நம் குரல்

அகத்திணை

ன்று கிருஷ்ணகிரியிலிருந்து கஜலெக்ஷ்மி எனும் கவிதை எழுதும் பெண் அழைத்தாள். எனக்கு எந்த ஊர் என்று கேட்டாள். ஏன் என்று கேட்டதற்கு கிருஷ்ணகிரியிலிருந்து கவிதை எழுத வரும் முதல் பெண்ணாக அவளே இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறாளாம். உறுதியான உற்சாகமான குரல். ஒன்பதாவது படித்திருக்கிறேன் என்று கூறினாள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது செடிகளுக்கும் மரங்களுக்கும் நீரூற்றிக்கொண்டிருக்கிறேன் என்றாள்.

காஃபிக்கும் சிகரெட்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
காஃ பி இரத்தத்தில் தோய்ந்து நீண்ட நேரத்திற்கு அது தனது உணர்ச்சித்தூண்டலை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் சிகரெட் நேராக தலைக்கேறி அங்கேயிருந்து நரம்புத் தூண்டலைச்செய்கிறது. அது நேரடியானதாகவும் மிகக் குறுகிய நேரத்திற்குமேயானதாகவும் இருப்பதால் மீண்டும் மீண்டும் அவர்கள் சிகரெட்டைத்தேடிச் செல்லவேண்டியிருக்கிறது. மேலும் அவர்கள் அதை நிறுத்திவிட முடிவெடுக்கும்போது கூட அவர்கள் விரல்கள் தளர்ந்து ஓர் எழுத்தாளன் தேடும் பேனாவைப் போல சிகரெட்டைத்தேடுகிறது.

மீசையை நீவிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் அந்த விநோதமான செயல் குறித்து கேள்வியெழுப்புகையில், ”என்ன, என்னைப்பார்த்தால் பொறாமையாக இருக்கிறதா?” என்று சொல்கிறான். நேரடியான அரசியலுக்கு இந்த பதில் கேள்வி இழுத்துச் சென்றது. அவனது மனோவெளியில் உலாவும், பெண்கள் குறித்த நூற்றுக்கணக்கான பொறாமையுணர்வுகளை சொல்லமுடியும். அவன் மூளை வெடித்துச் சிதறுவதை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது தானே?

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: