படுத்திக்கொள்ளல் என...அதில் எழுத்தை மட்டுமே அதிகாரமயமாக்காமல் வைத்துக்கொள்ள முடியுமானால்... என் கவலைகள் எல்லாம் என் அக உலகம் பற்றியது தான். அதை எழுத்தில் கொண்டு வருவதற்கான மூர்க்கமும் ஆதங்கமும் எனக்கு இல்லவே இல்லை.



எந்தப் பட்டியலில் அடக்கினாலும் அடக்காவிட்டாலும் என் பெயர் காலத்தின் நதியில் மிதந்து செல்லும் ஒற்றைச் சருகு. எல்லாருடைய பெயரும் அப்படித்தானே?



வாசிக்க வாசிக்கத் தெவிட்டாத எழுத்தாக, இத்தனை வருடங்களுக்குமான ஊக்கத்தைத் தன்னகத்தே கொண்ட கவிதைகளாக இருப்பவை இளங்கோவடிகளின் வரிகள் மட்டுமே. நல்ல வேளையாக தன் பெயரை ஒரு குறியீடாக வைத்து அரசியல் செய்வதற்கான காலம் அவருக்கு இல்லை என்பது அவரின் கவிதை உலகத்திற்குள் பயணிக்க என்னை அனுமதிக்கிறது. எளிதாகவும் இருக்கிறது. கண்ணகியை கவிதை படைக்க ஒரு சாக்காகவே வைத்து தன் அறங்களைப் பயின்றிருக்கிறார். இன்று வரை அவர் இடம்பெற்ற பட்டியலில் வேறு எந்த எழுத்தாளர் பெயரும் இல்லை.



இன்னும் மிச்சம் இருக்கிறது என்னுடைய வாதம். பெண்ணாகப் பிறந்துவிட்டதாலேயே என்னைப் பெண் என்றும் அதற்கான நியமங்களையும் என் மீது சுமத்தாதீர்கள் என்பதே அது. நான் ஒரு பெண் மட்டுமே அல்ல. பெண் என்பது முதன்மையான சமூக அடையாளம் அவ்வளவே. வேறு அக புற சமூக அடையாளங்களும் எனக்கு உண்டு. ஆனால் பெண்ணின் இயலாமைகள் துயரங்கள் எல்லைகள் உச்சங்கள் இவற்றிற்கிடையேயான தொடர்புகள் பொருத்தப்பாடுகள் பற்றிய சிந்தனைகள் என்னிடம் தீராதவையாக இருக்கின்றன. ஆனால் என் வாழ்வில் சம்பந்தப்படாத நபரையோ பெண்ணையோ பற்றி விமர்சிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அவர்கள் என்னிடமிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றனர்.



இதை எழுதுவதற்கு முற்றிலும் காரணமான சத்தியாவின் கடிதத்திற்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். சத்தியா, தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல எனது தெரு எவர் வீட்டு வழியாகவும் நீள்வதில்லை என்பதால் அவர் கொடுத்திருக்கும் பட்டியலை திரும்பப்பெற்றுக் கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.



சத்தியா கவிதையின் வரலாற்றில் ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுவதா என்று அநியாயத்திற்குக் கவலைப்பட்டிருந்தார். கவிதையின் வெளி பொது. அல்லது தேவதேவன் சொல்வதைப் போல சொர்க்கம் அது.

தேவதேவனின் ‘அறுவடை’ கவிதை:

நீரில் தெரியும் நெற்கதிர்கள்

சொர்க்கத்தின் விளைச்சல்கள்

நாம் அதனை

நேரடியாய் அறுக்கமுடியாது.

அன்புடன்,

குட்டி ரேவதி

நான் ஒரு வெகுசன எழுத்தாளர் அல்லேன்! - நேயர்களுக்கு ஒரு கடிதம்

நான் ஒரு வெகுசன எழுத்தாளர் அல்லேன். வெகுசனங்களுக்கான கனவுகளையும் புனைவுகளையும் மட்டுமே சொல்ல வேண்டிய அவசியத்தை நான் சிந்திப்பதில்லை. ஆனால் வணிகச் சந்தையில் தங்கள் கருத்துகளை சமரசம் செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆகவே அப்படியான வாசகர்களும் இருக்கிறார்கள். சிற்றிதழ்ப் பண்பாட்டில் வேர்விட்ட எழுத்தாளரான எனது பார்வைகளையும் எழுத்துக்களையும் தமிழ்மணத்தில் முன்வைப்பதும் அதற்கான வாசகரைக் கண்டடைவதும் சிரமம் என்று எண்ணியிருந்தேன். என்றாலும் நான் எழுதிய ஒவ்வொரு பத்தியையும் கூர்மையாக வாசித்து உடனுக்குடன் கருத்துரை வழங்கிய வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
ஒவ்வொருக்கும் உடனடியாக மதிப்புரை வழங்க இயலவில்லை. மூன்று நாட்கள் பயணத்தில் இருந்தவாறே பதிவுகளை இடவேண்டியிருந்தது. இருப்பினும் பதில் எழுதிய ஒவ்வொருவரின் கருத்தையும் நான் மிகவும் மதிக்கிறேன் என்றும் ஒவ்வொருவரையும் அவரவர் கருத்துரை வழியாக நன்கு அறிந்து வைத்திருக்கிறேன் என்றும் எழுதிக்கொள்கிறேன். இன்னும் ஒரு நாள் நட்சத்திரப்பதிவராக இருப்பேன். அதற்குப் பின்னும் என்னுடைய வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுவேன். தோழியரும் தோழர்களும் தொடர்ந்து தங்கள் கருத்துப் பரிமாற்றத்தை நிகழ்த்தும் வெளியாக அதைப் பயன்படுத்தலாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.


பொங்கல் விழாவின் உண்மையான மகத்துவத்தை நகரத்தை நோக்கி நகர நகர இன்னும் பெருவாரியாக உணரமுடிகிறது. முற்றத்தில் பொங்கலிட்டு மகிழும் காலத்திலிருந்து நகர்ந்து சமையலறையில் பொங்கலைப் பொங்க விடாமல் பார்த்துக் கொள்ளும் ஒரு காலத்திற்கு நாம் நாகரிகமடைந்து விட்டது எதையோ இழந்துவிட்டது போல் இருக்கிறது. தொலைக்காட்சியில் செல்வராகவன், தனுஷ், செளந்தர்யா ரஜினிகாந்த் என்று மாறிமாறித் தோன்றி தமிழர்களுக்கு அருள்புரிந்துகொண்டே இருந்ததின் அலுப்பு மறைய நல்ல வேளையாக நிறைய நூல்கள் இருந்தன. அந்த நான்கு நாட்களும் தொலைக்காட்சிகளுக்கும் விடுப்பு கொடுத்துவிட்டால் நன்றாயிருக்கும். சென்னையின் புறநகர்ப்பகுதிகள் இன்னும் கிராமங்களாய் இருப்பதன் அடையாளமாய் பொங்கலின் தொடர்க்கொண்டாட்டங்களை அங்குள்ள மக்கள் வடிவம் மாறாமல் கொண்டாடித் தீர்ப்பதிலிருந்து அறிய முடிந்தது. பண்டிகைகள் தாம் தனிமனிதனை சமூகத்துடன் இசைவான வகையில் பின்னுகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.


ஏற்கெனவே எழுதியிருந்தது போல் நிலக்கோட்டையில் நடந்த மனித அவலமும் திருநெல்வேலியில் எல்லோர் முன்னிலையிலும் காவல்துறையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் கொலை செய்யப்பட்ட நிகழ்வும் இவ்வருடத்தின் கறை படிந்த படிமங்களாய்ப் பதிந்திருக்கின்றன். என்ன மாதிரியான நாடு, அரசு, மக்கள் என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள சமயம் எடுத்துக்கொள்ளலாம். இது போன்ற படிமங்களை மாற்றியமைக்க தனிமனித இடத்திலிருந்து சிறிது உழைக்கலாம். இது போன்ற பண்டிகைகளின் அர்த்தம் இன்னும் மிகுந்திடும். அதுவே மிகச் சிறந்த சமூகப்பணி!

குட்டி ரேவதி

தமிழ்மணம் நேய நண்பர்களே!

தமிழ்மணத்தின் நட்சத்திரப்பதிவராக இந்தப் பொங்கல் வாரம் முழுதும் எழுதுகிறேன். என் போன்றவர்களுக்கு இது போல் எழுதப் பக்கங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி தான். தமிழ்மணத்திற்கு நன்றி. கண்ணகியைப் பற்றியும் அவளைச் சூழ்ந்த பெண்ணிய பிம்பங்களையும் அர்த்தங்களையும் விரித்து எழுத விரும்பியிருக்கிறேன். இந்த ஏழு நாட்களும் கண்ணகியைப் பற்றிச் சிந்தித்திருக்கலாம் என்ற எண்ணம். கதை வலைகளால் நெய்யப்பட்டவள் அல்லவா கண்ணகி? தொடர்ந்து உரையாடலில் நீங்களும் பங்கெடுக்கலாம். உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.

வலைப்பதிவு தொடங்கிய பின் எந்தப் பத்திரிகையையும் சார்ந்திருந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் ஆகிவிட்டது. எழுதி முடிக்கும் பொழுதெல்லாம் பிரசுரிப்பதும் உடனுக்குடன் எதிர்வினையாற்றுவதும் வசதியாகிவிட்டது. அதனால் எழுதுவது என்பது எனது அன்றாட ஒழுக்கமும் ஆகிவிட்டது.
நிறைய முரண்களுடைய சமூக நிகழ்வுகளினூடே நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டம் ஆரோக்கியமில்லாமல் போகும் போதெல்லாம் எவரோ எங்கிருந்தோ உயிர்ப்புடன் எழுதும் ஒரு கவிதை தெம்பு தருவதை நான் உணர்ந்திருக்கிறேன். அதற்குத் தான் எழுத்து என்றும் நம்புகிறேன். நீங்களும் இதை ஆமோதிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதத் தொடங்குகிறேன். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துகளும்.

குட்டி ரேவதி