நம் குரல்

அழுகையற்ற மரணம்






அன்று மாலை, அந்த வீட்டு முன்னால் என்றும் காணாத வகையில் பத்து பேர் கூடியிருந்தார்கள்.

சிலர் வந்தார்கள், சிலர் போனார்கள். அங்கே நின்றவர்களும் கைபேசியைக் காதில் ஒட்டவைத்துக் கொண்டு நின்றார்கள். சத்தமே இல்லாமல் பேசினார்கள்.

அந்த நகரைக் காவல் காக்கும் காவல்காரர் அவர்களிடமிருந்து தள்ளி நின்று கொண்டிருந்தார். என்னவென்று கேட்டபொழுது, அந்த வீட்டில் இருந்த ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்றார்.

இரவு நடுநிசி வரையிலும் எவர் எவரோ வந்தார்கள், போனார்கள். என்றாலும் ஒரு சிலரே வந்தார்கள் போனார்கள். மனித நடமாட்டமாய் இல்லாமல், மளிகைக்கடைக்கு வருபவர் அளவே கூட்டமும், பதட்டமும்.

மறு நாள் காலை, வெளியூரிலிருந்து கூட்டமாய்  வந்து  இறங்கினார்கள். உறவினர்களாக இருக்கவேண்டும்.

வீட்டின் முன்னால் முந்தைய நாள் கண்டதைப் போலவே பத்து பேரே கூடியிருந்தார்கள். 

அவர் இறந்து போய், முழு இரவும் கடந்த பிறகும் எதிர்வீட்டுக்குக் கூடத் தெரியாமல் இருந்தது. கதவைத் தட்டி நான் தான் சொன்னேன்.

மதியவேளையில், இறந்தவரின் உடல் கழுவி, திருநீறு பூசி முற்றத்தில் கிடத்தப்பட்டிருந்தது. ஐம்பது வயதுக்குக் குறைவாகவே இருக்கும். அவரைச் சுற்றிலும் அடித்து அழுவார் என்றோ தள்ளி நின்று அழுவார் என்றோ எவருமே இல்லை.

உடலைத் தூக்கிச் செல்கையிலும் எந்தச் சந்தடிச்சத்தமும் இல்லை. என் கவனம் மாறியிருந்த வேளையில் இது நடந்திருந்தது.


ஆனால், அவரை நினைத்து அழும் வேளைகளும் நினைவுகளும் எவருக்கும் வாய்க்காமல் இருக்கும், இல்லாமல் போகும் என்று எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்.



குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: