நம் குரல்

இந்தித்திணிப்பு குறித்து!







இந்தித்திணிப்பு, உடனே நினைத்த வேகத்தில் அவ்வளவு எளிதாக நம்மிடம் செல்லாது என்பது என் நம்பிக்கை. அந்த அளவிற்கு, பெரியார் நம் மொழித்தேரை வெகுதூரம் இழுத்து வந்திருக்கிறார். சமூகமயமாக்கியிருக்கிறார்.



ஆனால், பாடத்திட்டத்தின் வழியான அரசின் கட்டாயத்தால், நான்கைந்து வருடங்களில் ஊடகங்களும் இந்தியால் பீடிக்கப்பட்டு நிலைமை மாற வாய்ப்பிருக்கிறது.



மொழி உணர்வும், பற்றும் மட்டுமே மொழியைக் காக்கப் போதாது என்பதைக் கடந்த ஐம்பது வருட அரசியல் வழியாக நாம் புரிந்து கொள்ளமுடியும். சுயபாடம்.

இன்னும் சொல்லப்போனால், இப்பொழுது ஆங்கிலம் தான் நமக்கு மிகவும் அவசியப்படுகிறது. தமிழும் ஆங்கிலமும் இணைந்த இரு மொழிப்புலமை, தமிழின் இலக்கிய மாண்பையும் பண்பாட்டு மாண்பையும் உலக அளவில் கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.

அதுமட்டுமன்று, நம் இன இருப்பின் நியாயங்களையும் நம் மீதான ஒடுக்குமுறைகளையும், கலை இலக்கியச் செல்வங்களையும் நாம் ஒரு பகுத்தறிவுக்கூட்டம் என்பதையும் உலகுக்கு அறிவிக்க ஆங்கிலம் தேவைப்படுகிறது. 

அது இல்லாமல் தான் கடந்த கால சமூகநியாயத்தைப் பரவலாகக் கொண்டு செல்ல, நம்மால் இயலாமல் போனது.

தமிழின் இன்றைய அறிவுத்துறை சான்றோர்கள் பலர், ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கும் தேவையான தமிழ் அறத்தை நன்கு அறிந்து தேர்ந்தவர்கள். தமிழின் பழமையிலிருந்து புதுமைப்படுத்த வல்லவர்கள்.

இளைய தலைமுறை அவர்களின் ஆற்றலைப்புரிந்துகொள்வதற்கான சமூக வாய்ப்புகள் மிகக்குறைவு.

ஆங்கிலம் இன்மையாலும், இயல்பாகவே தமிழர் மீது காட்டப்படும் இன ஒடுக்குமுறையினாலும் அவர்களின் அறிவுப்புலம், எல்லை தாண்டி அறியப்படுவதில்லை. பயன்பாட்டுக்குரியது ஆகவில்லை.

மேலும், தமிழர்கள், இந்தியாவின் ஒரு மாநிலத்திற்குள் வரையறுக்கப்பட்ட ஒரு கூட்டமாக தம்மை நினையாமல் உலகின் வெவ்வேறு இடங்களில் சிதறிக்கிடக்கும் ஓர் இனமாகத் தன்னை உணரும் போது தான் தமிழ் நமக்கு எத்தகையதொரு தொடர்பு ஊடகமாக இருக்கக்கூடும் என்பது புரியக்கூடும்.

இல்லையெனில், நாம் வதியும் நிலப்பரப்பிலிருந்து நாம் விரட்டியடிக்கப்பட்டுக்கொண்டே இருப்போம்.

தமிழர் தத்துவம், மருத்துவம், தொல்லியல், இசை, உடல் அறம், இலக்கியம், வானவியல் உலோகவியல் கலைமுறைகள் மற்றும் இன்ன பிற அறிவியல் துறைகள் என நிறைய வகையிலான நம் மொழியின் அறிவுமுறைகளை, காலமும் அரசியலும் தின்னக்கொடுத்துவிட்டோம், அல்லது அவற்றை முற்றிலுமாக மறந்து விட்டோம்.

தனிப்பட்ட மனிதர்களின் உழைப்பும், அதே சமயம் குழுவாக இணைந்து பணியாற்றலும் என தமிழ் மொழியின் அறிவு மற்றும் கலைத்துறைகளை நாம் நவீனப்படுத்த இயலும்.

தமிழ் வெறும் மொழி மட்டுமே இல்லை. அறத்தைச் சிந்திப்பதற்கும் பயில்வதற்கும் பயிற்றுவிப்பதற்குமான ஒரு சிந்தனை மரபு, வாழ்வியல் யுத்தி. அறம் கூர் மொழி.

நாம், நம் பலத்தை உணர்ந்தால் மட்டுமே போதாது, அதை நிரூபிக்கவும் வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம்.

இதையெல்லாம் பொருட்படுத்தவில்லையெனில், நம்மீதான இன்னோர் இனப்படுகொலை திட்டமிடப்படும்.

குட்டி ரேவதி



கருத்துகள் இல்லை: