நம் குரல்

இயக்கப்பண்பாடு



ஒரு விமர்சனத்தைப் பொதுவெளியில் வைக்கையில் பெரும்பாலான தருணங்களில், அது தன்னைத்தான் நோக்கி ஏவப்பட்டது என்று நினைத்துக்கொண்டு அதை ஓர் அவதூறாக மாற்றும் மனித மனநிலை குறித்து நாம் மிகவும் வருந்தவேண்டும். உண்மையில், இயக்கப்பண்பாட்டில் எந்த அளவிலும் பங்குபெறாதவர்களே, தன் சுயம் பற்றி மட்டுமே கவலை கொண்டோராக இருக்கின்றனர். சிறிது காலமேனும், இருபது பேர் அல்லது நூறுபேர் கொண்ட இயக்கத்தில் குழுவாகப்பணியாற்றும் போது கிடைக்கும் மனிதப்பக்குவம் குறிப்பிடத்தக்கது. அப்பொழுது தான் தெரியும், பொதுச்சமூகத்தின் தேவை முன்னால், அதன் பிரச்சனை முன்னால், ஒரு தனிமனிதன் அல்லது அவனின் படைப்பு அல்லது அவனின் செயல் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது அல்லது எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை என்பது. நிறைய 'பிரபலங்களைப்' பார்க்கிறேன். அவர்கள் தன்னளவில் மிகவும் புகழ்மிக்கவர்களாக இருக்கிறார்கள். ஆனால், சமூகவெளியில் சமூகத்தின் மாற்றத்திற்கு எந்த அளவிற்கு அவர்களின் சுயப்புகழ் வெளிச்சம் அல்லது பிரபல கிரீடம் உதவியாக இருக்கிறது என்று பார்க்கையில் அது மிகப்பெரிய கேள்விக்குறியே. சுய அதிகாரத்திற்கும் அங்கீகாரத்திற்கும் ஏங்குபவர்கள், தன் உடன் இயங்குபவர்கள் குறித்து அவதூறுகள் பதிவாகும் போது, மறைமுகமாகப் புன்னகைத்து அதை ஆதரிக்கும் மனநிலை, பொதுவெளியில் ஓர் அவலமாகப் பதிவாகிறது. அவர்கள் அடையாளத்தைப் பொதுவெளியில் இழிபுகழ் நிலைக்குத் தள்ளுகிறது. இதைவிடப் பெரிதாக, இயக்கங்களில் ஈடுபட்டுப் பெரிய பங்களிப்பையும் கடமையையும் ஆற்றிவிட்டு அமைதியாகவும் பண்பாகவும் இருப்பவர்கள் தாம், தம் செயலுக்கு ஏன், புகழுக்கே கூட ஒரு நிரந்தரத்தன்மையைக் கொடுக்கிறார்கள். தொடர்ந்து உற்சாகமாகப் பணியில் ஈடுபடுகிறார்கள். தமிழ் இலக்கியவெளியில், எந்த விமர்சனத்தை முன்வைத்தாலும் அது தன்னைத்தான் என்று எண்ணும் மனநிலை, அவர்கள் இன்னும் அந்த இருள் குகைக்குள்ளிருந்து வெளியே வரவில்லை என்பதன் அப்பட்டமான வெளிப்பாடு. உண்மையில், அந்த விமர்சனத்திற்கான தகுதியைத் தனக்குத் தானே கொடுத்துக்கொள்கிறார்கள். விமர்சனத்திற்கு அஞ்சுவோர், அவதூறை ஆதரிப்போர், அங்கீகாரங்களுக்கு ஏங்குவோர் கொஞ்ச காலமேனும், சமூக இயக்கங்களில் இணைந்து பணியாற்றுவது மிக மிக அவசியம் என்று தோன்றுகிறது. தன் சுயத்தைத் தானே எதிர்த்து நிற்க அரும்பெரும் துணிவு வேண்டும், இல்லையா!

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: